Dienstag, 9. März 2010

இலங்கை அரசுக்கு எதிராக அஸ்திரங்களை ஏவத் தொடங்கியுள்ள சர்வதேசம்.....?

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுழைக்கின்றனவா?




இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்குக் கிடையாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த வாரம் கூறியிருந்தார்.



அதற்கு சில தினங்கள் முன்னதாகவே தெற்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் இதுபோன்றதொரு கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தார்.



இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் சாதகமற்ற எந்தக் கருத்தை வெளியிட்டாலும் அதை விசனத்துடனேயே பார்க்கிறது இலங்கை அரசு.



பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் உலகத் தமிழர் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்றது, அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் சந்தித்தது எல்லாமே இலங்கை அரசுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



அதேவேளை சரத் பொன்சேகா விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்துகளும், அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அது கொடுக்கும் அழுத்தங்களும் இலங்கைக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



ஒருபுறத்தில் சீனாவிடம் இருந்து உதவிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்- ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்திக் கொண்டிருக்கும்போது- மேற்கு நாடுகளுடனான இதன் உறவு நிலை சீரழிந்து வருகிறது.



அண்மையில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ, புலிகளை முற்றாக ஒடுக்குவதற்கு- அவர்களின் வெளிநாட்டு வலையமைப்பை சிதைப்பதற்கு மேற்கு நாடுகள் ஒத்துழைப்புத் தருவதில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.



அத்துடன் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் இரட்டைவேடம் போடுவதாகவும் இலஙகை அரசு குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளது.



அண்மையில் டுபாயில் ஹமாஸ் இயக்கத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விடயத்தில் அமெரிக்காவின் அணுகுமுறைக்கும்- இலங்கையில் அது கையாளும் அணுகுமுறைக்கும் வித்தியாசம் இருப்பதாக இலங்கை அரசு நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளது.



அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் அண்மைக் காலமாக அமெரிக்காவை விமர்சிக்கும் கருத்துக்கள் வெளியிடப்படுவதையும் காணமுடிகிறது.



குறிப்பாக ஆப்கானிஸ்தானிலோ அல்லது ஈராக்கிலோ அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் சரி- அல்லது அங்கு ஏதாவதொரு தாக்குதல், வன்முறை நிகழ்ந்தாலும் சரி பாதுகாப்பு அமைச்சின் இணையம் முக்கிய செய்தியாக வெளியிடுகிறது.



இந்தச் செய்திகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஒன்றும் சர்வதேச செய்திகளை வெளியிடுகின்ற தளம் அல்ல.



தம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் முக்கியத்துவம் கொடுக்கிறது.



இதற்குக் காரணம் அமெரிக்கா அங்கெல்லாம நியாயமாக நடந்து கொள்கிறதா என்ற கேள்வியை இலங்கை மக்களிடத்தில் மட்டுமன்றி வெளியுலகிலும் ஏற்படுத்துவது தான்.இதற்காவே அப்படியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.



புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபோது அமெரிக்கா, பிரித்தானியா மட்டுமன்றி பெரும்பாலான உலகநாடுகள் இலங்கை அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்தன.



தீவிரவாதத்தில் இருந்து விடுதலை பெற்றநாடு என்று புகழ்ந்துரைத்தன. ஆனர்ல காலப்போக்கில் அந்த நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தை கையில் எடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அஸ்திரங்களை ஏவத் தொடங்கிய போது- அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசு இருக்கவில்லை.

இப்போதும் கூட இலங்கை அரசாங்கத்துக்கு மோசமான மனிதஉரிமைகள் நிலை, ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் போன்றவற்றுடன் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆகியனவே நெருக்கடியான விடயங்களாக இருக்கின்றன.



இவற்றைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தியது. இன்னும் பல வாய்ப்புகள், உதவிகள் பறிபோவதற்கும் இவையே காரணமாகியுள்ளன.



சர்வதேச சமூகம் இலங்கையில் போரின்போது நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்த- போர்க்குற்றங்கள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.



ஆனால் அதற்கு இலங்கை அரசு இணங்குவதாக இல்லை.அப்படியான விசாரணைகளின் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும்.



அதனால் தான் அப்படியான கோரிக்கைகள் எழுகின்ற போதெல்லாம்- இலங்கை அரசு அதைக் கிளப்பிய சர்வதேச சக்திகள் மீது எரிந்து விழுகிறது.



சர்வதேச சமூகத்திடம் இருந்து, தமிழர் பிரச்சினைக்கு நீதியான, நியாயமான அரசியல்தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றோ அல்லது மனித உரிமைமீறல்கள் தொடர்பான கண்டனங்கள் வரும் போதோ இப்படியான பிரதிபலிப்பையே வெளிப்படுத்தி வருகிறது இலங்கை அரசாங்கம்.



அதேவேளை இலங்கை அரசாங்கம் இறைமை என்ற விடயத்தைப் பயன்படுத்தியே பல்வேறு பிரச்சினைகளை வெளியுலகத்தின் கவனத்தில் இருந்து திசைதிருப்பி வருகிறது.



புலிகள் விடயத்திலும் சரி- இப்போதும் சரி இலங்கை அரசு வெளியுலத்தின் எத்தகைய நடவடிக்கையையும் தமது இறைமை மீதான தலையீடாகவே வெளிப்படுத்துகிறது.

இறைமை மீதான தலையீடாக இல்லாத போதும் அப்படியானதொரு சூழல் நிலவுவதாகக் காண்பித்து உள்நாட்டில் உணர்வைத் தூண்டி விடுகிறது.



ஆனால் சர்வதேசத்தின் அணுகுமுறைகள் இலங்கை அரசுக்கு சாதகமற்ற திசையை நோக்கியே பயணித்து வருகிறது.



அண்மையில் இலங்கை அரசின் அமைச்சர்கள் சிலர் பொதுத்தேர்தலில் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம் கூறிவருகின்றனர்.



ஆளும்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் ஜிஎஸ்பி வரிச்சலுகை மீளக் கிடைத்து விடுமாம்,



போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான கோரிக்கைகளை முறியடித்து விட முடியுமாம்- இப்யெல்லாம் கூறி பொதுமக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சி.

அதேவேளை இலங்கை அரசாங்கம் இதுபோன்ற கருத்துகளின் மூலமோ கண்டனங்கள் மூலமோ சர்வதேசத்தின் கண்காணிப்பில் இருந்து மறைந்து கொள்ளலாம்- பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாம் என்று கருதுவது முட்டாள்தனமானது.



எப்போதும் இதுபோன்ற வாய்ஜாலங்கள் வாய்க்காது. தமிழர் பிரச்சினை, போர்க்குற்ற விசாரணை, மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரம் மீதான தலையீடுகளை சர்வதேசம் வெறுப்புடனேயே பார்க்கிறது.



இந்த வெறுப்பை வெறுமனே உள்நாடு விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற வார்த்தைகளின் மூலம் தணித்து விடலாம் என்று கருதுவது பகல்கனவாகவே இருக்கும்.



தொடர்புபட்ட செய்திக்குறிப்பு



சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம்: பேராசிரியர் பாய்ல் கோரிக்கை



இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினர் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எடுத்துள்ள முடிவை வரவேற்றுள்ள பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.



“இலங்கையில் நடந்ததை விட பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்காத ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், சிறிலங்காவிற்கு எதிராக அவ்வாறு ஒன்றை அமைப்பது தேவையற்றது” என்று அதிபர் ராஜபக்ச கூறியிருப்பது அடிப்படையற்ற பேச்சு என்று கூறியுள்ள பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க கோல்ட்ஸ்டோன் தலைமையிலான குழுவை ஐ.நா. அமைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.



அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையில் பன்னாட்டுச் சட்டத் துறையில் பேராசிரியராக இருக்கும் பிரான்சிஸ் பாய்ல், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு இழைத்த போர்க் குற்றங்களை விசாரிக்கும் வேளை வந்துவிட்டது என்றும், சிறிலங்க அரசுக்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம் (International Criminal Tribunal for Sri Lanka - ICTSL) அமைக்குமாறு தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுகளை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.



“ஐ.நா.விற்கு எதிராக சிறிலங்க அரசு கூறும் குற்றச்சாற்று அடிப்படையற்றது, அது அந்நாட்டு அரசி்ற்கும் தெரியும். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாதிப்பிற்குள்ளான 15 இலட்சம் மக்களின் நிலை குறித்து ஆராய கோல்ட்ஸ்டோன் விசாரணைக் குழுவை அனுப்பி வைத்தது ஐ.நா. கோல்ட்ஸ்டோன் குழு நடத்திய விசாரணையில் இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளதும், மானுடத்திற்கு எதிரான குற்றமிழைத்துள்ளதும் - அதாவது இனப் படுகொலை செய்துள்ளதும் - உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தமிழ்நெட்.காம் இணையத்திற்கு அனுப்பியுள்ள குறிப்பில் பேராசிரியர் பாய்ல் விளக்கியுள்ளார்.



“பாலஸ்தீனத்திற்கு செய்ய வேண்டியதை மிகச் சரியாக செய்து முடித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை. ஆனால், தமிழர்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா. மனித உரிமைப் பேரவை முயன்றபோது, மேற்குலகிற்கு எதிரான உணர்வைத் தூண்டி திசை திருப்பிவிட்டது சிறிலங்க அரசு. தமிழர்களுக்கு எதிரான படுகொலை நடந்துமுடிந்த ஒராண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் அது தொடர்பான சரியான நடவடிக்கையை ஐ.நா. துவக்கியுள்ளது” என்று கூறியுள்ள பிரான்சிஸ் பாய்ல், இஸ்ரேலிற்கு எதிராக பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான திட்டத்தை ஐ.நா. பொது அவைக்கு நான் முன்மொழிந்துள்ளேன். இதேபோன்தொரு பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயத்தை அமைக்குமாறு ஐ.நா.வை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான அதிகாரம் ஐ.நா. பொது அவைக்கு உள்ளது. ஐ.நா. சாசனத்தின் பிரிவு 22 அதற்கான அதிகாரத்தை பொது அவைக்கு அளித்துள்ளது. இதனை எந்த வல்லரசும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவிட முடியாது” என்று கூறியுள்ளார்



கபிலன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen