நடுக் காட்டுக்குள் படப்பிடிப்பு. ஆர்ட்டிலரி குண்டுகள் திடீர் திடீரென
வந்து விழ... நடித்துக் கொண்டிருக்கும்போதே பொத் பொத் என சிலர்
அங்கேயே செத்து விழுகிறார்கள். சில மணி நேரம் கழித்து அதே காட்டில்
இன்னொரு இடத்தில் மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு.
இப்படியாக எட்டு மாதங்கள் ஈழக் காட்டுக்குள் தங்கி ‘எல்லாளன்’ திரைப்படப்
படப்பிடிப்பை முடித்து மீண்டும் உயிர் திரும்பி சென்னை வந்திருக்கிறார்
சந்தோஷ். ‘எல்லாளன்’ படத்தின் ஒளிப்பதிவாளர்... மட்டுமல்லாது அதன் பல
பணிகளையும் மேற்கொண்ட ஒரே தமிழகத் தமிழர்.
எல்லாளன்?
தமிழ், சிங்களம் என ஒட்டுமொத்த இலங்கை-யையும் கட்டி ஆண்ட தமிழ்
மன்னன்தான் எல்லாளன். சிங்கள மன்னர்களால் தோற்கடிக்க முடியாத தமிழ்ப்
பேரரசனாய் விளங்கிய எல்லாளனை போர் நெறிமுறைகளை மீறி (சிங்களர்களின்
பாரம்பரியமே இப்படித்தானோ) கொல்கிறான் துட்ட கைமு என்ற சிங்களன்.
எல்லாளனைக் கொன்ற பிறகுதான்... ‘ஐயோ, முறை தவறிவிட்டோமே’ என்ற குற்ற
உணர்ச்சியால் வாடிய துட்ட கைமு, இலங்கையின் அனுராதபுரம் பகுதியில்
எல்லாளனுக்கு சிலை வைக்கிறான். இது வரலாற்று உண்மை.
2006 ல்... அதே அனுராதபுரத்தில் இருந்த சிங்கள வான்படைத்
தலைமையகத்திலிருந்து போர் விமானங்கள் சீறி வந்து ஈழத்திலுள்ள செஞ்சோலை
குழந்தைகள் காப்பகத்தில் குண்டுகள் போட்டு பல பிஞ்சுகளை ரத்தச் சகதியில்
பிய்த்து எறிந்து கொன்றன. இந்த சிங்களக் கொடூரத்துக்குப் பதிலடி தரும்
வகையில்... அனுராதபுரம் வான் படைத் தலைமையகம் மீது 21 கரும்புலிகள்
தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி... அங்கிருந்த ஒட்டு மொத்த 27
விமானங்களையும் ஆயுதங்களையும் அழித்தொழித்ததுதான் ‘எல்லாளன்
நடவடிக்கை’!
இதை மையமாக வைத்து தமிழீழத் திரைப்படப் பிரிவினர் உருவாக்கிய திரைப்படமே
‘எல்லாளன்’. கனடாவில் வெற்றிகரமாக முப்பது நாட்களைக் கடந்து ஓடிக்
கொண்டிருக்கிறது ‘எல்லாளன்’. இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷை
சந்தித்தோம்.
‘‘நீங்கள் ‘எல்லாளன்’ படத்தில் பணியாற்ற தேர்வுசெய்யப்பட்டது எப்படி?’’
‘‘ஏற்கெனவே ஈழத் தமிழர்களின் உளவியல் பாதிப்புகளை உணர்த்தும் வகையில்
‘விழி’, ‘கனவுக் கொலையாளி’ என்ற இரண்டு குறும்படங்களை நான்
இயக்கியிருக்கிறேன். இவை இரண்டுமே சர்வதேச விருதுகளையும் பெற்றன. அந்தப்
படங்களைப் பார்த்த ‘தமிழ் ஈழ திரைப்பட பிரிவு’ என்னை இந்த படத்தில்
பணியாற்ற அழைத்தது. கடந்த 2008&ம் ஆண்டு ஜனவரியில் ஈழத்துக்கு
சட்டபூர்வமாகச் சென்று, எட்டு மாதங்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு,
போர் உச்சகட்டத்தை எட்டிய செப்டம்பர் 2008&ல் சட்டபூர்வமாக சென்னை
திரும்பினேன்’’
‘‘இந்தப் படத்துக்காக எப்படித் தயாரானீர்கள்?’’
‘‘ஜனவரி 2008&ல் சென்றாலும் பிப்ர-வரியில்தான் படப்பிடிப்பை
ஆரம்பித்தோம். அதுவரை படப்பிடிப்பு தயாரிப்புப் பணிகள்தான். முதலில்,
‘எல்லாளன்’ நடவடிக்கையில் ஈடுபட்ட 21 கரும்புலிகளின் புகைப்படங்களை
வைத்து அவர்களைப் போன்றே தோற்றம் கொண்டவர்களை தேர்வு செய்தோம்.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்களில் என்னைத் தவிர யாருமே தொழில் முறை
சினிமா கலைஞர்கள் கிடையாது. மேலும், படப்பிடிப்புக்காக டம்மி ஆயுதங்கள்
இருக்கிறதா என நான் கேட்டபோது, அவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
டம்மியா... இங்கே எல்லாமே ஒரிஜினல்தான் என்று சொல்லி நிஜ ஆயுதங்களையே
பயன்படுத்தினார்கள். அதுபோல, அனுராதபுரம் சிங்கள விமானத் தளத்தை
அப்படியே முல்லைத் தீவில் செட் போட்டிருந்தார்கள் தமிழ் ஈழத் திரைப்படப்
பிரிவினர்’’
‘‘படப்பிடிப்பு அனுபவங்கள்?’’
‘‘படப்பிடிப்பின் ஏழாவது நாள்... திடீரென ஆர்ட்டிலரி குண்டுகள்
சரமாரியாய் எங்கள் மீது வந்துவிழ... ‘எல்லாளன்’ ஆபரேஷனை முன்னின்று
நடத்திய லெப்டினென்ட் கேர்னல் இளங்கோவின் பாத்திரத்தை
செய்துகொண்டிருந்த மேஜர் புகழ்மாறன், நிதர்சனம் திரைப்பட இயக்கத்தின்
துணைப் பொறுப்பாளர் தவா உள்ளிட்ட நால்வர் என் கண்ணெதிரிலேயே உயிரிழந்து
விழுந்தனர். அதன் பின் ஷெல்லடிகளும், குண்டுச் சத்தங்களும் மரணங்களும்
பழகிப் போய்விட்டன.
அன்றைக்கு எடுத்த காட்சிகளை அடர்ந்த காட்டுக்குள் ஜெனரேட்டரை ஓட்டி உடனே
கம்ப்யூட்டரில் எடிட் செய்து, அன்றே டப்பிங் பேசி முடித்து-விடுவோம்.
கடைசியில் படப்பிடிப்பு முடிவடையும்போது, என்னுடன் பணியாற்றிய 40
சதவிகிதம் பேர் உயிருடன் இல்லை என்பதை இப்போது நினைத்தாலும் கண்ணீர்
துளிர்க்கிறது’’
‘‘முழு படத்தையும் பிரபாகரன் பார்த்தாரா?’’
‘‘தனது தளபதிகளோடு அமர்ந்து ‘எல்லாளன்’ படத்தைப் பார்த்துப்
பாராட்டியதோடு, சில திருத்தங்களையும் சொல்லி-யிருக்கிறார். அந்த 21
கரும்புலிகளில் வீமன் என்ற கரும்புலி, நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக,
தனது மருமகப்பிள்ளையான சிறுவனோடு கடைக்குச் செல்கிறார். அங்கே, ‘மாமா...
எனக்கு சாக்லேட் வாங்கித் தா’ என கேட்கிறான் அந்தச் சிறுவன். வீமனோ,
‘சாக்லேட் வேண்டாம். ரொட்டி சாப்பிடு’ என்கிறார். இந்தக் காட்சியைப்
பார்த்த பிரபாகரன், ‘ஒரு போராளி என்றும் தனது விருப்பத்தை அடுத்தவர்
மீது திணிக்கக் கூடாது. இந்தக் காட்சியமைப்பில் அதற்கேற்றவாறு மாற்றம்
செய்யுங்கள்’ என்று கூறியதாகத் தகவல் வந்தது. பின் அந்த உரையாடலில் சில
மாற்றம் செய்தோம்’’
‘‘ ‘எல்லாளன்’ ரிலீஸாகிவிட்டது. இப்போது உங்கள் மனநிலை?’’
‘‘பட்ட துன்பம், பார்த்த துன்பம் இவற்றுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்
இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை. உலகில் முதன்முதலாக போராளிக் குழு
தன் போராட்டத்தை முழு திரைப்படமாக எடுத்து வெளியிடும், வரலாற்றுப் புகழ்
பெற்ற வெற்றிகரமான முதல் முயற்சி ‘எல்லாளன்’. இதை சர்வதேசத்துக்குக்
கொண்டு சென்று இப்போது தேவைப்படும் உலகத் தமிழர் எழுச்சிக்கு முழு
அளவில் பயன்படுத்தவில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்வேன்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் நார்வேயில் ‘ஓஸ்லோ’ உலகத் திரைப்படத்
திருவிழா நடந்தது. அதில், ஈழத் தமிழர்கள் இயக்கிய சில படங்கள்
திரையிடப்பட்டன. ஏனோ, ‘எல்லாளன்’ திரையிடப்படவில்லை. சிலர் எல்லாளனை
முடக்க முயல்கிறார்கள் என கேள்விப்பட்டு அழுகை வருகிறது. அனைவரும்
இணைந்து எடுத்ததால் ‘இயக்கம் & தமிழன்’ என்றுதான் இப்படத்தில்
போட்டிருக்கிறோம். நமக்குள் உள்ள சிறு வேறுபாடுகளை ஒதுக்கி
வைத்துவிட்டு தமிழர் மற்றும் சர்வதேசத்தினர் எல்லாருக்கும் எல்லாளனை
எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை வேண்டுகோள்... எல்லாம்!’’
மெல்லிய குரலில் பெருமூச்சோடு முடிக்கிறார் சந்தோஷ்!
 RSS Feed
 RSS Feed Twitter
 Twitter 

 


 Samstag, Februar 20, 2010
Samstag, Februar 20, 2010
 வானதி
வானதி

 
 
 



0 Kommentare:
Kommentar veröffentlichen