Mittwoch, 10. November 2010

மெய்க்காப்பாளரைத் தாண்டாமல் தலைவரை ஒருபோதும் நெருங்கவே முடியாது.

முள்ளிவாய்க்கால் கொடூரத்தை உணர்வுள்ள உண்மைத் தமிழர்கள் ஒருவராலும் மறக்கவே முடியாது. அது முடிவல்ல, அடுத்த கட்ட உரிமைப்போருக்கானத் தொடக்கம் என்ற நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது இந்த சம்பவம்.



நான்காம் கட்ட ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழ் உயிர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார் டாக்டர் கமலினி. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கதிர்காமர்-ராஜம்மாள் தம்பதியரின் மகள்தான் கமலினி. யாழிலேயே மருத்துவப்படிப்பு படித்து, போர்ச் சூழலுக்கிடையிலும் தடைப்பட்ட படிப்பினைத் தொடர்ந்து டாக்டரான வர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய மருத்துவமனை களில், மனிதநேயத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார்.



தமிழகத்தின் சிவகங்கையிலிருந்து முந்தைய தலைமுறைகளில் ஈழத்திற்குச் சென்ற கருப்பையா, திரிகோணமலை வள்ளியம்மாளைத் திருமணம் செய்துகொண்டு மன்னார் மாவட்டம் அடம்பனில் வசித்து வந்தார். அங்கு 60 ஏக்கர் நிலம் இவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இந்தத் தம்பதிக்கு 11 குழந்தைகள். அவர்களில் நான்காவதாகப் பிறந்தவர்தான் அசோகன். 1982-ல் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். அசோகனுக்கு இயக்கத்தில் லட்சுமணன் எனப் பெயர். விடுதலை வேட்கையும் வீரமும் அவரைப் படிப் படியாக உயர்த்தி, புலிகள் இயக்கத்தின் லெஃப்டினென்ட் கர்னலாக்கி, இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது.



லட்சுமணனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஆசைப்பட்டதை இயக்கம் அறிந்தது. டாக்டர் கமலினியை லட்சுமணனுக்கு கல்யாணம் செய்துவைக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட புலிகளின் காவல்துறைப் பிரிவுத் தலைவராக இருந்த (பின்னாளில் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர்) நடேசன் இதனை பிரபாகரனிடம் தெரிவித்து, சம்மதம் பெற்றார். லட்சுமணனுக்கும் கமலினிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு கோமகள், யதுவர்மன், இசைவிழி என மூன்று குழந்தைகள்.



யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பிரபாகரனின் மெய்க்காப்பாளரான லட்சுமணன் தனது தலைவரின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுவந்தார். புலிகள் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில் லட்சுமணன் குடும்பத்தினரும் கமலினி பெற்றோரும் அவர்களுடனேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். கருப்பையா தனது லாரி, டிராக்டர் அனைத்தையும் இயக்கத்திற்காகவும் இடம்பெயரும் ஈழமக்களுக்காகவும் பயன்படுத்தினார். இந்தப் பயணத்தின்போது உறவினர்கள் ஒவ்வொருவராக, சிங்கள அரசின் தாக்குதலில் பலியாகிக்கொண்டே இருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் மருத்துவ மனையில் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கமலினி, ஒரு மதியப் பொழுதில் சாப்பிடு வதற்காக டிபன் பாக்ஸை திறந்த நேரத்தில், மருத்துவமனை மீது சிங்கள ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில், கமலினியின் தலையில் நேராக குண்டு பாய்ந்து, அந்த இடத்திலேயே சிதறி இறந்தார். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட செய்தி அப்போது உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரையும் அதிரவைத்தது. இந்தக் கொடூரத்திற்குப்பின், குழந்தைகளையும் உறவினர்களையும் பத்திரமாக வெளியே அனுப்பிவிடும்படி லட்சுமணனிடம் பிரபாகரன் தெரிவித்ததையடுத்து, தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி முகாமிற்கு ஏற்கனவே வந்துவிட்ட தனது தம்பி தாடி கணேசன், அக்கா வசந்தகுமாரி ஆகியோ ரிடம் அவர்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார் லட்சுமணன்.


யுத்தத்தின் கடைசி கட்டத்தில், முள்ளிவாய்க்காலிலிருந்து சிங்கள ராணுவப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களோடு லட்சுமணன்-கமலினி குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து வன்னி முகாமுக்கு வந்து, அங்கிருந்து படகு மூலமாக கொழும்பு அடைந்து, சிங்கள அதிகாரிகளை சரிக்கட்டி, விமானம் மூலம் தமிழகம் வந்தனர். கமலினி பெற்றோரை விருகம்பாக்கத்தில் வீடு பிடித்து தங்க வைத்தார் தாடி கணேசன். அவருடைய பெற்றோர் கும்மிடிப்பூண்டியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் 3 குழந்தைகளும் யாருடைய பராமரிப்பில் இருப்பது என்பதில் இரு குடும்பத்தாருக்கும் சர்ச்சை ஏற்பட்டது.


கமலினியின் சகோதரர் கிருத்திஹரன் பிரான்ஸ் நாட்டிலிருந்து விருகம்பாக்கம் வந்தார். குழந்தைகளை கனடா, லண்டன், பிரான்ஸ் இங் குள்ள நண்பர்களிடம் அனுப்பி படிப்பு, பராமரிப்பு ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளப்போவதாகத் தெரிவிக்க, லட்சுமணனின் பெற்றோர் உடன்படவில்லை. மூன்று குழந்தைகளில், இசைவிழியை மட்டும் தங்களிடம் இருக்குமாறு பாசப்போராட்டம் நடத்தினர். கிருத்திஹரனோ அம்பத்தூர் தி.மு.க கவுன்சிலர் சுப்பையா துணையோடு போய், இசைவிழியைத் தூக்கிவர, இந்த விவகாரம் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெயக்குமாரிடம் சென்றது. அவரது சமாதானத்தின் பேரில் இசைவிழி, லட்சுமணன் குடும்பத்தினரிடம் சேர்க்கப்படுகிறாள். ஆனால், அதை மீறி, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ரங்கநாதனின் உதவியையும் நாடிய கிருத்திஹரன், அந்த ஆதரவில் லட்சுமணனின் சகோதரி வசந்தகுமாரி வீட்டுக்குச் சென்று அவர் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கி வருகிறார். அத்துடன், லட்சுமணன் பெற்றோர், சகோதரர், சகோதரிகள் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கமலினி குடும்பத்தார் தரப்பிலிருந்து லட்சுமணன் குடும்பத்தார் மீது புகாரும் கொடுக்கப்படுகிறது.



இதனிடையே, லட்சுமணனின் பெற்றோருக்கு விடுதலைச்சிறுத்தைகள் பகுதிச் செயலாளர் முத்து முகமது உதவியாக இருக்கிறார் என்ற தகவல் வர, இதுபற்றி திருமாவளவனிடம் ரங்கநாதன் பேசியுள்ளார். பெற்றோர் துணையில்லாத குழந்தைகளின் நிலைமை அரசியல்-போலீஸ் என திசைமாறிக் கொண்டிருந்த நேரத்தில்தான், இருப்பிடத்தை வெளிப்படுத்தாமல் இருக்கும் லட்சுமணனுக்கு இந்தத் தகவல் போய்ச் சேருகிறது. அவர் தனது நண்பர்கள் மூலமாக, இசைவிழியை மட்டும் தனது குடும்பத்தினரின் பராமரிப்பில் விடுமாறும், மற்ற இரு குழந்தைகளும் கமலினி பெற்றோரிடமே இருக்கட்டும் எனத் தெரிவித்திருப்பதையடுத்து, இது குறித்தான பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் போலீஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.



லட்சுமணன் பெற்றோரும் சகோதர-சகோதரி களும் நம்மிடம், ""இசைவிழியை மட்டும் நாங்கள் வளர்க்கிறோம் என்றுதான் கேட்கிறோம். லட்சுமணனும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நினைக்கிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன். கமலினியின் பெற்றோரான கதிர்காமர்-ராஜம்மாள் இருவருக்கும் உதவியாக இருந்துவரும் பத்மாகவி என்பவர், ""இசைவிழியை அவர்களிடம் கொடுக்கும்படி லட்சுமணன் சொன்னதாக அவர்கள்தான் சொல்கிறார்கள். லட்சுமணனே இதை எங்களிடம் தெரிவிக்கட்டும். நாங்கள் கொடுக்கத் தயார். இல்லையென்றால், 3 பிள்ளைகளுக்கும் வெளிநாட்டு நண்பர்கள் மூலம் நல்ல கல்வியும் எதிர்காலமும் கிடைக்க ஏற்பாடு செய்வோம்'' என்றார் நம்மிடம்.குழந்தை விவகாரத்தில் தலையிட்ட அரசியல் பிரமுகரான ரங்கநாதன் எம்.எல்.ஏ.வைத் தொடர்பு கொண்டபோது, ""இந்தப் பிரச்சினையில் விடுதலை சிறுத்தைக் கட்சிக்காரர்கள் தலையிடுகிறார்கள் என்றதும் நான் இதுபற்றி திருமாவிடம் பேசினேன். அவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்போம்னு சொன்னார்'' என்றார். திருமாவளவன் எம்.பி.யிடம் இது பற்றிக் கேட்டோம். கமலினியின் தியாகம் எப்படிப்பட்டது என்பது உணர்வுள்ளோர் அனைவருக்கும் தெரியும். அவரது குழந்தையைக் கடத்திவிட்டார்கள் என்ற செய்தி வந்ததால், எங்கள் கட்சிப் பிரமுகர்கள் சிலர் உணர்வுப் பூர்வமாக இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள். எனக்கு விவரம் தெரியவந்ததும், வன்னிஅரசு போன்ற எங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலமாக இந்தப் பிரச்சினையைக் கவனிக்கச் சொன்னேன். ஈழக் குழந்தைகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதனால் சட்டத்திற்குட்பட்டு, குடும்பத்தினர் பேசி முடிவெடுக்கட்டும் எனத் தீர்மானித்துவிட்டோம்'' என்றார் தெளிவாக.




மறைவான இடத்திலிருந்து லட்சுமணன் தெரிவித்துள்ள ஆலோசனையின்படி, குழந்தைகள் விஷயத்தில் முடிவெடுக்க குடும்பத்தினருக்குள் பேச்சு நடைபெற்றுவரும் நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருமே ஒரே குரலில் சொல்லும் தகவல் ஒன்றுதான்.



""லட்சுமணன் பேசினார் என்ற தகவல் எங்கள் குழந்தைகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஈழத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக்கும் புதிய வெளிச்சத்தைக் காட்டியுள்ளது. மெய்காப்பாளராக இருந்த லட்சுமணன் பத்திரமாக இருக்கிறார் என்றால், எங்கள் தலைவர் பிரபாகரனும் பாதுகாப்பாகவே இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தலைவர் பற்றி ராஜபக்சே அரசு எவ்வளவுதான் புரளிகளையும் வதந்திகளையும் கிளப்பினாலும், இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். மெய்க்காப்பாளரைத் தாண்டாமல் தலைவரை ஒருபோதும் நெருங்கவே முடியாது. நந்திக்கடல் பகுதியில் தலைவரோடு மெய்க்காப் பாளரும் முடிவெய்தினார் என்றுதான் ராஜபக்சே ராணுவம் சொன்னது. ஆனால், மெய்க்காப்பாளர் பத்திரமாக இருக்கிறார் என்ற உண்மை இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற உண்மை நாளை உலகுக்குத் தெரிய வரும்'' என்கிறார்கள் நம்பிக்கையுடன்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen