சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு குரல் கொடுக்க முடியாத சர்வதேசம்; எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய சரத் பொன்சேகா இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்ததான பொதுவான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதாகியிருக்கிறார்.
இவரது கைதும் அதற்கான காரணங்களும் அரசாங்கத்தினால் கூறப்படுவது போன்று சரியானதாக இருக்குமா என்பது கேள்வியே. ஆனால் இவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் கையாண்டிருக்கும் வழிமுறைகள் வெளியுலகினால் விமர்சிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது.
“சரத் பொன்சேகா அரசியலில் நிலைத்திருக்க விரும்பினால் பல்;வேறு அக்னிப் பரீட்சைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைக் பொறுத்தே அரசின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் அமையப் போகின்றன.” என்று ஜனாதிபதித் தேர்திலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்த பின்னர்- இரு வாரங்களுக்கு முன்னர் இதே பத்தியில் கூறப்படட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சரத் பொன்சேகா அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ள முடிவு செய்திருந்தால் பெரும்பாலும் அவருக்கு இன்றைய நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்காது.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்றதும், தனது பாதுகாப்புக்கு அரசியலில் நீடிப்பது அவசியமானது எனக் கருதியிருந்தார். அதுமட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடக் கூடிய பல கருத்துகளை தெரிவித்ததன் விளைவாகவே அவரது கைது இடம்பெற்றிருக்கிறது.
சரத் பொன்சேகாவை தமக்குச் சவாலான ஒருவராக மகிந்த ராஜபக்ஸ கருதியிருந்தாலோ- அல்லது தனக்கு ஆபத்து என்று கருதியிருந்தாலோ அவரைத் தேர்தலில் போட்டியிடாமலே செய்திருக்க முடியும். ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை ஏற்காமல் இரண்டு வாரங்கள் இழுத்தடித்திருந்தாலே அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ஆனால் அப்படிச் செய்ய அரசாங்கம் முனையவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள அவர் முடிவு செய்திருந்தால் பல்வேறு சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதே உண்மை.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம் இப்போது இலங்கையில் புதியதொரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளது.சர்வதேச ரீதியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத் பொன்சேகாவை விடுவிக்கும்படி எந்தவொரு நாடுமே அழுத்தம் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஐ.நா செயலர் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசியிருந்தார். ஆனால் சரத் பொன்சேகாவை விடுவிக்கும்படி அவர் கூறவில்லை. அது போலவே பல நாடுகள் இதுகுறித்து அரசாங்கத்துடன் பேசியிருந்தன. எதுவுமே சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரவில்லை.
அரசியலில் நீடித்திருந்தால் எந்த வெளிநாடுகளின் மூலம் தனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று கருதினாரோ அவையெல்லாம் இன்று எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. சரத் பொன்சேகாவின் கைதுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள காரணம் வெளிநாடுகளால் வாய்திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கவலை தெரிவித்தது, இந்தியா கவலை வெளியிட்டது- ஆனால் எந்தவொரு கட்டத்திலேனும் அவர்கள் சரத் பொன்சேகாவை விடுவித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றும் படி கோரவில்லை. சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தும்படியும், நீதியான முறையில் விசாரணைகளை நடத்தும் படியும் தான் சர்வதேச சமூகம் கோரியிருக்கிறது.
மியன்மரில் ஆங் சாங் சூஜியை கைது செய்தபோது உலகநாடுகள் கண்டனம் செய்து கருத்து வெளியிட்டது போன்ற சாதகமான நிலை சரத் பொன்சேகாவுக்கு இருக்கவில்லை.
இதற்குக் காரணம் சரத் பொன்சேகா மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் கோணம் வித்தியாசமானது. அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைது செய்ததாகக் காட்டிக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. அது அவருக்கு சர்வதேச ரீதியாக ஆதரவைப் பெற்றுக் கொடுத்து விடும் என்ற அச்சம் அரசுக்கு இருக்கவே செய்தது. அதனால் தான் எவருமே வாய்திறக்க முடியாத வகையில் இராணுவச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம்.
இராணுவத் தளபதியாக இருந்த போது செய்த குற்றங்கள் தொடர்பாகவே அவரது கைது இடம்பெற்றிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. பாதுகாப்புச் சபையின் இரகசியங்களை வெளியிட்டது, ஆயுதக் கொள்வனவுகளில் ஊழல் செய்தது, படையினருக்குத் துரோகம் இழைத்தது, அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தது, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தது என்று குற்றசாட்டுகளின் பட்டியல் நீளமாக இருக்கிறது.
அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துகளை வெளியிடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குற்றசாட்டை சரத் பொன்சேகா மீது சுமத்துவதையும் காண முடிகிறது. ஆனால் அவர் மீது எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது- எப்படி அவருக்குத் தீர்ப்பு அமையப் போகிறது என்ற கேள்விகளுக்கு சரியான விடை இன்னமும் இல்லை.
இராணுவத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை செய்த பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதா இல்லையா என்று முடிவெடுக்கப் போவதாகத் தகவல். அதேவேளை இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக ஆயுள்தண்டனையோ- மரணதண்டனையோ கூட விதிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர்
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவோ அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையை இராணுவ நீதிமன்றம் மூலம் வழங்க முடியும் என்று கூறியிருக்கிறார். அதேவேளை ஓய்வுபெற்ற அவரை எப்படி இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று எழுந்த கேள்விகளுக்கும் இராணுவச் சட்டத்தை தூக்கி காண்பித்துப் பதில் கொடுத்திருக்கிறது அரசாங்கம். இராணுவச் சட்டத்தின் 57வது பிரிவின் படி ஓய்வுபெற்ற ஆறு மாதங்களுக்குள் எந்தவொரு அதிகாரி மீதும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை நடத்த முடியும். சரத் பொன்சேகா ஓய்வுபெற்று ஆறு மாதங்கள் ஆகவில்லை. ஆனால் அவர் இராணுவச் சடடங்களின் கீழ் கடைசி நேரத்தில் பதவியில் இருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
கடந்த ஜுலை 31ம் திகதி அவர் இராணுவ சேவையில் இருந்து விலகி- பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார். அவர் மீது எப்படி இராணுவச் சட்டத்தின கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரணில். எனினும் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்து- சேவை நீடிப்பைப் பெற்றபடியே தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகா விடயத்தில் அவரை எந்தவகையிலும தப்பவிடக் கூடாது என்ற தீர்மானத்துடனேயே அரசாங்கம் நடவடிக்கைளில் இறங்கியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. அரைகுறையாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதானால் அதை முன்னரே செய்திருக்க முடியும். அப்படி ஆகிவிடக் கூடாது என்பதால் தான் மிகவும் நிதானமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இது அரசாங்த்துக்கு சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
சரத் பொன்சேகா விடயத்தில் தலையிடுவதற்கு- அவரது விடுதலை குறித்து அழுத்தங்களைக் கொடுப்பதற்கு வெளிநாடுகளால் முடியாது போனாலும் அவர் மீதான இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கும்.போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் எதிர்காலம் குறித்து சர்வதேச ரீதியாக கட்டப்பட்டிருந்த ஒரு கற்பனைக் கோட்டையின் அத்திவாரத்தையே இப்போதைய சம்பவங்கள் அசைக்க ஆரம்பித்து விட்டன.
சரத் பொன்சேகா மீதான நடவடிக்கை சரியா தவறா என்ற விடயங்கள் ஒரு புறத்தில் இருக்க, அவரது கைது ஒரு குழப்பத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளது உண்மை.அதுமட்டுமன்றி இது போரைக் காரணம் காட்டி இராணுவம் அபரிமிதமாக வளர்த்தெடுக்கப்பட்டதன் பெறுபேறு என்பது மிகையானதொரு கருத்தாக இருக்க முடியாது.
0 Kommentare:
Kommentar veröffentlichen