Montag, 1. März 2010

மத்தியில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி

வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?


மகராசர்கள் உலகாளுதல் நிலையாமெனும் நினைவா?



மத்தியில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி! பட்ஜெட் எதிரொலி

மைய அரசு கவிழுமா? கரை சேருமா?


மத்திய பட்ஜெட் பிப்.26 அன்று தாக்கல் செய்யப்பட்டபோது பெட்ரோலியப் பொருட்களுக்கான உற்பத்தி வரியும், இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டன

இவை ஏப்ரல் 1 ந்தேதி முதல்தான் நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த அன்று இரவே திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ லாரிக் கட்டணம் உயர்கிறது. இதனால் முன்னரே நடுத்தர ஏழை மக்களை விழிபிதுங்க வைத்துக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரப் போகின்றன. இந்த விலை உயர்வுக்கு வியாபாரிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.



ஆட்டங்காணும் காங்கிரஸ் கூட்டணி !

அரசின் இந்த நடவடிக்கைக்கு முலாயம்சிங், லல்லு, மாயாவதி ஆகியோரின் ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று கட்சிகளுமே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சனையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டுவரப்படுமானால் அரசுக்கு எதிராகத் தாங்கள் வாக்களிக்கப் போவதாக இக்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவை நீக்கிப் பார்த்தால், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, ஆட்சியில் நீடிக்கத் தேவையான பெரும்பான்மையைவிட 4பேரின் ஆதரவே அதிகமாக உள்ளது.

கருணாநிதி காங்கிரஸ் உரசல்


இந்த நேரத்தில், அடிக்கடி, மாநில சுயாட்சி, ஈழத்தமிழர் பிரச்சனை இவற்றைக் காட்டி பிளாக் மெயில் அரசியல் செய்யும் கருணாநிதி மீது காங்கிரஸுக்கு எரிச்சலும், இந்த எரிச்சலின் காரணமாக அ.தி.மு.க. வுடன் கள்ள உறவுக்கு கண்ணசைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மீது கருணா நிதிக்குப் புகைச்சலும் இருப்பது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தின் போது, தன் விருப்பப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியை ஆட்டுவித்த கருணாநிதி இந்த முறை அடக்கி வாசிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளார். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டும், அதனைத் தொடர்ந்து முலாயம்சிங், லல்லு, மாயாவதி ஆகியோருக்கு மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையும் மத்தியில் கருணாநிதியின் கையை மீண்டும் ஓங்கச் செய்துள்ளது. வெட்டுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, கருணாநிதி காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்தால், ஜெயலலிதா காங்கிரஸ் அரசை ஆதரித்தாலும் கூட மைய அரசு கவிழ்ந்துவிடும்.

என்ன செய்யப் போகிறார் கருணாநிதி ?

டீசல் விலை உயர்வை மட்டுமேனும் ரத்து செய்யச் சொல்லி சோனியா, மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி ஆகியோருக்கு கருணாநிதி தந்தியும், கடிதமும் அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவெங்கும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறைக் கல்வித்திட்டத்தைக் கொண்டுவருகிற மைய அரசின் முயற்சியை தி.மு.க. கடுமையாக எதிர்த்துள்ளது குறிப்பிட்த்தக்கது.

தி.மு.க. வின் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில சுயாட்சிக்கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதும், நதிநீர் பங்கீட்டில் மைய அரசின் கேரள, கர்னாடக அரசுகளுக்குச் சாதகமான போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்குச் சம உரிமை தராவிட்டால் தி.மு.க. வேடிக்கை பார்க்காது எனக் கருணாநிதி ஒரு அறிக்கையில் எச்சரித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

பழி துடைப்பாரா? கருணாநிதி மேலும் பழி சுமப்பாராகருணாநிதியின் தயவு இருந்தால்தான் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நீடிக்கும் என்றொரு மகத்தான வாய்ப்பினை வரலாறு கருணாநிதிக்கு மீண்டும் வழங்கியுள்ளது கடந்த முறைபோல் அல்லாமல், இந்தமுறை, இந்த வாய்ப்பை தமிழ்நாட்டின் உரிமைகளையும், ஈழத்தமிழர்களின் நலன்களையும் மீட்டெடுக்க கருணாநிதி பயன்படுத்தப்போகிறாரா? அல்லது வழக்கம் போல் தன் வாரிசுகளுக்கு வளமையான துறைகளைப் பெறவும், தன்னுடைய மூன்றாம் தலைமுறையினரின் திரையுலக முதலீடுகளை அகில இந்திய அளவில் விரிவாக்கம் செய்யவும், தொழில்துறைகளில் ஈடுப்பட்டுள்ள தன் சொந்தங்கள் அகில உலக அளவில் அகலக்கால் பதிக்கவும், நான்காம் தலைமுறைக்கும் நல்லது செய்யவும் பயன்படுத்தப்போகிறாரா? இதற்கான விடை தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஒரு விடயத்தை கருணாநிதி கட்டாயம் ஆராயாமல் இருக்கமாட்டார்.

பாம்பின் கால் பாம்பறியும்!


கருணாநிதியைப்பற்றி காங்கிரசாருக்குத் தெரியும். அதேபோல, காங்கிரசாரைப்பற்றியும் கருணாநிதிக்குத் தெரியும். ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்குவிசாரணை முழுவீச்சுடன் மீண்டும் துவக்கப்பட உள்ள நிலையில், ஜெயலலிதா முற்றுமாக காங்கிரசாரிடம் சரணாகதியாகிவிடுவார். அ.தி.மு.க.வின் ஒன்பது எம்.பி.களும் காங்கிரஸ் கூட்டணிக்குள் வரும் பட்சத்தில், குதிரை பேரத்தில் வல்லவர்களான காங்கிரசாருக்கு ஒரு ஐந்து எம்.பி.களை காசுகொடுத்து வாங்குவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அப்படி ஐந்து எம்.பி.கள் பேரம் படிந்து விட்டால், கருணாநிதிக்கு கூட்டணியில் இருந்து காங்கிரசாரே கல்தா கொடுத்து விடுவார்கள். இந்திராவின் மருமகள் – இத்தாலித் திருமகளாலும் இந்த விடயத்தில் கருணாநிதிக்குச் சாதகமாக எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் ”உனக்கு ஒன்றும் தெரியாது. நீ சும்மாயிரம்மா” என சோனியாவிடமே சொல்லிவிடுவார் ”நான் வளர்கிறேனே மம்மி!” என நாளுக்கு நாள் வளர்நதுக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி. இதையும் அறியாதவரல்ல கருணாநிதி.

எனவே காங்கிரஸ் ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கருணாநிதிக்கு நித்திய கண்டம் – பூர்ண ஆயுசுதான். கருணாநிதியின் ஆயுள் நீடிக்கலாம். மாநிலத்தில் அவரது ஆட்சி நீடிக்காது. எனவே காங்கிரசின் விடயத்தில் தாக்குதலே சிறந்த தற்காப்பு (Attack is the best defence) என்பதைத் தலை சிறந்த ராஜதந்திரியான தமிழ்த் தலைமகனா அறியாதிருப்பார்?

கூட்டணிக்குள் குத்து வெட்டு! சங்கட்த்தில் சரத் பவார்! மகா கோபத்தில்
மம்தா பானர்ஜி!
இந்நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு உணவு அமைச்சர் சரத் பவாரை மட்டுமே பொறுப்பாக்கி தான் மட்டும் தனியாகக் கழன்றுகொள்ள காங்கிரஸ் கட்சி பார்ப்பதால் கடுப்பில் உள்ளார் சரத் பவார்.





முதல் நாள் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ரயில்வேயில் அனுப்பப்படும் சரக்குகளுக்குக் கட்டண உயர்வு கிடையாது என அறிவித்திருந்தார். மறுநாள் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரயில்வே மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கான கட்டணத்திற்கு சேவை வரி விதித்ததன் மூலம் மம்தாவின் முகத்தில் கரியைப் பூசி விட்டார் - மம்தாவின் உள்ளூர் வைரி பிரணாப் முகர்ஜி ! ரயில்வே மூலம் அனுப்பப்படும் சரக்குகளுக்கான கட்டணம் இந்த சேவை வரியின் மூலம் உயரத்தான் போகிறது. இந்த உயர்வுக்கு காரணம் பிரணாப் முகர்ஜி தானே அன்றி மம்தா பானர்ஜி அல்ல. ஆனால் இந்த பாகுபாடு இந்தியப் பாமரனுக்கு விளங்கப்போவதில்லை அதனால் தான் காங்கிரஸ் மீது மகா கோபத்தில் இருக்கிறார் மம்தா பானர்ஜி.

காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் முலாயம்சிங், லல்லு, மாயாவதி ஆகியோர் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். சரத் பவாரும், மம்தா பானர்ஜியும், கருணாநிதியும் காங்கிரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள வலுவான காரணங்கள் உள்ளன.

இந் நிலையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா? கரைசேருமா? பாராளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் வருமா? அல்லது குதிரை பேரம் கொடி கட்டிப் பறந்து அணிகள் மாறி ஆட்சி மாற்றம் மட்டும் வருமா? அப்படி வருகிற ஆட்சி மாற்றத்தால் இனப்படுகொலைக்கு ஆளாகி இன்று வரை இன்னலுறும் நம் ஈழத்துச் சொந்தங்களுக்கு ஏதேனும் நன்மை வருமா?

இந்தச் கவலையெல்லாம் நம் தமிழ்க் குடிமகனுக்கு இல்லை.அவனுக்குள்ள கவலையெல்லாம் பத்து மணிக்குள்ளாக டாஸ்மாக் பாரை மூடி விடுகிறார்களே என்பதுதான்!

சீதையின் மைந்தன்

ஆசிரியர்,கரிகாலன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen