உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. உலகக் கோப்பையை கைப்பற்ற போவது ஸ்பெயின் அணியா அல்லது நெதர்லாந்து அணியா என ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என சிக்கலான கேள்விகளுக்கு ஆருடம் மூலம் விடை காணும் போக்கு அதிகரித்து வருகிறது.
ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ் கால்பந்து போட்டிகளில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிகுந்த போட்டிகளில் எந்த அணி ஜெயிக்கும் என்ற கணிப்பினை இதுவரை மிகச் சரியாக கூறியுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன.
அரை இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் கணித்தது. அதற்கு ஜெர்மனி ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெர்மனியை சேர்ந்த ஆக்டோபஸ் தனது தாய் நாடான ஜெர்மனிக்கு துரோகம் செய்து விட்டதாக கடுமையான குற்றசாட்டு எழுந்தது. ஆக்டோபசுக்கு கொலை மிரட்டல் வேறு விடுக்கப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளி வந்தது. உலகக் கோப்பை யை ஸ்பெயின் அணி கைப்பற்றும் என ஆக்டோபஸ் கூறியுள்ளது.
ஆனால் நெதர்லாந்துக்கு தான் உலக கோப்பை என சிங்கப்பூரை சேர்ந்த கிளி ஆருடம் கூறியுள்ளது. அது கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியை சேர்ந்த கிளியாகும். ஆம் அது ஒரு தமிழ் கிளியாகும் கிளியின் பெயர் மணி
மணியின் கணிப்பு இதுவரை பொய்த்ததில்லை என சிங்கபூர் வட்டாரத் தகவல்கள் தெர்விக்கின்றன. மணியோ உலகக்கோப்பை நெதர்லாந்துக்குத் தான் என சொல்கிறது.
ஆருடங்களை நம்பாதவர்கள்கூட இதை வேடிக்கையாக நகைச்சுவைக்காக உரையாடி மகிழ்கிறார்கள்.
இப்போது கால்பந்து ரசிகர்கள் இடையே இரண்டு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்பதோடு பால் சொல்வது நடக்கப்போகிறதா மணி சொல்வது நடக்குமா என்பதுதான் அது.
இந்தியர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரில் மணி ஆதரவாளர்களும் ஐரோப்பாவில் பால் ஆதரவாளர்களும் காத்திருக்கிறார்கள். வெல்லப்போவது ஸ்பெயின் அணியா? நெதர்லாந்து அணியா? மணியா? பாலா? நாளை தெரிந்து விடும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen