Dienstag, 23. Februar 2010

உலக மொழிகள் வரலாற்றில் முதன்மையாகத் திகழ்வது தமிழ்

உலக மொழிகள் வரலாற்றில் முதன்மையாகத் திகழ்கிறது தமிழ் மொழி என்று புகழாரம் சூட்டியுள்ளார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன்.




தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை,​​ சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கருத்தரங்கம் தொடங்கியது.



இதற்கு தலைமை வகித்து ராஜேந்திரன் பேசுகையில்,



எழுத்துகள் இல்லாத பல மொழிகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன.​ ஆனால்,​​ மொழியுடன் எழுத்து வரலாறும் தமிழுக்கு உள்ளது.​ ஒவ்வொரு மொழிக்கும்,​​ இலக்கியத்துக்கும் வாழ்வியல் முறையில் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றார்.



முன்னாள் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் செ. ராசு பேசுகையில்,



கோயில்களில் ஆய்வு செய்த கல்வெட்டு செய்திகளையும்,​​ ஆய்வு செய்யப்படாத கல்வெட்டுகளை ஆய்வு செய்து அந்தச் செய்திகளையும் வெளிக்கொண்டு வரும் பணியில் தமிழக அறநிலையத் துறை ஈடுபட வேண்டும்.



பழைமைகளைப் பாதுகாக்கும் வகையிலும்,​​ வருங்கால சந்ததியினர் தொன்மை நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் உள்ள வரலாற்று கல்வெட்டுக்களை ஒவ்வொரு வட்டம் மற்றும் பள்ளி,​​ கல்லூரி,​​ பல்கலைக்கழகங்களில் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றார்.



தமிழக அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் பேசுகையில்,



தமிழகத்தில் பல ஆண்டுகளாக நீர் அகழாய்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.​ சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகார் கடல் பகுதியில் நீர் அகழாய்வு மேற்கொண்ட போது கடலில் 5 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பின் 5 கட்டட அமைப்புகளும்,​​ 18-ம் நூற்றாண்டில் மூழ்கிய கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.



தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்களின் வலையில் பல அறிய பொருள்கள் சிக்குகின்றன.​ குறிப்பாக,​​ கன்னியாகுமரியில் அதிகமாக இத்தகைய அரிய வகைப் பொருள்கள் கிடைக்கின்றன.​ எனவே,​​ இப் பகுதியில் உறுதியாக நீர் அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.​



மேலும் நாகப்பட்டினம்,​​ பூம்புகார்,​​ தொண்டி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும்.



பிராமி எழுத்துகள் தமிழ் எழுத்துகளே.​ ஆகையால்,​​ இந்த எழுத்தை இனி தமிழ் பிராமி என உச்சரிக்கும் வழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும்.​ பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் அறிய பொருள்களை ஆய்வு செய்ய தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரசாயன ஆய்வுக் கூடம் அமைக்க வேண்டும் என்றார்.



தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினரும்,​​ எண்பேராய உறுப்பினருமான து.​ ரவிக்குமார் பேசுகையில்,



வரலாற்றை எழுத நம்பகத்தன்மையாக இருப்பதும்,​​ காலத்தைக் குறிக்கவும் கல்வெட்டுகள் உதவுகின்றன.​ இருப்பினும்,​​ காலத்தைக் குறிப்பிடுவதில் சில வேறுபாடுகள் காணப்படுவதால்,​​ இதுகுறித்த ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.



புதிய கருத்துகளைக் கண்டறிவதற்கான வழிவகைகள் தற்போதை கல்வித் திட்டத்தில் இல்லை.​ அதனால்,​​ புதியவற்றைக் கண்டறிவதில் கல்விப்புலம் பின்தங்கி உள்ளது.



உலகளவில் தமிழகத்தில்தான் அதிக கல்வெட்டுகள் கிடைக்கின்றன.​ தஞ்சை பெரிய கோயிலில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய பகுதிகள் உள்ளன.​ அவற்றை ஆய்வு செய்து பல புதிய வரலாற்றுக் கருத்துகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.



கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 55 பொருண்மைகளில் ஆய்வரங்கம் நடைபெறவுள்ளன.​ 6,500 க்கும் மேற்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் வந்துள்ளன.​ அவற்றை ஆய்வு செய்யப் போதுமான வல்லுநர்கள் இல்லை என்றார்.











--

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!

அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்



--
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen