இலங்கை தூதரகத்தை மூடக்கோரி தடையை மீறிச் சென்ற வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதை கண்டித்து சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை அரசையும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயையும் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வைகோ, இலங்கை பற்றி விமர்சிக்க கூடாதாம், சீமான் பேசியது தேசதுரோகமா? அடக்குமுறையை ஏவி கைது செய்ததன் மூலம், தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது. இந்தியாவை பற்றி தான் விமர்சிக்க கூடாது என்றார்கள். இப்போது இலங்கையை பற்றியும் விமர்சிக்க கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள இலங்கைக்கு சென்று சிங்களர்களை எதிர்த்து போராடும் காலம் வரும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தூதரகத்தை சென்னையை விட்டு வெளியேற்று, சிங்கள தூதரகத்தை விரட்டியடிப்போம், என்ற கோஷங்களும், இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. சோனியாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டம் நடந்த போது, அதில் சிலர் ராஜபக்சே கொடும்பாவி எரித்தனர். போலீசார் அணைக்க முயன்றனர். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்து நின்றதால் அதை அணைக்க முடியவில்லை. சோனியாவின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவமரியாதை செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் இலங்கை தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். போலீசார் தடுத்தும் யாரும் நிற்கவில்லை. எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் மற்றும் 40 பெண்கள் உள்ளிட்ட 282 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,501(I),718 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen