Dienstag, 13. Juli 2010

கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம்

விடுதலைப் புலிகளின் தலைநகரமாக செயற்பட்டு வந்த கிளிநொச்சி நகரில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமையன்று நடைபெறுகிறது.


அதிபர் மகிந்த ராஜபக்ஷ் தலைமையிலான இந்த கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீள் கட்டுமானப் பணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.



விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வந்த கிளிநொச்சி நகரம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.



போர் முடிந்த பல மாதங்கள் கடந்த பிறகு கிளிநொச்சிப் பகுதியில் மீள் குடியேற்றம் துவங்கியது.



வீண் செலவு



இந்நிலையில் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவது வீண் செலவு என்று எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார். இது போன்ற விடயங்கள் தமது உறவினர்கள் எங்குள்ளனர் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்கு எரிச்சலைத்தான் தரும் என்று தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.



இந்த விமர்சனங்களை ஊடக அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல நிராகரித்துள்ளார்.



சமீபத்தில் பிரம்மாண்ட போர் நினைவுச் சின்னம் ஒன்றை அரசு கிளிநொச்சியில் நிர்மாணித்தது. படை முகாம் ஒன்றையும் அது அங்கு அமைத்துள்ளது. இருந்தும் அந்தப் பகுதிகளுக்கு சுதந்திரமாக சென்றுவர ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.



இலங்கையின் வன்னிப் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப் படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகின்றனர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen