Mittwoch, 17. November 2010

மாவீரர் நினைவு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்கவுள்ள இந்தியா


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது பிறந்தநாள் நவம்பர் 26 ஆகும்.

பிரபாகரன் மரணித்தபின்னர் வரும் அவரது இரண்டாவது பிறந்தநாள் இது.

புலம்பெயர்வாழ் தமிழர்களில் குறித்த சில தரப்பினர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள்.

26 நவம்பர் 2009 அன்று பிரபாகரன் மீண்டும் வருவார் என அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

இந்த ஆண்டும்கூட மாவீரர்நாள் உரையினை ஆற்றுவதற்காக அவர் மறைந்திருக்கும் இடத்திலிருந்து நிச்சயம் வருவார் என இவர்கள் நம்புகிறார்கள்.

குறித்த இந்தத் நாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் வெளியே வருகிறாரோ இல்லையோ, பிரபாகரனது பிறந்த நாளன்று இந்தியாவினது வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா சிறிலங்காவிற்கு வரவிருக்கிறார்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் 'டெயிலிமிரர்' ஆங்கில ஊடகத்தின் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபுல் யோசப் பெர்ணாண்டோவால் எழுதப்பட்ட இப்பத்தியை மொழியாகம் செய்தவர் தி.வண்ணமதி.

அப்பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

விடுதலைப் புலிகள் மாவீரர் வாரத்தினை கடைப்பிடிக்கும் காலப்பகுதியில், அதுவும் பிரபாகரனது பிறந்த நாளன்று அமைச்சர் கிருஸ்ணா ஏன் வருகிறார் என்பது எங்கள் அனைவருக்குமே ஒரு புதிராகவே இருக்கிறது.

எல்லாவற்றையும் விட மேலாக விடுதலைப் புலிகளமைப்புக்கு முக்கியமான இந்தக் காலப்பகுதியில் அதுவும் பிரபாரகனது இதயபூமியாம் யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா தங்களது துணைத் தூதரகத்தினைத் திறக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது துணைத் தூதரகத்தினை இந்தியா அமைப்பதற்கு அவர்களைத் தூண்டிய விநோதமான சில காரணிகள் உண்டு.

சிறிலங்காவினது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, தொடர்பாக யாழ்ப்பாணத்து மக்களுக்கு கிருஸ்ணா தெளிவுபடுத்தவுள்ளாராம் எனக் கூறப்படுகிறது.

குடாநாட்டில் இந்தியத் துணைத் தூதரகத்தினைத் திறந்துவைத்தபின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இலங்கையினது இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் வெளிப்படுத்துவாரா?

குறித்த காலப்பகுதியில் பிரபாகரன் ஆற்றும் மாவீரர் நாள் உரை பற்றி கிருஸ்ணா ஏதும் குறிப்பிடுவாரா?

வருடத்தில் ஒருமுறைதான் பிரபாகரன் மக்களுக்கு உரையாற்றுவார். அவரது பிறந்த நாளிற்கு மறுநாளான மாவீரர் நாளன்று பிரபாகரன் இந்த உரையினை ஆற்றுவது வழக்கம்.

இந்த உரையில் ஈழப்போராட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாடு மற்றும் பேராட்டம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விளக்கும் கொள்கை விளக்க உரையாக இது அமையும். பிரபாரகனது உரையினைக் கூர்ந்து அவதானிக்கும் மக்கள் அவரது எண்ணப்போக்கினை விளங்கிக்கொள்வர்.

சிறிலங்காவிற்கு வருகைதரும் இந்திய இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கைத்தீவினது இனப்பிரச்சினை விடயத்தில் தங்களது இன்றைய நிலைப்பாடு
என்ன என்பதை வெளிப்படுத்துவாரெனில் அது இந்தியாவின் சிந்தனைப்போக்கினை உய்த்தறிவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.

சிறிலங்காவினது அதிபர் ராஜபக்ச இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம் சிறிலங்கா தெடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டினை அனுமானித்துக்கொள்வார். ஆனால் இதுபோன்ற வாய்ப்பு சிறிலங்காவில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்குக் கிட்டுவதில்லை.

அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் புதுடில்லிக்குச்சென்றபோது மகிந்தவினைச் சந்தித்து உரையாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காலம் தாழ்த்தாது நாட்டினது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் உண்மையில் உரையாடப்பட்ட விடயங்கள் என்ன என்பது அவர்களுக்கு மாத்திரம்தான் தெரியும்.

இலங்கைத் தீவில் பலபத்தாண்டுகளாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தினை மகிந்தவிற்கு எடுத்து விளக்கியதன் ஊடாக உடனடிப் பலனேதும் கிடைக்காத நிலையில், தங்களது நிலைப்பாடு என்ன என்பதை யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தியா தமிழர்களுக்கு விளக்கப் போகிறதோ என்ற ஊகம் பரவலாக வெளியிடப்படுகிறது.

தனது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு இந்தியா செயற்படுவது அசியமானது.

இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக மகிந்த அரசாங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தும் வகையில் தான் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதை இந்தியா உறுதிப்படுத்தவேண்டும்.

இந்தியாவின் அயல்நாடொன்றில் சனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் சிறுபான்மையினரது உரிமைகள் என்பன மழுங்கடிக்கப்படும்போது அவற்றுக்கு எதிராக இந்தியா குரல் கொடுப்பதானது தொடர்புடைய நாடுகளில் இறையாண்மையில் அது தலையிடுவதாக ஒருபோதும் அமையாது என அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

இங்கு அதிபர் ஒபாமா சிறிலங்கா என குறிப்பிட்டுக் கூறாதபோதும், சிறிலங்கா போன்ற நாடுகளையே மனதிற்கொண்டே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார் என்பது வெளிப்படை.

அயல் நாடுகளில் சனநாயகப் பண்புகள், மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரது உரிமைகள் என்பன மழுங்கடிக்கப்படும் போது அதனைப் பார்த்துக்கொண்டு இந்தியா மௌனமாக இருப்பதை அனுமதிக்கமுடியாது என ஒபாமா தொடர்ந்து தெரிவித்தார்.

இவ்வாறு தனது அயல் நாடுகளில் உரிமைகள் மீறப்படும் போது தட்டிக்கேட்கவேண்டியது உலகின் பெரிய சனநாயக நாடான இந்தியாவின் பொறுப்பும் கடமையும் ஆகும்
என்றார் அவர்.

உலக வல்லரசான அமெரிக்காவினது இந்தக் கருத்துக்களை மனதில் நிறுத்தியவாறுதான் இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை வலிந்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தபோது தனது பிராந்தியத்தின் பிரச்சினையினைத் தானே தீர்த்துவைப்பேன் எனக்கூறி போர்நிறுத்தம் ஏற்படாமல் தடுத்தது இந்தியாதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இந்த வாதத்தினை அமெரிக்கா அப்போது தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் குறித்த இந்த விடயத்தினை இந்தியா சரியாகக் கையாளவில்லை என்பதை போர் முடிவுக்கு வந்து ஆண்டொன்று கடந்துவிட்ட நிலையிலும் காலங்கடந்தே அமெரிக்கா விளங்கிக்கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் கொண்டுவந்த 18வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் சாதகபாதகங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையினை அமெரிக்கா இந்தியாவிடமிருந்து கோரியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

குறிப்பிட்ட இந்தச் சீர்திருத்தமானது நாட்டினது சனநாயகத்தினை மழுங்கடிப்பதாகவே அமைகிறது என்பது நன்கு தெரிந்த பின்னரும் கூட இந்தியா மௌனம் காத்தமையினாலேயே அமெரிக்கா இதுபோன்றதொரு அறிக்கையினைப் புதுடில்லியிடமிருந்து கோரியிருக்கக்கூடும்.

தான்சார்ந்த பிராந்தியத்தில் சிறிலங்கா அமைந்திருப்பதால் அதனுடன் தொடர்புடைய விடயங்களைத் தான் பார்த்துக்கொள்வதாக ஐக்கிய அமெரிக்காவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் இந்தியா முன்னர் உறுதிமொழி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருப்பினும், தான் வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கும் இந்தியா தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதாகத் தெரிகிறது.

எல்லாவற்றையும் விட மேலாக சீனா சிறிலங்காவிடம் தனது நட்புக்கரத்தினை நீட்டுவதானது இந்தியாவிற்குத் தீங்கிழைப்பதாகவே அமையும்.

இந்தப் புறநிலையில்தான் சிறிலங்காவினது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்றும் அங்கு சனநாயகம் நிலைபெறவேண்டும் என்றும் அமெரிக்கா காத்திரமான
அழுத்தத்தினைப் பிரயோகிக்கிறது.

"இந்த விடயத்தினைத் தீர்க்கும் வகையில் நீங்கள் செயலாற்றாவிட்டால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டினை எடுக்க நேரும்".

சிறிலங்காவிற்கு பயணம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா குறித்த இந்தக் கருத்தினை சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவிடம் முன்வைக்குமிடத்து, மகிந்த எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கப்போகிறார் என சீனா நிச்சயம் அவரைக் கேட்கும்.

ஏனெனில் தற்போதைய நிலைமையில், சீனாவினைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவினால் எந்தவகையான செயற்பாடுகளிலும் ஈடுபடமுடியாது.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 1 Kommentare:

    Anonym hat gesagt…

    கட்டுரையாளருக்கு ஏதாவது எழுதி உமது வலைப்பூவை நிரப்ப வேண்டும எனில் இருக்கவே இருக்கிறது நிறைய விடயங்கள். வி.புலிகளின் ஆதரவாளர்கள் போல காட்டிக் கொண்டு விஷவித்துக்களை மனங்களில் பதிக்க வேண்டாம். தலைவர் மரணம், முன்னாள் தலைவர் இவைகள் என்ன வார்த்தைகள்.மேதகு பிரபாகரன் முன்னாள் தலைவர் எனில் இந்நாள் தலைவர் யார்? எழுதும் போது யோசித்து எழுதுங்கள். அல்லது எழுதியவற்றை படித்துப் பார்த்துவிட்டு எழுதுங்கள். உங்களைப் போன்றவர்ளினால் தான் எமக்கு இந்த இழிநிலை. இனியாவது தலைவரின் மரணத்தைப் பற்றயோ அல்லது தலைமை பற்றியோ எழுதும் போது கவனமாக எழுதுங்கள். ஏதாவது எலும்புத் துண்டங்கள் கிடைக்குமா என பார்த்துக் கொண்டு வக்கிர புத்தியை காட்டாதீர்கள். அவமானத் தமிழர்கள்.

    Kommentar veröffentlichen