Samstag, 15. Mai 2010

தாயாய் அணைத்தவன் -கண்மணி


கடைசியில்
எமது தாயகம்
கரம் நீட்டி அழைத்தது.
பகைவனின் சுயநலம்
அம்மணமாய் நின்றது.
பசுமையாய் புல்வெளி
பாதை அமைக்கும்.
பாடும் புள்ளினம்
வாழ்த்து இசைக்கும்.
சௌந்தரிய மலர்கள்
செறிந்து மகிழும்.
குளிரூட்டும் அருவி
எம்மை குளிப்பாட்டி
மகிழும்.

பிணமாய் புதைத்தவன்
இன்று பிணமாய்
சரிந்தான்.
நாம் பிணமாய்
விழுந்தோம்.
விடுதலை என்பது
எமக்குள் எரிந்தது.
எதிரியை அதுவே
எரித்து போட்டது.
எதிரிக்கு தெரியுமா
எமது ஆற்றல்.
அவனுக்குத் தெரியாது
நாங்கள் புதைத்த
இடத்திலிருந்து
விளைந்துவிடுவோம் என.

 ஆதிக்க கரங்கள்
எங்கள் குருதி குடித்தது.
ஆகாய விமானங்கள்
எங்களின்
உயிரை எடுத்தது.
வேட்டு சத்தத்தில்
நாங்கள் சங்கீதம்
கேட்டோம்.
வெடியின் நாதத்தில்
நாங்கள் விடியலை
உணர்ந்தோம்.
எம் தலைவனின்
மடியில் தலை வைத்து
விழுந்தோம்.
அவர் வருடலில்
எழுந்து களத்திற்குள்
புகுந்தோம்.

தாயாய் அணைத்தவன்,
சேயாய் அழுதவன்,

தோழனாய் நின்றவன்,
எமது தோளினாய் 
மாறியவன்.
அடக்குமுறைக்கு 
அடங்க மறுக்க
ஆதி முதல் பாடம் 
சொன்னவன்.
எம் தாயகம் காக்க 
தளராமல் உழைக்க 
தம்மையே அளித்து
தனித்து நின்றான்.
 
இந்தியம் என்ன?
சிங்களம் என்ன?
அவன் சிரிப்புக்கு முன்னால்
சிதறிப்போகும்.
அவன் சொல்லுக்கு முன்னால்
பதறி நிற்கும்.
உலகைகூட 
ஒருவிரல் கொண்டு
சுழற்றிப்பார்க்கும்
ஆசை கொண்டவன்.
தம் நினைவில்கூட
பிறர் மண் தீண்டா
மனதை கொண்டவன்.
 
எமது நிலம்தான்
அவனின் ஆசை.
அதுவும்கூட
நிரந்தரமாக எம்மினம் ஆள
தொடர்ந்திட வேண்டும்.
உலகத் தமிழர் 
ஒருங்கே எழுந்தால்
பகைவர் கூட்டம்
பொடிபொடியாகும்.
துரோகம் செய்யும்
சிறு மதியாளர்
சிதறிப்போகும், 
தூள்தூளாகும்.
 
புறப்படும் காலம்
நாம் புறப்படும் காலம்.
காலம் நேரம் 
பார்ப்பதற்கில்லை.
உடனே வினை செய்
தாயகம் மீட்க.
தயங்காமல் வழி செய்
தலைவன் இருக்கிறான்
தளர்வுற வேண்டாம்.
தாயகம் மீட்போம்
நாம் மகிழ்வோடு வாழ.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen