Freitag, 31. Dezember 2010

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு

இலங்கையின் யாழ் குடாநாட்டில் கடந்த ஒருமாதமாகக் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் வாழ்க்கை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகப் பலரும் கூறுகின்றார்கள்.  பல இடங்களிலும் இரவு வேளைகளில் கொள்ளைகள் இடம்பெற்று வருவதுடன் கடந்த மூன்றுவார காலப்பகுதியில் இந்துமதக் குருக்கள் ஒருவர், கல்வித்துறை அதிகாரி, ஒரு வியாபாரி என மூவர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தக் கொலைகள் யாரால் என்ன காரணத்திற்காக ஏன் செய்யப்படுகின்றது என தெரியாமல் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்ளாள் ஆணையாளராகிய சி.வி.கே.சிவஞானம் கூறுகின்றார். இதனால் தங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் அஞ்சியஞ்சி சீவிக்க வேண்டிய நிலைமை உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கொலைகள் கொள்ளைகள் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இராணுவத்தினரும் வீதிகளில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளார்கள்.

இருப்பினும் பெண்கள் நகைகள் அணிந்து வெளியில் செல்லமுடியாத நிலைமையும் வீடுகளில் அச்சத்துடனேயே இருக்க வேண்டியும் ஏற்பட்டிருப்பதாகக் குடும்பப் பெண்கள் தெரிவிக்கின்றார்கள்.

யாழ் குடாநாட்டில் தோன்றியிருக்கின்ற யுத்த காலத்தைப் போன்ற பதட்டநிலைமையைத் தணித்து அமைதிஏற்படுவதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக குற்றச்செயல்கள் நடைபெற்று வருவது கவலையளிப்பதாக உள்ளது என ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சருமான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen