Sonntag, 7. März 2010

தமிழீழம்: வணங்காமண் அடங்காப்பற்று(2) -தோழர்.தியாகு

சுயாட்சிக் கோரிக்கையையும் கூட அக்கறையோடு போராடி வென்றெடுக்கும் நோக்கம் இருக்கக் கூடாது என்றுதான் தேர்தலில் போட்டியிட்டுப் பதவி பிடிக்கலாம் என்று ஆசை காட்டுகிறார் கருணாநிதி. முதலாவதாக, தமிழீழப் போராட்டம் என்பது இன விடுதலைக்கான போராட்டமே தவிர, பதவிப் போட்டியன்று. சிங்களப் பேரினவாத அரசமைப்பிற்கு உட்பட்டு ஒரு தமிழர் பதவிக்கு வருவதால் தமிழினத்துக்கு கிடைக்கப் போவது ஒன்றுமில்லை. லட்சுமண் கதிர்காமர் சிறிலங்காவின் அயலுறவுத் துறை அமைச்சராக இருந்ததால் ஈழத் தமிழினத்திற்கு என்ன கிடைத்தது? பார்க்கப் போனால் அவரைக் காட்டி உலகை ஏமாற்ற சந்திரிகாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அவ்வளவே.




கதிர்காமர் அல்லது வேறொரு தமிழர் குடியரசு தலைவராகவோ தலைமை அமைச்சராகவோ (கற்பனைதான்) இருந்தாலும் இதே நிலைதான்!இந்தியாவில் அப்துல் கலாம் என்ற தமிழர் குடியரசு தலைவராக பொறுப்பேற்றதாலேயே இந்தியக் குடியரசு தமிழ் குடியரசு ஆகிவிட்டதா என்ன? கருணாநிதி தலைமை அமைச்சர் ஆவதாக இருந்தால் (ஆகக் கூடாதா?) தமிழ்நாட்டுக்கு மாநில சுயாட்சி கிடைத்து விடுமா, என்ன? ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்து அமெரிக்க சனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்பதிலும், அந்நாட்டு மக்களின் அரசியல் மகிழ்வதிலும் தவறியதில்லை. அதேபோல் ஒபாமாவின் வெற்றியோடு அமெரிக்கச் சமுதாயத்தில் நிறப் பாகுபாடு ஒழிந்து விடவில்லை, அமெரிக்க அரசின் வல்லாதிக்கச் சாரமும் மறைந்து விடவில்லை (ஆப்கானிஸ்தானில் நடப்பது தெரியும்தானே) என்பதை மறக்க வேண்டாம்.



இங்கே ஒபாமா ஒப்பீடு பொருந்தாது என்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் உண்டு. அங்கே வெள்ளையர்களும் கறுப்பர்களும் அமெரிக்கா என்ற ஒரே தேசத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்க தேசம் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் அங்கு வாழும் பிற இனத்தவர்களுக்கும் சொந்தமானது. இந்த இனங்களுக்கிடையே பாகுபாடு கூடாது, சம உரிமை வேண்டும் என்பது ஒரே தேசத்துக்குள் நடைபெற வேண்டிய மாற்றம். வெள்ளையர் என்பதும் கறுப்பர் என்பதும் மரபினங்களே தவிர, தேசிய இனங்கள் அல்ல. இலங்கைத் தீவில் சிங்களரும் தமிழரும் இருவேறு தேசிய இனங்கள்.



தமிழர் பிரச்சனை என்பது ஒரு தேசிய இனச்சிக்கல். தமிழர்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு தமிழீழம் விடுதலை பெறுவதுதானே தவிர, சிங்கள மேலாதிக்க இலங்கையில் தமிழர்கள் ஒரு சில பதவிகளைப் பெறுவதன்று.கருணாநிதி நினைப்பது போல் என்றாவது ஒரு நாள் தமிழர் ஒருவர் இலங்கை அரசின் தலைமைப் பதவிக்கு வருவதாகவே வைத்துக் கொள்வோம். அதுவரை, தமிழர்கள் சிங்கள ஆதிக்கத்துக்குப் பணிந்து அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும்? இலங்கையில் ஆனாலும் இந்தியாவில் ஆனாலும் மாநில சுயாட்சி என்பதை தேசிய இன விடுதலைக்கு மாற்றாக முன் வைக்கிற நண்பர்களுக்கும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.



சுயாட்சி வழங்கும் கூட்டாட்சி கொள்கை அதனளவில் மோசமானதன்று. வெவ்வேறு தேசிய இனத்தவர் குடியேறி ஒரே ஆங்கில அமெரிக்கத் தேசமாக கலந்து விட்ட போதும், தங்களுக்கான ஒரு கூட்டரசை உருவாக்கிக் கொண்டார்கள். பதி மூன்று நாடுகள் கூடி நிறுவிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யூஎஸ்ஏ) என்னும் கூட்டரசில் இப்போது 50 நாடுகள் உறுப்பு வகிக்கின்றன. பல்வேறு இனத்தவர் கூடி வாழ்வதற்கு ஏற்றதாக புரட்சிப் பேராசான் வி.இ.லெனின் அமெரிக்க அரசமைப்பைப் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



செர்மனி எனும் அய்ரோப்பிய நாடு ஒரே தேசமாக இருந்த போதும் மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கும் கூட்டாட்சி அமைப்பைப் பெற்றுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் ஒவ்வொரு தேசமும் இறைமையுள்ள குடியரசாக இடம் பெற்று, பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட தன்தீர்வு உரிமை (சுயநிர்ணய உரிமை) கொண்டிலங்கிய போதே, உருசியக் குடியரசு தன்னளவில் கூட்டாட்சிக் குடியரசாகவும் திகழ்ந்தது. கூட்டரசு, பெருங்கூட்டரசு போன்ற ஏற்பாடுகள் அவற்றின் உறுப்புகளது சுயாட்சி அல்லது தன்னாட்சியை ஏற்றுக் கொள்கிற அளவில் ஏற்புடைத்தவையே. ஆனால் கூட்டரசை அமைப்பது ஏற்பது என்பதில் தெளிவு வேண்டும். பொதுவாக உறுப்பரசுகள் சேர்ந்து அமைப்பதுதான் கூட்டரசே தவிர, ஓர் அரசு தன்னைக் கூட்டரசாக மாற்றிக் கொண்டு உறுப்பரசுகளுக்குச் சுயாட்சி வழங்குவது கிடையாது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டரசு எவ்வாறு உருவாயிற்று என்பதே இதற்கு சிறந்த வரலாற்றுச் சான்று.



உறுப்பரசுகள் விரும்பிச் சேர்ந்து அமைப்பதே கூட்டரசு என்பதால்தான் அம்பேத்கர் இந்திய அரசைக் கூட்டரசு என்று வரையறுக்க மறுத்தார் என்பதையும், அவரும் அமெரிக்க எடுத்துக்காட்டைக் குறிப்பிட்டார் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.இந்திய அரசமைப்பைக் கூட்டாட்சி அரசமைப்பாக மாற்றுவதற்கோ இப்போதைய அரசமைப்பைக் கைவிட்டுக் கூட்டாட்சி அமைப்பை இயற்றுவதற்கான புதிய அரசமைப்புப் பேரவையை கூட்டுவதற்கோ சட்டப்படியான வழிவகை ஏதும் இல்லை. இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றவோ, புதிய அரசமைப்புப் பேரவை கூட்டவோ இந்திய அரசமைப்பில் எவ்வித வழிவகையும் இல்லை. அதாவது இந்திய அரசமைப்புக்குள் மாநில சுயாட்சி பெறுவதற்கோ, அந்த இலக்கு நோக்கி அடியெடுத்து வைப்பதற்கோ கூட வாய்ப்பில்லை.



இலங்கையின் அரசமைப்பு வெளிப்படையாகவே சிங்களப் பேரினவாத அரசமைப்பு என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த அரசமைப்பின் அடிப்படை கூறுகளைத் திருத்துவதாக இருந்தால் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரு பங்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் போதாது; பொதுசன வாக்கெடுப்பிலும் அத்திருத்தம் ஏற்கப் பெற வேண்டும். இதன் பொருள் தமிழர்களுக்குச் சுயாட்சி வழங்க சிங்களர்களின் ஒப்புதல் தேவை என்பதே. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நின்று விடுதலைப் போராளி தங்கத்துரை முழங்கியது போல், சிங்கள மக்களைப் பேரினவாதச் சிந்தனையிலிருந்து விடுபடச் செய்யவும், அவர்கள் தங்களின் ஆளும் வர்க்கங்களிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடச் செய்யவும் வேண்டுமானால், முதலில் தமிழீழம் விடுதலைப் பெற வேண்டும். தமிழீழ விடுதலையே சிங்கள மக்களின் விடுதலைக்குக் கட்டியம் கூறும்.



விடுதலை பெற்ற இரு தேசங்களும் சேர்ந்து கூட்டரசு அமைப்பது பற்றிக் கருதிப் பார்ப்பதில் தவறில்லை. எனவே, கூட்டாட்சியும் அதன் வழி சுயாட்சியும் விடுதலைக்கு மாற்று வழியோ முதற்படியோ ஆக முடியாது. விடுதலைக்குப் பிறகுதான் அதற்கான வாய்ப்பே வரும். எனவே, கூட்டாட்சி, சுயாட்சிக் கொள்கையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் முதலில் முழுமையான தேசிய விடுதலைக்கு போராட வேண்டும். தமிழீழம் தன் இறைமையை மீட்டுக் கொள்வதற்கு முன்பே, விடுதலைக்கு மாற்றாக சுயாட்சி கேட்கலாம் என்று சொல்வது, சிறைக் கம்பிகளுக்கு வண்ணம் தீட்டும் முன்மொழிவே தவிர வேறில்லை. ஈழத் தமிழ் மக்களை இன்றளவும் இனப் படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ஆத்திரமூட்டும் படி பேசக் கூடாது என்று சொல்வது அம்மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதே ஆகும்.



தமிழீழ மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடியது சிங்கள அரசுக்கு ஆத்திர மூட்டும் செயல் என்றும், அதனால்தான் அவர்கள் இப்படி இன அழிப்புக்கு ஆளானார்கள் என்றும் கருதுகிற கூட்டம் ஒன்று இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதியும் சேர்ந்து விட்டார் போலும்.மகிந்த இராசபட்சரை நோக்கி எய்தும் ஒவ்வொரு கணையும் சொக்கத் தங்கம் சோனியாவையும் தாக்கும் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அவர் தன்னைக் காத்துக் கொள்வதற்காக சோனியாவை காத்து, சோனியாவைக் காப்பதற்காக ராசபட்சரைக் காக்கும் இழிநிலைக்குத் தாழ்ந்து விட்டார். தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை, என்பது மட்டுமல்ல, அந்த விடுதலைக்கான போராட்டம் முடிந்து விடவோ, முற்றாக அழிந்து விடவோ இல்லை.



தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் இதுவரை அடைந்த அரசியல், படையியல் வெற்றிகள் யாவும் ஒரு போர்க்களத் தோல்வியால் காற்றில் கறைந்துபோய் விட மாட்டா. வெற்றியிலிருந்து வீரமெடுத்து தோல்வியிலிருந்து பாடமெடுத்து தமிழீழ மக்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வார்கள்.விடுதலைப் போராட்ட வடிவங்களிலும் அணுகுமுறைகளிலும் சில மாற்றங்கள் தேவை என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால், என்னென்ன மாற்றங்கள் எந்த அளவுக்குத் தேவை என்பதை அம்மக்களும் அவர்கள் அறிந்தேற்றுள்ள இயக்கத் தலைமையையும் தீர்வு செய்ய வேண்டும். சில குறிப்புகளை மட்டும் ஈண்டு தரலாம். தமிழீழ விடுதலை என்ற குறிக்கோளை ஏற்றுக் கொண்டே அதற்காகப் போராடும் தேவையை மறுப்பதும் விடுதலையையே மறுப்பதும் ஒன்றுதான்.



இதேபோல், ஆயுதப் போராட்டம் இல்லை என்று சொல்வதும், அடி முதல் நுனி வரை ஆயுதமேந்தி நிற்கும் பகைவனிடம் சரணடைவதற்கு நிகரானது. இப்படிச் சொல்வது ஆயுதமல்லாத போராட்ட வடிவங்களின் தேவையை மறுப்பதோ குறைத்துக் காட்டுவதோ ஆகாது. நெருக்கடிகளில் பல்வேறு போராட்ட வடிவங்களை முன்னெடுப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.பாலத்தீன விடுதலைப் போரின் ஒரு கட்டத்தில் இண்டிஃபாதா முதன்மை பெற்றது போலவே, தமிழீழத்திலும் போர்க்குணம் வாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் முன்னுக்கு வரக்கூடும். புலம்பெயர் தமிழர்களின் புற ஆதரவு தொடரும் போதே அகப் பங்கேற்பும் முக்கியக் காரணியாக இடம்பெறக் கூடும்.



தமிழீழப் போராட்டத்தின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களில் தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மகத்தானவை. அரசியல் நிலத்தில் இந்த மாற்ற விதைகள் தரப் போகும் விளைச்சல் தமிழீழத்திற்கும் தமிழகத்திற்கும் புது வழிகாட்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும், இந்த விளைச்சலுக்கு உரமிடுவோம்.முள்வேலி முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், யாழ் பாணத்திலும் மற்ற இடங்களிலும் திறந்தவெளிச் சிறை போன்ற சூழல், வதை முகாம்களில் போராளிகள், கொடிய முறையில் கொலை செய்யப்படும் போராட்ட முன்னோடிகள்.



இந்த நிலையில் ஈழ மக்களால் எழுந்து போராட இயலுமா? எந்தக் கொடுமைகளைக் காட்டி இந்த அய்யப்பாடு எழுகிறதோ அந்த கொடுமைகளே அவர்களைப் போராட தூண்டும். பயங்கரவாத ஒழிப்பு என்று சொல்லி அப்போராட்டத்தை ஒடுக்க முடியாத சூழலில் கொடுமைக்கார்கள் அம்பலப்பட்டு தனிமைப்படுவார்கள். உலக அளவில் மட்டுமின்றி, சிங்கள தேசம் என்ற அளவிலும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகள் தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு துணை செய்யும்.மகிந்த, கோத்தபய, பசில் இராசபட்சர் கும்பலும், சரத் பொன் சேகாவும் கூர் நகமும் கொடும் பல்லும் கொலை வெறியும் கொண்ட சிங்கங்களாகத் தெரிந்தாலும் வரலாற்று நோக்கில் வெறும் அட்டைச் சிங்கங்களே என்பதை மறக்க வேண்டாம். இந்த பாசிசக் கும்பல் தமிழ் மக்கள் மீது தங்கு தடையின்றி இன அழிப்புப் போர் நடத்துவதற்காக எப்படியெல்லாம் சிங்கள மக்களின் சனநாயக உரிமைகளை மிதித்து நசுக்கியது என்பதற்கு லசந்த விக்கிரமதுங்கா போன்றவர்களின் சாவுச் சாற்றுரைகளே சான்று.



இந்தக் கொடிய அடக்குமுறையின் வாழ்நாள் நீண்டு செல்ல முடியாது. சிங்கள மக்களின் சனநாயக உரிமைப் போராட்டம் நேரடியாகவும் சுற்றடியாகவும் தமிழ் மக்களின் மீளெழுச்சிக்கு துணை செய்யும் என்பது நம் நம்பிக்கை. ஆனால், இதன் பொருள்: தமிழீழ விடுதலை சிங்கள மக்களிடம் தங்கி நிற்கிறது என்பதன்று. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி சிறிலங்காவின் சனநாயகப் புரட்சியினது வெற்றியைப் பொறுத்தது என்பதாகும். அப்படி ஒன்றுக்கொன்று எந்த சார்புறவும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டமும் சிங்கள சனநாயக போராட்டமும் ஒன்றுக்கொன்று துணை செய்யும் வரலாற்றுப் போக்குக்கு இனிவரும் காலத்தில் கூடுதலான பங்கிருக்கும் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.ஒவ்வொரு தேசிய விடுதலைப் போராட்டத்திலும் முதன்மை ஆற்றல் விடுதலை தேவைப்படும் நிலையில் உள்ள மக்களே, ஈழத்திலும் இப்படித்தான்.



தமிழீழ மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாறும் கருத்துக்குரியது. மேலை நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் போரினால் உள்நாட்டளவில் புலம் பெயர்ந்த மக்களுக்காக உதவிப் பொருள்களைத் திரட்டி ஒரு கப்பலில் அனுப்பி வைத்த போது அதற்கு வணங்கா மண் என்று பெயரிட்டதை அறிவோம். அது எந்த அயலானுக்கும் பணிய மறுத்த வன்னி நிலத்தின் வரலாற்றுப் பெயர். அது வணங்கா மண் என்பதை வெள்ளையர்கள் பட்டறிந்தார்கள். இந்தியாவும் அமைதிப் படையின் பெயரால் ஈழத்துக்குள் மூக்கை நுழைத்து வணங்கா மண்ணில் வாங்கிக் கட்டியது அண்மைக்கால வரலாறு. வணங்கா மண்ணில் சிங்களம் சூடுபட்டது பலமுறை. வன்னி நிலமே தமிழீழத்தின் இதயம். சிங்களக் கொடுவாள் இந்த இதயத்தைத் துளைத்து நிற்கிறது.



இம்முறை வணங்கா மண்ணை வணங்கச் செய்து விட்டதாகப் பகைவன் மனப்பால் குடிக்கலாம். ஆனால், உள்நாட்டு அகதி முகாமில் இளம் பெண்ணை இடித்துச் செல்ல முயன்ற சிங்களப் பட்டாளத்தினரை முதியோர் உட்பட அனைவரும் சேர்ந்து எதிர்த்ததும், அதனால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதுமான நிகழ்ச்சி; முகாம் ஒன்றின் பெருமர உச்சியில் இரவில் பறக்க விடப்பட்ட புலிக்கொடி விடியலை வரவேற்ற நிகழ்ச்சி; முடங்க மறுக்கும் எதிர்ப்பின் வெளிப்பாடான இவையும் வெளியில் வராத இன்னும் பல நிகழ்ச்சிகளும் வன்னி மண் இன்னும் வணங்கா மண் என்பதை உணர்த்தும்.போரை நிறுத்தச் சொல்லி இறுதிக் கட்டத்தில் புலம் பெயர் தமிழர்கள் நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அடங்காப் பற்று என்று பெயரிட்டிருந்தனர்.



அது என்ன அடங்காப் பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, தேசப்பற்று அடங்காமலிருப்பதையே இப்படிக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால், இதற்கு வேறொரு வரலாறு உண்டு. பற்று என்பது மன்னராட்சிக்கு உட்பட்ட குறு நிலத்தை குறிக்கும் சொல். பற்றுதான் பட்டு (பாளையப்பட்டு), பத்து (கோவில்பத்து) என்றெல்லாம் மருவியிருக்க கூடும். பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்ட பொம்மனைப் போல் வன்னி நிலத்தில் அரசோச்சிய கடைசித் தமிழ் மன்னன் பண்டாரக வன்னியன் (1777-1811) அயலாருக்கு அடங்க மறுத்ததால் அவரது வன்னிநாடு அடங்காப்பற்று எனப் பெயர் பெற்றது. வன்னி மட்டுமன்று, வீரமும் ஈகமும் வற்றாது ஊற்றெடுக்கும் தமிழீழமே வணங்கா மண், அடங்காப் பற்றுதான் என்பதை வரலாறு மெய்பிக்கும்.



(நிறைவு)
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen