தமிழ்மக்களின் பேரம் பேசும் பலம் பொதுத்தேர்தலினால் சிதையுமா?
விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்கப் போவதாக என்று அரசாங்கம் முன்னர் கூறிவந்தது. ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல்தீர்வு பற்றிய எந்தவொரு தெளிவான கருத்தையும் அரசாங்கம தெரிவிக்கவில்லை.
ஏதோ 13வது திருத்தம் என்று கூறியது-மாகாணசைபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்யலாம் என்றது- இப்போதெல்லாம் அதுபற்றிப் பேசுவதேற்கு கிடையாது.
அரசதரப்புத் தான் இப்படியென்றால் அதற்கு அழுத்தம் கொடுக்கின்ற நிலையில் எந்தவொரு தமிழ்கட்சி கூட இல்லாது போய்விட்டதாகவே தமிழ்மக்களால் உணரப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்குப் பிறகு தமிழ்மக்களின் சார்பில் பேசவல்ல சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்து வந்தது.
கடந்த பொதுத்தேர்தலில் 22 ஆசனங்களை வென்றிருந்ததால் அதற்கு அந்தத் தகுதி இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய போக்கு, அது தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குத் துணையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.
அதுமட்டுமன்றி எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியுமே தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நியாயானதும், ஆக்கபூர்வமானதுமான முயற்சிகளில் இறங்கப் போவதில்லை என்பதும் தெளிவாகப் புரியத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் புலிகளைக் காரணம் காட்டி அரசதரப்பு, தமிழ்மக்களின் உரிமைகளை வழங்க மறுத்து வந்தது.
அதுபோலவே புலிகள் தான் எதற்கும் இணங்குகிறார்களில்லை என்று கூறிக்கொண்டே தமிழ்க்கட்சிகள் பலவும் ஒதுங்கி நின்று விமர்சித்து வந்தன. ஆனால் இப்போது புலிகள் இல்லை.
இருந்தபோதும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு உருப்படியான காரியமாற்ற எந்தவொரு அரசியல்கட்சியும் தயாராகவில்லை என்பதது வெளிப்படை.
ஒவ்வொரு கட்சியும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பாடுபடப் போவதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனவே தவிர, அவையனைத்தும் செயலளவில் இறங்கத் தயாராக இல்லை.
தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் தேவைப்படுவது தமிழ்க் கட்சிகளிடையேயான ஒன்றுமை. அதைச் செய்வதற்கு எந்தத் தமிழ்க்கட்சியுமே தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபுறத்தில் உட்கட்சிப் பூசல்களைத் தீர்க்க முடியாமல் திண்டாடுகிறது.
இன்னொரு புறத்தில் புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சிறி ரெலோ, ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றன. இவையெதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் சேரத் தயாராகவில்லை.
அதேவேளை தமக்கிடையில் கூட்டணி அமைக்கவும் தயாரில்லை. இவை அனைத்துமே தனித்து நின்று இந்தத் தேர்தலில் முட்டிமோதப் போகின்றன. அதிகளவு அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மோதுகின்ற களமாக இந்தமுறை பொதுத்தேர்தல் அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 15 சுயேட்சைக் குழுக்கள் வரை போட்டியிடப் போவதாகத் தகவல். அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மக்களின் வாக்களைக் குறிவைப்பவை என்பது தான் முக்கியம். இந்தளவுக்கும் அங்கு குறைந்தளவிலான தமிழ் வாக்காளர்களே இருக்கின்றனர்.
கடந்தமுறை அம்பாறையில் 4 முஸ்லிம்கள், இரு சிங்களவர்கள், தமிழர ஒருவர் என்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். ஆனால் இந்தமுறை அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஈரோஸ், ஈபிடிபி, போன்ற தமிழ்க் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐதேக போன்ற பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளைக்; குறிவைத்துள்ளன.
இதன்விளைவாக அம்பாறையில் இந்தமுறை தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பறிபோகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்றே மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியிலும் கூட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்.
யாழ்ப்பாணத்தில் கூட ஏராளமாக அணிகள் போட்டியில் குதிக்கப் போவதாகத் தெரிகிறது. இப்படி அதிகளவிலான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கும்போது ஆசனங்கள் ஒருசில கடசிகளால் மட்டும் பகிரப்பட முடியாத நிலை ஏற்படும்.
இதன்மூலம் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து எந்வொரு தரப்பினாலும் அழுத்தமாகக் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதிகளவு கட்சிகள் தேர்தலில் இறங்குவதால் மட்டும் ஜனநாயகம் தோன்றிவிடாது. அது தமிழ்மக்களைப் பலவீனமான சக்தியாக எடைபோடுவதற்கே வழிகோலும்.
அத்துடன் தேசியப் பட்டியல் மூலம் கடந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் இந்தத் தேர்தலில் அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்டு வாக்குகள் சிதறடிக்கப்பட்டால் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்ச வாக்குகளை எந்தவொரு தமிழ்க்கட்சியாலும் பெறமுடியாது போகலாம்.
இது இன்னொரு வகையில் தமிழரின் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும். தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அணியாகப் போட்டியிட்டால் அது வடக்கு கிழக்கில் பலமானதொரு சக்தியாக எழுந்திருக்க முடியும்.
அது அரசுக்கு ஒரு பலமான அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் இருக்கும். அதாவது தமிழர் பிரச்சினை தட்டிக் கழிக்கப்படக் கூடியதொன்றல்ல என்ற செய்தியை சர்வதேசத்துக்கும் தெளிவுபடுத்துவதாக அமையும்.
அந்த நிலையில் இருந்து விலகி தனித்தனியே உதிரிகளாகப் போட்டியில் நின்று வாக்குகள் பிரிப்பதன் மூலம் ஒரு சில ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிகளால் ஒருபோதும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.
அதற்கான வாய்ப்புகளும் கிடைக்காது. உதிரிகளாக இருக்கும் கட்சிகளை தமிழரின் பிரதிநிதிகளாகக் கருதி ஒருபோதும் அரசு பேச்சு நடத்தப் போவதில்லை. அவர்களை வளைத்துப் போட்டுத் தன்பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளைப் பலவீனப்படுத்தி- அதைப் பின்நோக்கித் தள்ளும் வகையிலேயே தமிழ்க்கட்சிகளின் இன்றைய நிலைப்பாடுகள் அமைந்துள்ளன. தமிழ்க்கட்சிகள் தமிழரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் தீர்மானத்திலும்- கொள்கையிலும் உறுதியாக இருக்குமேயானால் ஒரே அணியாக இந்தப் பொதுத்தேர்தலில் மட்டும் களமிறங்கினால் போதும். அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் விட்டுக் கொடுப்புடன் நடந்து இதைச் சாத்தியமாக்கினால் போதும்- அரசாங்கத்தை நிச்சயம் வழிக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு இழுத்துவர முடியும்.
ஆனால் அது சாத்தியமற்றது என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்தநிலையில் தமிழரின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குக் குறுக்கே நின்றது யார்- நிற்பது யார் என்ற உண்மை தமிழ்மக்களால் நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாகியுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்?
எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும்.
இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன.
அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மோதும் மாவட்டமாக சாதனை படைத்துள்ளது. இங்கு 66 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
இவற்றின் சார்பில் மொத்தம் 660 வேட்பாளர்கள் ஏழு ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.
அதே வேளை இந்தப் பொதுத் தேர்தலில் சிறிலங்கா முழுவதும் 7265 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 196 பேர் மட்டுமே தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுகள் போட்டியிடுவதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பாறையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதும் அங்கு பெரும் எண்ணிக்கையான கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இறங்கியிருப்பதால் வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் பறி போகலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளை கடந்த முறை திருகோணமலையில் இரு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவான போதும் இம் முறை ஒருவர் கூடத் தெரிவாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிக கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதியைப் பெறுவது கூட நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக இணைப்பு:
இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல்கட்சிகள், 12 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 324 வேட்பாளர்க்ளும்,
வன்னி மாவட்டத்தில் 18 அரசியல்கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 308 வேட்பாளர்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 27 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 360 வேட்பாளர்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 14 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 217 வேட்பாளரக்ளும்,
அம்பாறை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள் 49 சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 660 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
- கொழும்பிலிருந்து கபில் -
தியாகமும் சுயநலம் இன்றிய பொதுநலம் பேணும் தலைமை வேண்டும் என ஏங்கும் தமிழினம்?
-இன்போ தமிழ்
0 Kommentare:
Kommentar veröffentlichen