Sonntag, 28. Februar 2010

புலிகள் மீதான தடையை நீக்கு-கண்மணி.

எந்த ஒரு இயக்கமானாலும் அல்லது எந்த ஒரு நடைமுறையானாலும் அது கடந்த காலத்தின் துகள்களிலிருந்தே நமக்கு கிடைக்கிறது. கடந்த கால படிப்பினைகள் நம்மை எந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அதன்படியே நம்மை முந்திச் செல்ல நாம் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற ஒரு செயலை கையிலெடுக்க தொடங்குகிறோம்.






ஆகவே, நாம் எந்த ஒரு நிகழ்கால அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகளை கருத்தில் எடுத்துக் கொண்டாலும் அவைகளுக்கான வரலாற்று தேவைகளை அதன் அக, புற தன்மைகளை ஊடறிந்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. 1983க்கு பிறகு பிறந்த பிள்ளைகளுக்கு தமிழீழத்தின் தேவைகளைக் குறித்த வரலாற்று தன்மைகளை அதன் குறியீடுகளை கற்றுத்தர வேண்டிய பொறுப்பு அவர்களின் பெற்றோர்களுக்கு உண்டு. நாம் ஏன் ஏதிலிகளானோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களால் களத்திற்கு வந்து எனக்கான ஒரு நாடு வேண்டும் என்று போராட முடியாமல் போகலாம்.



அதேப்போன்றே தாய் தமிழகத்தில் ஒரு நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்த பேரினவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சமரை அதன் தன்மைகளோடு, உண்மைகளோடு புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் புலிகள் மீதான தடையை நீக்கு எனச் சொல்வதற்கு தயக்கம் வந்துவிடும். ஆகவே தாய் தமிழகமானாலும், புலம்பெயர் தமிழ் உறவுகளானாலும் அவர்கள் தமது போராட்ட நிகழ்வுகளை வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் கையிலெடுப்பதே அவர்களுக்கான வெற்றியை ஈட்டும். நாம் எந்த நிலையிலும் தோல்வியே அடையக்கூடாது என்கிற மனப்பான்மை ஒரு உளவியல் நோய் தன்மை. அது தவறானதும் கூட.



காரணம் எந்த ஒரு இயக்கமானாலும் அதில் ஏற்றங்கள், இறக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் என மாறி மாறி தோன்றும். இதை சரியாக புரிந்து கொள்ளாதபோது நமது இலக்கு தோற்றுப்போய்விடும். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை வரலாற்று பார்வையோடுதான் தொடங்கவேண்டும். இது நமது விருப்பம் என்பதற்காக இதை நாம் செய்தோம் என்றால் தோற்றுவிடுவோம். காரணம் விருப்பமானதை எல்லாம் பெற்றுவிடுவது ஒருவித ஆதிக்கச் சிந்தனை. ஆனால் தேவையானதை பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்டுவது ஒரு மாந்தநேய மனம். ஒவ்வொரு மனிதனுக்கும் தமது தேவைகளை பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.



ஒவ்வொரு இனத்திற்கும் தமது தேவைகளை பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது. ஆக, ஒரு தனி மனிதனாக இருந்தாலும், ஒரு இனமாக இருந்தாலும் அதன் தேவைகளை முன்னிருத்தியே அதன் ஒவ்வொரு அசைவும் அமைகிறது, அமைய வேண்டும், அதுதான் நியதி. தமிழீழ விடுதலை போராட்டத்திலும் அந்த போராட்டத்திற்கான தேவை இருந்தது. ஆகவேதான் அது இன்றுவரை உயிரோட்டத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த போராட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு தனிமனித தேவையல்ல. ஒரு வரலாற்றின் தேவை. பன்னெடுங்காலம் வாழ்ந்த ஒரு இனத்தின் இறையாண்மை, ஆளுமையை அங்கீகரிக்கும் ஒரு தேவையாக அது இருக்கிறது. இந்த அடிப்படையிலேயே நாம் தமிழீழ போராட்டத்தின் நகர்வுகளை இன்றுவரை நடந்து முடிந்த தன்மைகளை கனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



உலகெங்கும் இருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழீழம் அமைவது முடியுமா? புலிகள் ஒழிக்கப்பட்டதோடு அதன் உயிரோட்டமும் நிறுத்தப்பட்டு விட்டதே? என்றெல்லாம் பேசுகிறார்கள். இவர்களுக்கு நாம் தெளிவுப்படுத்த, தமிழீழப் போராட்டத்தின் அவசியங்கள், அதன் தேவைகள், அதற்கான வரலாற்று காரணங்களை தெளிவுப்படுத்தாவிட்டால் இவர்களின் மனப்போக்கு எந்நிலையிலும் மாறாது. தொடர்ந்து இவர்கள் ராஜபக்சேவின் சிந்தனைகளை பேசும் வாய்களாக செயல்படுவார்கள். நாம் ஏன் நமது விடுதலையை விரும்புகிறோம் என்றால் அந்த விடுதலை நமது தேவையாக இருக்கிறது. அது ஏன் தேவையாது? நாம் விரும்பாமலேயே வேறொரு ஆதிக்க நுகத்தடி நமது கழுத்தை நெறுக்கியது.



நாம் எதிர்க்கும்போதே நம் மீது கடும் சிலுவை சுமத்தப்பட்டது. நாம் சிலுவையைச் சுமந்து சென்று கல்வாரியில் பலியாக இயேசு அல்ல. ஆகவே எங்கள் மீது சுமத்தப்பட்ட சிலுவையை எதிர்த்தோம். எங்கள் கழுத்தில் அழுத்தப்பட்ட நுகத்தடியை உடைத்தெறிந்தோம். என்ன காரணம்? 1948 பிப்ரவரி 4ஆம் தேதி பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு சிங்களரிடம் இலங்கையின் முழு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். சிங்கள ஆட்சி இலங்கை குடியுரிமை சட்டம், இந்திய-பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றை இயற்றியது. இத்தனை காலம் தமது சொந்த மண்ணில் மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அந்த நாள் முதல் சொந்த நாட்டில் அகதிகளாக மாறத்தொடங்கினார்கள்.



வாக்களிக்கும் உரிமை மலையக தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. இப்படித்தான் சிங்கள பேராதிக்க வெறி தம்முடைய பயணத்தை தொடங்கியது. இந்த ஒடுக்குமுறை சட்டங்களை எதிர்த்து இது அநீதியானது என அறைக்கூவல் விடுத்த தமிழர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக இருந்த செல்வ நாயகம் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்தார். இதைத் தொடர்ந்து தந்தை செல்வா, தமிழரசு கட்சியை 1949 டிசம்பர் 18ல் துவக்கினார். இது மிகப்பெரிய எழுச்சியை தமிழ் மக்களிடம் உண்டாக்கியது. இழந்த நம்பிக்கை துளிர்விடத் துவங்கியது. இனிமேல் நமக்கு எந்நிலையிலும் தோய்வு இல்லை என்பதை அவர்கள் உணரத்தொடங்கினார்கள்.



அதன் அடுத்தக்கட்ட நிகழ்வாக 1956ல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சி போட்டியிட்ட 14 இடங்களில் 10 இடங்களில் வெற்றி பெற்று தமக்கான அங்கீகாரத்தை அடையாளப்படுத்தியது. தமிழர்கள் தாம் விரும்பியபடி தனி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள் என்பதை அத்தேர்தல் அடித்துச் சொல்லியது. ஆனால் சூழ்ச்சி நிறைந்த சிங்கள ஆதிக்க மனப்பான்மை 1956ஆம் ஆண்டு வெளிப்பட்டது. பண்டாரநாயக்கா பிரதமரான சூன் 5ஆம் நாள் அதிரடியாய், அத்துமீறலாய், அநியாயமாய், ஆதிக்க மனப்பான்மையோடு ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அது சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்பது. இடிந்து போனார்கள் தமிழர்கள். தமது மொழி உரிமையை விட்டுக் கொடுக்க அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. களத்திற்கு வந்தார்கள். அறவழியில் நின்று சமர்புரிய தொடங்கினார்கள். சிங்கள பேரினவாத அரசு தமது கொடூர முகத்தை வெளிக்காட்டி அவர்களின் போராட்டத்தை ஒடுக்கியது.



தமிழ் மக்கள் மீது ஒரு மாபெரும் அடக்குமுறை திணிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தமிழர்கள் ஏதிலிகளாய் உருமாற்றம் பெற்றார்கள். தமிழர்களின் கண்ணீர் வரலாறு இப்படித்தான் தொடங்கியது. அதேப்போன்றே 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கள ஆட்சி மொழிக்கெதிரான அறப்போராட்டமும், சிங்கள பேரினவாத ராணுவம் மற்றும் காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் கூட்டாட்சி அரசமைப்பு என்னும் கோட்பாட்டை முன்னிருத்தி போட்டியிட்டு, 13 இடங்களை கைப்பற்றியது. தமிழர்கள், தமிழர் தலைவர்களை ஆதரித்தார்கள். அதன் அடையாளமாக அவர்களின் வெற்றி அங்கீகரிக்கப்பட்டது. 1970 சூலை 19ஆம் நாள் புதிய அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான சட்டம் பண்டார நாயக்கா முயற்சியில் நடைபெற்றது.



ஆனால் சிங்கள ஆதிக்க மனப்பான்மை அதையும் தகர்த்தெறிந்தது. இப்படி படிப்படியாக சிங்கள ஆதிக்க உளவியல் சிறுபான்மை தமிழின மக்கள்மீது திணிக்கப்பட்டது. திட்டமிட்டு மொழி அழிக்க, இனம் அழிக்க, அவர்களின் ஆற்றல் வாய்ந்த ராணுவம் அவர்களோடு பின்ணிப் பிணைந்து பணியாற்றத் தொடங்கியது. இவ்வளவு நிகழ்ந்த பின்பு தான் நமக்கான ஒரு நாடு வேண்டும், அதுதான் நமக்கு நிம்மதி என்பதை தமிழீழ மக்கள் உறுதிப்படுத்தினார்கள். அந்த உறுதிப்படுத்துதலின் வெளிப்பாடுதான் வட்டுக்கோட்டையில் 1976ல் நடைபெற்ற மாநாட்டில் தனிநாடே தீர்வு என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



அது ஏகபோகமாக தமிழீழ மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதை வெளிப்படுத்தும் முகமாக 1977ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெறும் வெற்றியை ஈட்டித் தந்தின் மூலம் அவர்கள் தங்களுடைய எண்ணங்களை பதிவு செய்தார்கள். எந்த நிலையிலும் நாம் சிங்களரோடு பகைமைப் பாராட்ட விரும்பாமல், அவர்களோடு சமத்துவமாய், சமமாய் வாழத்தான் விரும்பினோம். அவர்களோடு சமமாக வாழ்வதையே அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாம் சமமாக வாழ்வதற்கு எடுத்த முயற்சிகளை நமது அறவழிப் போராட்டங்களாக அடையாளப்படுத்தினோம். அதை அவர்கள் கருவிகளால் களைத்துப் போட்டார்கள். இந்நிலையில்தான் இருபதுக்கும் மேற்பட்ட கருவி ஏந்திய குழுக்கள் ஈழ மண்ணிலே முளைவிடத் தொடங்கியது. அப்போதும்கூட அவர்கள் தம்மை கொன்று போட்டவர்களை கொன்றுபோட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு கருவி தரிக்கவில்லை.



மாறாக தமது மக்களை காக்கவே கருவி ஏந்தினார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் எமது மக்கள் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் எந்த வித அடக்குமுறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே. இதை திரித்தோ, மிகைப்படுத்தியோ, வரலாற்றுக்குப் பொருத்தமில்லாமலோ நாம் எடுத்துரைக்கவில்லை. மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இது உண்மை என்று தெரியும். வரலாறு அறிந்த எல்லோரும் இதை ஒப்புக் கொள்வார்கள். இப்படியிருக்க வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சறுக்கலாக மக்களைக் காக்கும் பேரியக்கமாக வளர்ச்சிப் பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கெதிராக 1987 சூலை 31ஆம் தேதி ராசீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் நடந்தது. இது தமிழ் மக்கள் உரிமையை பரித்த பெருங்கொடுமை.



இதற்கு முன்னர் பல்வேறு ஒப்பந்தங்கள், பல்வேறு காலங்களில் போடப்பட்டது போலவே இந்த ஒப்பந்தமும் தமிழர்களின் விருப்பமின்றி அவர்கள்மீது அறையப்பட்டது. இதுவே வரலாற்றில் ஒரு பெரிய பிழையை ஏற்படுத்தி இந்தியா இன்னமும் தம்முடைய ஆதிக்க மனப்பான்மையிலிருந்து மேல்நிலைக்குச் செல்வதற்கு உறுதுணைபுரிந்தது. இப்படி படிப்படியாக வரலாற்று நகர்வுகள் முடிந்ததின் விளைவே தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ மக்களை காக்கும் மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த கேடயமாக அங்கே அங்கீகரிக்கப்பட வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்திய அமைதிகாக்கும் படை தமிழீழத்தில் நடத்திய அத்துமீறல்கள், அதைத்தொடர்ந்து நடைபெற்ற மோதல்கள் என வரலாறு பல்வேறு கருப்புப் பக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது.



இந்நிலையில்தான் விடுதலைப் புலிகள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆற்றலாக, ஈழமக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே உலக அரங்குகள் அங்கீகரிக்கா விட்டாலும்கூட அவர்கள் தமக்கான தமிழீழ குடியரசை கடந்த 10 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடத்தி வந்தார்கள். எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத அளவில் ஒரு சிறிய தீவுக்கு கடல் படை, வான் படை, தரைப் படை ஆகிய போர் படைகளையும், அடிப்படை கட்டமைப்புகளையும், பாசனத்திற்கான புதிய கொள்கைகளையும், தமிழ் வழிக் கல்வியை அடித்தளமாகக் கொண்டு சட்டம், அறிவியல், மருத்துவம், வேதியியல், புவியியல், வானவியல் என அனைத்துக் கல்வியையுமே கொண்டுவர பெரும் நிகழ்வுகளை தமது வரலாற்றுத் தன்மையோடு ஆழ்ந்து ஆராய்ந்து நிலைப்படுத்தினார்கள். இப்போது நிலைமை வேறு ஒரு பாதைக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் நாம் இந்திய அரசை கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.



இந்திய அரசே நீ கூட்டுச் சேர்ந்து ஒழித்துவிட்டதாகக்கூறும் புலிகள் மீதான தடையை நீக்கு என்பதுதான். ஆகவே இது நிகழும் பட்சத்தில் நாம் தமிழீழ விடுதலையை அதன் அடையாளத்தோடு மேலும் நகர்த்திச் செல்ல துணைபுரியும். அதற்கு தாய்த் தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். அந்த குரல் டெல்லியில் உள்ள அடக்குமுறையாளர்களின் செவிப்பாறைகளை கிழித்தெறிய வேண்டும். அது தமிழர்களால் முடியும். அந்த நிகழ்வு மட்டுமே நமது வரலாற்றுத் தேவையை மேலும் உறுதிப்படுத்தும்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen