Donnerstag, 4. März 2010

விடுதலை வெளியில்... -கண்மணி.

  1. கடந்த புதன்கிழமை இந்தியாவின் மக்களவைக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறப்பான பதிலளித்து இருக்கிறார். புலிகளுடனான போர் நிறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் புதிய வாழ்வை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறிய எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழீழ மக்கள் உட்பட அனைத்து சமூகத்தவரும் ஏற்கும் விதத்திலான நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியதாக எழுத்து மூலம் அளித்த பதிலில் தெளிவு படுத்தியிருக்கிறார்.



    அனைத்து மக்களும் ஏற்கும் விதமான போக்கு அல்லது தேவை என்ன என்பது எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு புரிந்ததா? புரியவில்லையா? என நாம் அறியோம். ஆனால் தமிழீழ மக்களின் விருப்பம் என்று சொல்வதைவிட, தேவை என்று ஒன்று இருக்கிறதே! அதை எஸ்.எம்.கிருஷ்ணா உணர்ந்தாரா என்பது இதுவரை புரியவில்லை. இந்திய அரசின் எண்ணங்களை பிரதிபலித்துதான் நடுவண் அமைச்சர்களின் வார்த்தைகளும், சிந்தனைகளும் அதன் போக்கும் அமைந்திருக்கும் என்பதை நாம் சொல்லி யாருக்கும் தெரியவேண்டியதில்லை.



    காரணம் ஒரு தமிழனாக ஆற்றல் வாய்ந்த நடுவண் அமைச்சகத்தின் பொறுப்பில் சிதம்பரம் இருக்கும்போதுகூட, தமிழனுக்கென்று ஒரு நாடு அமைவதற்கான வாய்ப்பு இருப்பதை திட்டமிட்டு தடுத்து நிறுத்துகிறாரே. இது எதைச் சொல்கிறது? சிதம்பரம் தமிழனாக இருந்தால்கூட நடுவண் அரசின் பார்ப்பன, பனியா கூட்டமைப்பின் பணியாளனாகத்தான் செயல்பட முடியும் என்பதை அவர் தமது செயலின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.



    நடுவண் அமைச்சர் கிருஷ்ணா கூறியிருக்கும் அனைத்து மக்களின் விருப்பம் என்று கூறும்போது நமக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. லெனின் வீட்டில் பணியாளராக இருந்த ஒரு பிரென்ச் பெண்மணி தாம் வேலை செய்து கொண்டிருக்கும் தருணங்களில் ஆல்சேஸ் பற்றிய ஒரு சிறப்பு வாய்ந்த பாடலை பாடிக் கொண்டே இருப்பார். தனது தாய்நாடு ஜெர்மானிய அடக்குமுறையாளர்களால் அடிமைப்பட்டிருப்பதை அவர் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கும். தமது விடுதலை தாகத்தை அப்பெண்மணி ரசியாவில் இருந்துகொண்டு பாடினாள்.



    அந்த பாடலின் வரிகள், எந்த கவிஞனாலும் எழுதப்பட்டதல்ல. தமது மனத்துயரை, அழுத்தத்தை, தமது நாட்டைக் குறித்த ஈடுபாட்டை, தமது தாய்நாட்டை தாம் நேசிக்கும் விதத்தை, ஒருநாள் நிச்சயம் தனது தாய்நாடு விடுதலை அடையும் என்ற உணர்வை அவர் பாடி கொண்டே இருப்பார்.

    அந்த பாடல் வரிகளுக்கு மாமனிதன் லெனின் ரசிகனாக மாறியிருந்தார். பலமுறை அப்பெண்மணியிடம் அப்பாடலை பாடச் சொல்லி அதைக்கேட்டு மனனம் செய்தார். அப்பாடலை அவர் அடிக்கடி பாடினார். அந்த பாடல் கீழ்க்கண்ட வரிகளுடன் நிறைவடைகிறது.



    "நீங்கள்

    ஆல்சேசையும் லாரனையும்

    பிடித்துக் கொண்டுவிட்டீர்கள்.

    உங்களையும் மீறி நாங்கள்

    பிரெஞ்சு காரர்களாகவே

    இருப்போம்.

    எங்கள் வயல்களை

    ஜெர்மனி வயப்படுத்தி விட்டீர்கள்.

    ஆனால், எங்களின் இதயம்

    உங்களுக்கு ஒருபோதும் கிடைக்காது."



    இந்த வரிகள் லெனினை பலமுறை சங்கடப்படுத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு இந்த கவிதையை இப்படி மாற்றி பாடலாம்.



    "நீங்கள்

    எங்களது கிளிநொச்சியையும்

    முள்ளைத்தீவையும் ஆணையிரவையும்

    கைப்பற்றினீர்கள்.

    ஆனாலும் நாங்கள்

    தமிழர்களாகவே இருப்போம்.

    எங்களின் தாய்மண்ணை

    சிங்கள வயமாக்கினீர்கள்.

    ஆனால், எங்களின் இதயம்

    உங்களுக்கானதாக எப்போதும் இருக்காது."



    ஆம்! விடுதலைக்கான உணர்வு இப்படிதான் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும். போராட்டம் என்பது மாந்தகுல வாழ்வின் தொடக்கத்திலிருந்து எந்தவித ஆற்றலாலும் தடுத்திட முடிந்ததில்லை. காரணம், போராட்டம்தான் நமது வாழ்வை இயங்கச் செய்துக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நாம் அடைந்த துயரத்தைக் குறித்து யாரும் அனுதாபப்பட தேவையில்லை. இந்த மாந்தகுலம் வாழ்வானது அனுதாபங்களைக் கொண்டதல்ல. அது போராட்டங்களினாலேயே வாழ்கிறது. போராட்டங்களினாலேயே வளர்கிறது. என்றைக்கு அது தன் போராட்டங்களை முடித்துக் கொள்கிறதோ, அதுதான் அதன் இறுதிநாளாக இருக்கும்.



    மேலும் இயற்கையின் முன்னே மாந்தகுலம் கருணைக்காக கையேந்தி நின்றிருக்குமானால் குகைகளைவிட்டு அது வெளியேறி இருக்கமுடியது. ஆகவே நமக்கான விடுதலையை வென்றெடுக்க நாம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. போராட்டமே நமது வாழ்வின் அனைத்து மரபுகளையும் உடைத்தெறியும் ஆற்றல் படைத்ததாக இயங்கிக் கொண்டிருக்கிறது.



    உலகெங்கும் போற்றப்படும் கவிஞன் வால்ட்விட்மன் சொன்னான், "எந்த நாடு அடிமைப்பட்டிருக்கிறதோ, அதுவே எனது தாய்நாடு என்று. எனது தாயகம் பிரான்ஸ் அடிமை சங்கிலியை உடைக்கத் துடிக்கிறது. நான் அங்கேப் போகிறேன்" என்று கூறிய விட்மன், பிரான்சுக்கு ஓடினான். ஆக அடிமைதனம் எங்கே இருக்கிறதோ, அதை உடைத்தெறிவதுதான் ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதைத்தான் நாம் உள்வாங்கி, புரிந்து, செயல்பட தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தேசிய இனங்கள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது.



    "ஒரு தனி மனிதன் மற்றொருவனை சுரண்டுவதற்கு எந்த அளவு முடிவுக்கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசத்தை மற்றொரு தேசம் சுரண்டுவதற்கும் முடிவுக்கட்டப்படும். ஒரு தேசத்துக்குள் வர்க்கங்களுக்கிடையே உள்ள பகைமை எந்த அளவுக்கு மறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசத்துக்கும் மற்றொரு தேசத்துக்கும் இடையில் உள்ள பகைமை மறையும்."



    ஆக ஒரு தேசத்திற்கான அடிப்படை உரிமையை மற்றொரு தேசம் சுரண்டுவதற்கு நாம் துணைபுரியக்கூடாது என்பதை மார்க்சியம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழீழம் என்கிற ஒரு தேசத்தை சிங்கள பேரினவாதம் தம்முடைய ஆதிக்கத் திமிரால், அடக்குமுறை வெறியால் சுரண்டுவதற்கு தமது ஏகாதிபத்தியத்தை ஒரு இனத்தின் மீது திணிப்பதற்கு துணைபுரிய இந்திய துணை கண்டமும், அதோடு சேர்ந்து பல்வேறு நாடுகளும் துணைபுரிய என்ன காரணம்? ஒரு நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு சூறையாடுவதற்கு லாப வெறியோடு தம்முடைய வாய்களை அகலத்திறந்து கொண்டு ஒரு இனத்தின் இரத்தத்தை குடிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறதே, இதை முறியடிக்க முடியாதா? என்றால் நிச்சயமாக முடியும்.



    நமக்கு உலகத்தில் பல்வேறு வரலாற்று சான்றுகள் அதை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்றன. நமக்கான ஒரு நாடு அமைவதற்கு நமது தேசிய இனத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். போராடாத வாழ்வு வெறும் வறண்டு, தண்ணீரற்ற குளமாகத்தான் இருக்கும். தமிழரின் வாழ்வு அப்படிப்பட்டதல்ல. அது ஒடும் ஆறு. அதற்கான வரலாறு சிறப்பு வாய்ந்தது. அது வேறொரு மண்ணை அபகரிக்க, கவர்ந்து செல்ல, தமது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக, தமக்கான நாட்டை காத்துக் கொள்ளத்தான் அது போராடிக் கொண்டிருக்கிறது. தமக்கான வாழ்வை தக்கவைக்கத்தான் தமது மக்களை களபலியாக்கிக் கொண்டிருக்கிறது.



    தமக்கான எண்ணங்களை வண்ணமயமாக்கத்தான் அது குருதிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை நமக்குள் இருக்கும்வரை நம்மை வீழ்த்த இந்த உலகத்தில் எந்த சக்தியும் இல்லை. நம்மை எதிர்கொள்ள இந்த உலகத்தில் எந்த படையும் இல்லை. நாம் வெற்றிக்காக பிறந்தவர்கள். நாம் அநீதிக்கு துணைபுரிய களத்திற்கு வரவில்லை. நீதிக்கு போராட களத்திற்கு வந்திருக்கின்றோம். நமக்கான நீதி தெளிவானது. நமக்கான ஆற்றல் உறுதி வாய்ந்தது. நமது ஆற்றலால் நமக்கான நீதியை நாம் வென்றெடுக்க, இடைவிடாமல் போராட வேண்டும்.



    போராட்டத்தின் வடிவங்கள் எதுவாகவாவது இருக்கலாம். ஆனால் நமக்கான லட்சியம் தெளிவானது. நமக்கான வாழ்வு உண்மையானது. நாம் பெறப்போகும் விடுதலை தூய்மையானது. நாம் நமது லட்சியங்களை, கொள்கைகளை, உணர்வுகளை ஒட்டுமொத்தமாய் குவித்து வைத்திருப்பது நம்முடைய தேவையை அடையத்தான். நமக்கான தேவை ஒன்றே ஒன்றுதான். அது தமிழீழம்.பிரௌனிங் டேவி தமது கவிதை வரிகளை இவ்வாறு நிறைவு செய்கிறார்.



    "கொடுங்கோலரே!

    உங்கள் வழியெல்லாம்

    எங்களின் ரத்தம்,

    ஆனால்...

    ஆற்றல் மிகுந்தார் சீற்றத்திலும்

    குழந்தைகள் சாபம் கொடியதே

    அறிவீர்!"



    நாம் மகிந்தா அரசுக்கு இந்த எச்சரிக்கையை கொடுக்கிறோம். பச்சைத் தளிர்கள் துடித்து இறந்த அந்த கொடிய நிகழ்வுகள், பச்சை ரத்தத்தை சொந்த மண்ணிற்கு தாரை வார்த்த அந்த நிகழ்வுகள், தமக்கு முன்னால் தாய் இறப்பை கண்டு தவித்த அந்த நிகழ்வுகள் உம்மை பழிவாங்காமல் விடாது. இது நிகழும் காலம் தூரத்தில் இல்லை. நிகழும் காலம் தூரத்தில் இல்லை. அருகில் இருக்கிறது. இன்னும் பக்கத்தில் இருக்கிறது.



    "உணவு ஏன்

    இவ்வளவு கிராக்கி.

    மனித தசையும்

    ரத்தமும் ஏன்

    இவ்வளவு மலிவு."



    என்ற கவிதை வரிகள், மகிந்தாவே உன் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. உனக்கு நாங்கள் சொல்கிறோம்,



    "விடுதலை வெளியில்

    மானுடம் விரியும்...

    காலம் விரியும்...

    தூரம் வரையும்..."
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen