போரின் போது சரணடைந்த அறுநூற்றைம்பதற்கும் மேற்பட்ட போராளிகள் வெலிக்கந்தை தடுப்பு முகாமில் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பிலான அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாது,
வெலிக்கந்தையில் இருந்து 35கிலோமீற்றர் தொலைவில் முன்னாள் போராளிகளைத் தடுத்து வைத்திருக்கின்ற தடுப்பு முகாம் ஒன்று உள்ளது. குறித்த முகாமில் 800ற்கும் மேற்பட்ட போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மிகவும் உடல்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய 650ற்கும் மேற்பட்டவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள பண்ணை எனப்படுகின்ற காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
காலை 6.30மணி முதல் மாலை 6.00மணிவரை 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணிகளில் தொழிலாளிகளாக பணியாற்ற போராளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எருமை மேய்த்தல், வரம்பு வெட்டுதல், பன்றிகளுக்கு உணவு வைத்தல் உட்பட்ட கடுமையான வேலைகளை வெயில், மழை பார்க்காமல் செய்ய நிர்பந்திக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்கின்ற போதிலும், செருப்புக்கள் அறுந்தும், கைகள் காய்த்தும் காயம் ஏற்படுகின்ற போதிலும் அது தொடர்பில் கேட்டால் அடி உதையே மிஞ்சுவதாக குறித்த போராளிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உடல் நிலை சரியில்லை எனக் கூறினாலோ, அவர்கள் நட்ட பயிர்களில் சோளம் போன்ற உணவுப் பொருட்களை பறித்து உட்கொண்டாலோ அவர்கள் முளந்தாளிடப்பட்டு கடுமையாகத் தாக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முன்னூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதற்காக மாடுகள் போல உழைக்கும் போராளிகள் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை என்றும் பெறப்படும் காய்கறிகளோ ஏனைய உணவுகளோ நாள் தோறும் பெருமளவில் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த பதினொரு மாதங்களாக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் விவசாய நடவடிக்கைகளில் அனுபவம் இல்லாத முன்னாள் போராளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாரத்திற்கு ஒரு தடைவை குறிப்பாக செவ்வாய்கிழமைகளில் மாத்திரமே மருத்துவ நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இடைப்பட்ட நாட்களில் நோய்த் தாக்கம் ஏற்பட்டால் பாரிய சிரமங்களை அவர்கள் அனுபவிப்பதாக அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் தமது பெற்றோரிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த வாரம் நான்கு புள்டோசர்களின் துணையுடன் வெலிக்கந்தை காட்டுப் பகுதி அழிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றிலும் விவசாயச் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
RSS Feed
Twitter



Sonntag, November 21, 2010
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen