Dienstag, 9. März 2010

வக்கிரத்தின் வடிவமான மகிந்தா -கண்மணி.

வரலாற்று நிகழ்வுகள் ஒரு தனிமனிதனைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தனி மனிதன் சமூக அமைப்பில் ஆற்றும் பங்களிப்பே வரலாறாக பதிவு செய்யப்படுகிறது. உலகத்தில் வரலாற்றில் வாசிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் இப்படி ஒரு தனிமனிதனின் ஏற்ற இறக்கங்கள், அந்த சமூகத்தோடு எப்படி இயங்கியது? இதன் மூலம் இச்சமூகம் பெற்ற வெற்றி, இச்சமூகத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி அல்லது அந்த ஒரு தனிமனிதனால் இச்சமூக கட்டமைப்பு அடைந்த வீழ்ச்சி, துயர் இவைகளே நம்மை வரலாற்றை உற்றுப் பார்க்க வைக்கிறது.



இட்லர் ஒரு தனிமனிதனாக இருந்தாலும் ஐரோப்பிய சமூகத்தில் ஜெர்மனியர்கள் மத்தியிலே ஒரு ஆற்றல் வாய்ந்த சமூகத் தன்மை பொறுத்தியவராக தமது வாழ்வை இயக்கிக் காட்டினார். இட்லரின் ஒவ்வொரு அசைவும் யூதர்களை மட்டும் குறி வைத்து நகர்ந்தாலும், உலக மக்களால் இட்லர் பெரிதும் வெறுக்கப்பட்டான். அதேபோன்றே இடி அமின் மாந்த குல எதிரியாக மக்களால் தீர்மானிக்கப்பட்டான். எப்படி இதெல்லாம் நிகழ்கிறது. உலகெங்கும் இனம், மொழி, நிறம் அடையாளங்கள் பல்வேறானாலும் மாந்தம் என்ற ஒரு கூரையின் கீழ்தான் இந்த மனிதம் இணைக்கப்பட்டிருப்பதை இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. யூதர்களுக்கு மட்டும்தானே இட்லரால் கொடுமை நிகழ்ந்தது என்பதற்காக இந்தியர்கள் இட்லரை நேசிக்கவில்லை.
அதேபோன்று தான் யுகாண்டாவிலே இடி அமின் அராஜகத்தை உலகெங்கும் இருக்கும் மனிதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதம் என்பது எங்கிருந்தாலும் ஒரே இயக்கவியல் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை மாற்றி அமைக்க எந்த ஒரு ஆற்றலாலும் முடியாது. காரணம், மாந்தம் என்பது உணர்வுகளின் தொகுப்பு. அது உண்மை உறவின் அடையாளம். இறந்து போனவன் யார் என்பதல்ல, காயப்பட்டவன் யாரென்பதல்ல. ஆனால் அவன் மனிதன் என்கின்ற பொதுமை நாம் எல்லோருக்கும் இயல்பாக இருக்கிறது. அதனால்தான் பாலஸ்தீனத்திலே வீசப்பட்ட வெடி குண்டுகளுக்கு நாம் வியாசர்பாடியிலிருந்து கண்டனம் தெரிவிக்கிறோம். ஈராக்கிலே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையைக் கண்டித்து அரக்கோணத்திலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமை மீறல் இருக்கிறது என்பதற்காக அடையாரிலே மெழுகு திரி ஏற்றுகிறோம். குடந்தை குழந்தைகளுக்காக நாம் மாதவரத்திலே கண்ணீர் வடிக்கிறோம். சுனாமியில் இறந்துபோன உயிர்களுக்காக நமது கண்கள் சுரந்த நீர் ஒரு கடலை உருவாக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தது. இதுதான் மாந்த நேயத்தின் வெளிப்பாடு. மாந்தம் அவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைந்து, பிணைந்து தம்மை விலக்கிக் கொள்ளாத அளவிற்கு இறுகி இருக்கிறது. ஆனாலும்கூட, இதையெல்லாம் உடைத்தெறிவதற்கு சில தனிமனித பேராசை, தனிமனித வெறி உயிர்த்தெழும்போது அதை கண்டிக்காமல் இருப்பது தாம் மனித அடையாளத்தை இழந்ததற்கு ஒப்பாகும்.
தன் கண் முன்னால் நடக்கும் ஒரு அநீதியை, அக்கிரமத்தை தட்டிக் கேட்க துணிச்சல் இல்லாவிட்டால் நாம் மனிதன் என்ற மரபிலிருந்து மாற்றம் கொண்டவர்களாக ஆகிவிடுவோம். அந்த அடிப்படையில்தான், எங்கோ நிகழ்ந்தாலும் இங்கிருந்தே நம்முடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறோம். உத்திரப் பிரதேசத்தில் இறந்த உயிர்களும், உத்திரமேரூரில் வாழும் உயிர்களும் வெவ்வேறல்ல என்பதை ஒவ்வொரு படைப்பாளியும், மாந்தகுல விரும்பியும் நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால் மாந்தத்தை மட்டுமல்ல, மாந்தத்தின் அடையாளத்தைக்கூட அழிக்க நினைக்கும் அவலத்தை நம்மால் கண்டிக்காமல் இருக்க முடியாது. இருக்க முடியாது என்று சொல்வதைவிட, இருக்கக்கூடாது.





இந்த உலகில் நாம் பெரிதாக அஞ்சுவது நமது உயிருக்கு மட்டும்தான். இந்த உயிரச்சமே நம்மை அநீதிக்கு எதிரான களத்திலிருந்து விலக்கி வைக்கிறது. நீதியின் பக்கம் நம்மை நெருங்கவிடாமல் தடுக்கிறது. இப்படி அநீதியின் கரம் ஓங்க, இதுவே பெரும் காரணமாக மாறிவிடுகிறது. நாம் பல நாட்களாக பலமுறை கூறிவந்த தமிழின அழிப்பு, உச்சக்கட்டத்தை அடைந்து, இன்று அது வேறொரு வழிக்கு தம்மை இழுத்துச் செல்கிறது. நாம் ஒரு மாபெரும் இனஅழிப்பு நடந்தபோது நம்மையும் அறியாமல் கதறினோம், துடித்தோம், பதறினோம், அழுதோம். ஆனால் அது நின்றபாடில்லை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாந்த உயிர்கள் அநியாயமாய் அழித்தொழிக்கப்பட்டதற்கு நாம் அமைதி காத்தோமே, அப்போதே அநீதிக்கு நாம் துணை போனவர்கள் ஆனோம்.


அந்த உயிர்களின் அவல ஓசையை கேட்காமல் நமது செவிப்பறைகளை மூடிக் கொண்டோமே, அப்போதே நாம் நமக்குள் இருக்கும் நீதியை ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டோம். அது நிகழ்ந்து முடிந்துவிட்டதே என்கிற மனநிலையிலிருந்து நாம் மாறுபடுவோம். நடந்த கொடுமைக்கு நீதி கேட்க இப்போதாவது நாம் கரம் உயர்த்துவோம். அதற்கான தருணங்களை காலம் நமக்கு அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான தருணம் தான் இப்போது தமிழீழப் பகுதியில், சிங்கள பேய் வெறி ஆட்டத்தின் தொடர்ச்சியாகும்.


காலமெல்லாம் நாம் நம்முடைய குரல் உயர்த்தி, இன அழிப்பு நடக்கிறது, தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னபோது, அமைதி காத்த அனைவரும் இப்போது ஆம்! நடைபெற்றது இன அழிப்புதான். காரணம், தம்முடைய அநியாயத்தை மறைக்க மேலும் மேலும் ஒரு பகைவன் தவறிழைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதை காலம் இந்த மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது. தமிழீழம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வாழ்வியலை தன்னகத்தே கொண்டது. தமிழீழ மக்கள் வரலாற்று ரீதியாக அடங்கி போகும் மனநிலை அற்றவர்களாக நீதியின் போர் வாள்களாக, அநீதியின் பகைவர்களாக, அதற்கும் மேலாக தமக்கான இன அடையாளத்தை, தமக்கான சமூக கட்டமைப்பை, தமது முகத்தை, மொழியை காத்துக் கொள்வதற்கான சமர் களத்திலே இதுவரை உலக தேசிய இனங்கள் ஆற்றக்காணாத அளவில்லா அர்ப்பணிப்பான தம்மையே அழித்துக் கொள்ளும் அளவிற்கு பங்காற்றி, உலகெங்கும் உள்ள தேசிய இனங்களை தம் பக்கம் ஈர்த்த பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்.



வெள்ளைக்காரனின் ஆதிக்க வெறியை உடைத்தெறிய, தமிழீழ மண்ணில் தமக்கான பங்களிப்பாக பண்டார வன்னியன் ஆற்றிய அளப்பறியா வீரம் செறிந்த போர், வரலாற்றிலே இதுவரை அழிக்க முடியாத பேரெழுச்சி மிக்க வரிகளாக வருணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1803லிருந்து அந்த 1803ல் நடைபெற்ற பெருஞ்சமரில் ஆங்கிலேய அடக்குமுறை தளபதி தமது பெரும் படையுடன் முல்லை மாவட்டம், ஒட்டுச்சுட்டான், கற்சிலைமேடு கிராமத்தில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வரலாற்று ஆவணம் ஒன்று தமிழீழ மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தது.


அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சுவடைக்கூட இனிவரும் சமூகம் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, சிங்கள பேரினவாதத்தின் தலைவன் மகிந்தா, அதை அப்புறப்படுத்த முடிவெடுத்த அடக்குமுறை நிறைந்த காலத்தை நாம் காண்கின்றோம். அதோடுமட்டுமல்ல, தமது இனமான விடுதலைக்கான சமரில் களபலியான எண்ணற்ற வீர மறவர்களின் உடல்களை இந்த மண்ணிற்கு உரமாய் தந்து, விதைக்கப்பட்ட அந்த பூமியை குடைந்தெடுத்து, அதிலிருக்கும் எலும்புகளை வாரி வெளியில் இறைக்கும் கேவலத்தை அடக்குமுறையாளன் மகிந்தாவின் அரசு தமிழீழ மண்ணிலே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நாம் அறிந்த வரை எந்த ஒரு வரலாறும், ஒரு உச்ச நிலைக்குப்பிறகு மீண்டும் திரும்பும். வரலாறு மாறும். அதை யாரும் ஒரே திசையில் அழைத்துச் செல்ல முடியாது.

மாமனிதன் காரல் மார்க்ஸ் கூறியதைப் போன்று மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது பல்வேறு தருணங்களில் நிருபிக்கப்பட்டுள்ளது. இப்போது மகிந்தாவிற்கான காலம். மகிந்தாவிற்கான எச்சரிக்கை மாவீரர் களின் கல்லறையிலிருந்து மறுஉரு அடைகிறது. ஆம்! கல்லறை களிலிருந்துதான் அந்த அடக்கமுறையாளனுக்கு புதுக்கல்லறை அமைக்கப் பட இருக்கிறது. தமது இனமான அடையாளத்தை தமது மக்களின் எதிர் கால வாழ்வை, தமது வருங்கால தலைமுறையின் மகிழ்ச்சிக் குன்றாத இயக்கத்தை மனதில் வைத்து, தம்மையே அர்ப்பணித்த ஒரு இனத்தின் பெரும் பங்காளர்களாகிய அந்த மாவீரர்களை அவமானப்படுத்துவது, உலகெங்கும் உள்ள தேசிய இனங்களை அவமானப்படுத்துவதற்கு சமமானது. தேசிய போராளிகளை அவமானப்படுத்துவதற்கு சமமானது.


இன எழுச்சிக்காக உயிர் நீத்த எண்ணற்ற தேசிய இன வீரர்களை உதாசீனப்படுத்தியதற்கு சமமானது. மகிந்தாவின் அக்கிரமத்தின் உச்சமாக பண்டார வன்னியனின் வரலாற்றுச் சான்றும், மாவீரர்களின் கல்லறை களின் உடைத்தெடுப்பும் சாட்சியம் சொல்கிறது. இதை தட்டிக் கேட்க நாம் மீண்டுமாய் களத்திற்கு வரவேண்டும். குண்டுவீச்சின்போது காதுகளை பொத்திக் கொண்டு கூண்டுக்குள் அடைப்பட்டதைப் போல வீட்டுக்குள் இருந்தோமே! அப்படியில்லாமல், நமது தேசிய அடையாளத்தை உடைத் தெறிந்து தரைமட்டமாக்க முனையும் மகிந்தாவின் தரம்கெட்ட நிலையை தகர்த்தெறிய நாம் களத்திற்கு வரவேண்டும். மாவீரர்களின் கல்லறை களிலிருந்து நமது போராட்டம் மறுபிறப்பு எடுக்க வேண்டும்.


தமிழீழ அரசியல் தலைமை இல்லாத காரணத்தால் தரம்கெட்டு, யாரெல்லாம் ஒன்றிணைய வேண்டுமோ, அவர்களெல்லாம் தனித்தனியாய் தமிழ் மக்களின் அடையாளத்தைப் பெறமுடியாமல் களத்தில் இருக்கிறார் கள். ராஜபக்சேவின் அடக்குமுறையைக் கண்டு அச்ச உணர்வு கொண்டவர் களாக அவர்கள் வரலாற்றை மீண்டும் பின்னுக்கு நகர்த்த முயற்சிக் கிறார்கள். இந்த அடக்கமுறையாளன் ராஜபக்சே ஏதோ வானத்திலிருந்து கீழே விழுந்தவன் அல்ல. இந்த மண்ணில் தோன்றி, வளர்ந்து, வாழ்கிறவன் தான். ஆகவே வரலாற்றில் இவனுக்கும் அழிவு உண்டு என்பது எமது இனமக்களின் மனங்களில் பதியாமல் இருக்கிறது. நாம் வீறுகொண்டு எழவேண்டிய தருணம் இதுதான்.


ஏதோ எல்லாம் நிறைவேறியது என்பதுபோன்ற தோற்றத்திலிருந்து விடுபட்டு, எமக்கான ஒரு கடமை உண்டு, அது எமது நாட்டை அடைவது என்கிற எண்ணம் நமக்குள் மறுபிறப்பு எடுக்க வேண்டும். மாவீரர்களின் கல்லறைகளையும், தமிழீழ வரலாற்றையும் சதிராடத் துடிக்கும் மகிந்தா வின் மனம் வக்கிரத்தின் உச்சிக்கு போய்விட்டது. இனி மகிந்தாவுக்கு வீழ்ச்சித்தான். இதுதான் நமக்கு காலம் கற்றுத்தரம் சிறப்புக் கல்வி. இதை புரிந்து கொண்டு அடுத்தக் கட்ட நகர்விற்கு நம்மை தயாரிப்போம்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen