Montag, 1. März 2010

தாயக மகிழ்ச்சிக்காய் துயர் சுமப்போம் -கண்மணி

தமிழினத்திற்கென்று ஒரு சிறப்பான குணம் உண்டு. அது அடங்க மறுப்பது. எந்த நிலையிலும் தம்மை ஒடுக்கிக்கொள்ள தமிழினம் விரும்பியது கிடையாது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இந்த ஒடுக்குமுறையின் வலி இப்பொழுது புரிந்திருக்கும். அவர்கள் தம்மை சிலிர்த்தெழும் மனநிலைக்கு உள்ளாக்கிக் கொள்ளும்போது, எவ்வித கடும் தன்மை வாய்ந்த அடக்குமுறையானாலும், அவை உடைத்தெறியப்படும்.




உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மக்கள் எல்லோரும் ஒருநாள் எதிர்த்து நிற்பார்கள் என்பதற்கான அடையாளங்கள், ஆவணங்கள், பதிவுகள் இன்னும் பக்கம் பக்கமாய் வரலாற்றிலே வரையப்பட்டிருக்கிறது. எது தேவையோ, அந்த தேவைக்காக தம்மை இழக்க, ஒடுக்கப்பட்ட இனம் விழித்தெழும் என்பதை உலகெங்கும் வாழும் பல்வேறு நாடுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன.



நடந்து முடிந்த கோரமான ஒரு முடிவை பார்த்து இனிமேல் தமிழீழ குடியரசு அமைவதற்கான சாத்திய கூறுகள் உண்டா? அதற்கான வாய்ப்புகளை இனி எவ்வாறு பெறப்போகிறார்கள்? அது நிகழுமா? என்பதான விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் காலம், தாம் இயங்கிக் கொண்டே இந்த மாந்த குலத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அப்படி காலமும் நாட்களும் இயங்குவதையே நாம் வரலாறு என்று கூறுகிறோம்.

]

ஞானி மார்க்ஸ் சொல்வதைப் போல "வர்க்கப்போராட்டத்தின் விளைவே வரலாறு". அந்த அடிப்படையில் நடந்து முடிந்த ஒரு பெரும் போராட்டம் தொடரின் முனைப்பில்தான் இருக்கிறது, என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பலமுறை நாம் சொல்வதைப் போல இயக்கம் என்பது முற்றுபெறுவதல்ல. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன வரலாறாக, தமிழீழ வரலாறு இல்லை. அது தமது அடுத்தக்கட்ட நகர்விற்காக தமது இயக்கத்தை பாதை மாற்றிய நிகழ்வு. எப்போதும் ஒரே இலக்கில் பயணிப்பது போர் முறையில் பயன்தராது.



ஆகவே எதிர்மறையை சில நேரங்களில் கையாள வேண்டிய கட்டாயம் போராளிக் குழுக்களுக்கும் உண்டு, போராட்டக் குழுக்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையிலேயே முள்ளி வாய்க்கால் என்பது ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல் ஒரு அரைப்புள்ளியாக காட்சி தருகிறது. ஒரு தொடருக்கு அரைப்புள்ளி என்பது அடுத்து துவங்க இருப்பதின் அடையாளம் என்பதை நாம் மறந்துவிட முடியாது, மறுத்துரைக்க முடியாது. உலக நாடுகளில் பல்வேறு ஆதாரங்கள் குடியரசு தன்மைக்கான அடித்தளங்களை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.



ஆப்பிரிக்கா நாடான டெரியா என்னும் நாட்டில் விடுதலைப் போராட்டம் மிகக் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டது. அதோடு டெரியா போராளிக்குழு ஒழிந்தது, இனி எந்த நிலையிலும் அந்த நாட்டின் விடுதலைப் போராளிகளுக்கு தீர்வே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது பத்து ஆண்டுகள் கழித்து டெரியா தனிக்குடியரசாக பட்டொளி வீசியது.அதேப் போன்று தான் இந்தோனேசியால் இருந்து கிழக்கு தைமூர் பிரியும்போது நிகழ்ந்த சிக்கல்கள், வரலாறு வாசித்த அனைவருக்கும் தெரியும். கிழக்கு தைமூர் சந்தித்த சிக்கல்கள், பிரச்சனைகள் ஏராளமாக இருந்தது.



ஆனால் இன்று மிகவும் மகிழ்வோடும், அமைதியோடும் தமக்கான நாட்டை கிழக்கு தைமூர் மக்கள் அமைத்துக் கொண்டார்கள். இப்படி உலகெங்கும் வரலாற்று நிகழ்வுகள் இயங்கிக்கொண்டே இருக்கும்போது தமிழீழம் மட்டும் மீண்டும் இயங்க முடியாது என்று எந்த முட்டாலும் சொல்ல மாட்டான். அப்படி யாராவது சொல்வதாக இருந்தால் அவன் ஒன்று, தேசிய அடிமையாக இருப்பான். அது சிங்கள தேசியமா? இந்திய தேசியமா? என்பதை அவனவன் பார்வைக்கே விட்டுவிடுவோம். மற்றொன்று அவன் உலக வரலாற்றை அறியாதவனாக இருப்பான். வேறொன்று சொல்வோமானால் அவனுக்கென்று விடுதலை உணர்வு, அவனுடைய எண்ணத்திலும், அவன் வாழ்க்கையிலும் இல்லாமல், தாம் ஒரு அடிமை என்கிற மனப்பக்குவத்தோடு, தமது வாழ்வை இயக்கிக் கொண்டிருப்பான்.



இவர்களைத் தவிர்த்து வேறு எவரும் தமிழீழம் சாத்தியமா? என்ற கேள்வியை கேட்க முடியாது. இப்படி தமிழீழ எதிரிகள் கேட்கலாம். ஆனால் தமிழர்கள் ஒருநாளும் தமது வாய்த்திறந்து தமிழீழம் சாத்தியமா? என்ற கேள்வியை யாரிடமும் கேட்கக் கூடாது. எந்த நிலையிலும் கேட்கக் கூடாது. எப்போதும் கேட்கக் கூடாது. காரணம் நமக்கு சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பதெல்லாம் தேவையில்லை. நமக்கு தமிழீழம் தேவை. இதைத் தவிர்த்து நாம் வேறெதுவும் சிந்திக்கக் கூடாது.



மகாபாரதத்திலே துரோணர் வில் வித்தை கற்றுத்தரும் போது அம்பில் வில்லைப் பூட்டிய பிறகு குறி பார்க்கச் சொன்னாராம். இலை தெரிகிறதா? கிளை தெரிகிறதா? இல்லை என்று சொன்னவுடன், விடு அம்பை என்றாராம். அதைப்போன்று நமக்கு தமிழீழம் என்கின்ற அந்த கனி மட்டும்தான் கண்களுக்கு தெரிய வேண்டுமே தவிர, ராஜபக்சே எனும் சிங்கள பேரினவாதியின் குருதி வடியும் குரூர முகமோ, ஆதிக்க சக்தி படைத்த இந்தியாவின் பார்ப்பனிய பச்சைத் துரோக பற்களும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆயுத வியாபாரியின் அத்துமீறல்களும், சீனத்தின் அடிப்படையற்ற ஆயுத பறிமாற்றமோ நமக்கு கண்முன்னால் நிற்கக் கூடாது. இந்த அடக்குமுறைகளை காலம் பார்த்துக் கொள்ளும்.



நாம் நமக்கான நாட்டை குறித்து மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். ஐயோ! இவ்வளவு போராளிகளை இழந்து விட்டோமே! இவ்வளவு மக்கள் கண்முன்னால் உடல் சிதறி இறந்தார்களே! பதறி பதறி துடித்த குழந்தைகளின் பால்வடியும் முகங்கள் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாய் கிடந்ததே! இந்த கொடூரர்களை எதிர்த்தா நாம் எதிர் சமர் புரியப்போகிறோம் என்ற எதிர்மறையான சிந்தனையோ நம் மனங்களுக்குள் இடம் பெறக் கூடாது. யார் ஏதாவது சொல்லட்டும். உலகமே ஒன்றிணைந்து நிற்கட்டும்.



ஆனால் நமது லட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது நமக்கான நாடு. இதை தவிர்த்து நமக்கு வேறு எதுவும் இல்லை. லெனின் 17 வயதாக இருக்கும் போது ஒரு குற்றத்திற்காக ரஷ்ய காவல்துறையினர் லெனினை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அழைத்து செல்லும் போது, லெனினிடம் விலாடிமிர் நீர் யாரை எதிர்த்து சண்டையிடப் போகிறாய் தெரியுமா? அசைக்க முடியாத ஆற்றல் வாய்ந்த ஜார் பேரரசை எதிர்த்து. அதை உன்னால் வெற்றிக் கொள்ள முடியுமா? என்றபோது, லெனின் சிரித்துக் கொண்டே சொன்னாராம், நீங்கள் பார்ப்பதற்குத்தான் இந்த ஜார் அரசு பிரம்மாண்டமாய் தோற்றமளிக்கிறது.



ஓங்கி ஒரு குத்துவிட்டால் போதும், அவை உதிர்ந்து சிதறிவிடும். காரணம் செல்லறித்துப்போன சுவருக்குத்தான் அவர்கள் வண்ணம் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்று. இதே தான் சிங்கள பேரினவாத அரசுக்கும், ராஜபக்சேவின் அடக்குமுறைக்கும் பொருத்தமானதாக இருக்கும். வண்ணம் தீட்டப்பட்ட உள்ளே செல்லறித்துப் போன அரசியல் கட்டமைப்புத்தான் சிங்கள நாட்டிலே சிரித்துக் கொண்டிருக்கிறது. அது ஓங்கி ஒரு குத்துவிடும் காலத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி விடும் குத்திலே சிங்கள தேசம் சிதறிப்போகும். அதன் அரசியல் நிலைப்பாட்டைத்தான் இன்று அவர்களுக்குள்ளாக மோதிக் கொள்ளும் கேவலமான போக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.



தமது அரியாசனம் எந்த நிலையிலும் வேறொரு கைக்கு மாறிவிடக் கூடாது என்று மனப்பால் குடிக்கும் மகிந்தா, தம்முடைய பிள்ளையை அரசியலுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஏற்கெனவே தமது தம்பிகளை, ஒரு முழு ஆற்றல் வாய்ந்த அரசு செயல்பாடாக வைத்திருக்கும் மகிந்தா, இப்போது தன்னுடைய பிள்ளையையும் இந்த அராஜக அமைப்பின் அங்கத்தினராக்க காரணம் என்ன? இனி ராஜபக்சே இலங்கையிலே எந்த சிங்களனையும் நம்பத் தயாராக இல்லை. தம் குடும்பத்தைத் தவிர மற்றெல்லோரும் தமக்கு எந்த நேரத்திலும் தீங்கு செய்வார்கள் என்கின்ற மனநிலையோடுதான் மகிந்தாவின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.



துணிக்கடையில் வைத்திருக்கும் பொம்மைகளைப் போல செயற்கையாக சிரித்துத் திரியும் மகிந்தா, உள்ளும் புறமும் அச்சத்தின் அடிமையாய் வாழ்ந்து கொண்டிருப்பதை அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பும், அவர் எடுக்கும் முடிவுகளும் அப்பட்டமாய் வெளிகாட்டுகிறது. தமது அச்சத்தின் காரணத்தால்தான் தம்முடைய விசுவாசியாய் இருந்த சரத்தைக்கூட சிறைக்கு அனுப்பும் எண்ணம் மகிந்தாவுக்கு வந்தது. ஆக, செல்லறித்துப்போன சிங்கள பேரினவாத கட்டமைப்பை உடைத்தெறிய நாம் உறுதி எடுக்க வேண்டும். அது நிகழும். நிகழத்தான் போகிறது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். வரலாற்றிலே ஒரு செய்தி இருக்கிறது.



அலெக்ஸாண்டர் பாவோ என்கின்ற ஒரு மாணவன், லெனின் பேசும் ஒரு கூட்டத்திலே கையுயர்த்தி விலாடிமிர் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான். லெனின் அவனுக்கு பதிலுரைக்கிறார், நீ படி என்று. இரண்டு முறை, மூன்று முறை என தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த மாணவன் லெனினைப் பார்த்துக் கேட்கின்றான், விலாடிமிர் நீங்கள் சொன்னதைப் போல் நான் படித்து முடித்துவிட்டேன் என்று. லெனின் சொன்னான், நீ இன்னும் படிக்க வேண்டும் என. இந்த அலெக்ஸாண்டர் பாவோ தான் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டப்பின் மாபெரும் கவிஞனாக அடையாளம் காணப்பட்டான்.



இன்றைய நமது தமிழ் உறவுகளும், தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் படிக்க வேண்டும். நமது இனத்திற்கு ஏற்பட்ட இழப்பை அதிலிருந்த படிப்பிணையை நாம் ஆராய வேண்டும். நம் இனத்தின் வரலாற்றை அதிலிருந்து புறப்பட்ட ஆற்றலை நாம் படிக்க வேண்டும். நமது படிப்பு நம்முடைய சந்ததியருக்கு உறுதியையும், உற்சாகத்தையும், உண்மையான விடுதலை உணர்வையும் தரத்தக்கதாக அமைய வேண்டும். அது நிகழத்தான் போகிறது. அதுவரை நாம் நிம்மதியாக இருக்கலாம் என்று நாம் இருந்து விடுவதற்கான காலம் இதுவல்ல. நிகழப்போகும் அந்த நிகழ்வை நாம் வேகமாக முன்னோக்கித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



ஆகவே வரலாறும் நமது வாழ்க்கையும் இணைந்து நமக்கு புதிய புதிய படிப்பிணைகளை, பட்டறிவை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதை நாம் உள்வாங்கிக் கொண்டு பெற்ற படிப்பிணையை செயல்களாக மாற்றுவதற்கு நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு நம்முடைய குருதி செல்களில் அமிலமாய் பாய வேண்டும். எந்த நிலையிலும் நம்முடைய போராட்ட குணத்தை நாம் இழந்து விடக் கூடாது. போராட்டத்தின் வடிவங்களிலும், அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் சில நேரங்களில் தேவைப்படும். ஆனால் என்னென்ன மாற்றங்கள் எப்போது தேவை, எந்த அளவிற்கு தேவை என்பதை எமது மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.



பாலஸ்தீன விடுதலை போரின் ஒரு கட்டத்தில் இன்டிஃபாதா ஒரு மாபெரும் ஆற்றல் வாய்ந்த இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது போலவே தமிழீழத்தில் போர்குணம் மிக்க புதிய சமர் முறை கையாளப்படலாம். எந்த நிலையிலும் போராட்டம் என்பது தேங்கி நீர்த்துப்போய் விடாது. அது இயங்கிக் கொண்டே இருக்கும். இந்த இயக்கத்தை நிறுத்த எந்த கொம்பனாலும் முடியாது. காரணம் நாம் பிறந்தது வணங்கா மண்ணிலிருந்து. நாம் யாருக்கும் தலைவணங்கி பழக்கமில்லை, நீதியைத் தவிர. ஆகவே வணங்கா மண்ணின் ஆற்றல் வெளிப்படும் காலம் அருகிலிருக்கிறது.



தமிழீழ தாயகம் வணங்கா மண் என்பதை வந்தேறிகளுக்கு புரிய வைப்போம். நமக்கான புதிய சமர் களம் அமைப்போம். நமது இளைஞர்கள், மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள, நமக்கான நாட்டை அமைக்க நாம் நமது சொந்த மகிழ்ச்சியை தள்ளி வைத்து நாட்டின் நிரந்தர தாயக மகிழ்ச்சிக்காய் துயர் சுமப்போம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen