தமக்கு எதிராக உலகம்: சிறுபான்மை மனோநிலையில் சிங்கள இனம்
ஆசியாவின் அழகிய தீவுகளில் ஒன்றான சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில்
80,000 மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது இனப் பகை, வன்முறை மற்றும்
முட்டாள்தனமான தேசப்பற்று வெறி என்பனவாகும்.
அவற்றின் கடைசிப் பொறியையும் அணைத்து விடுவதற்கு இப்போது கிடைத்துள்ளது
போன்ற ஒரு சந்தர்ப்பம், அந்த நாட்டின் 62 வருட கால சுதந்திரத்தில்
எப்போதுமே கிடைத்ததில்லை.
விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து சிங்கள வெற்றி எக்களிப்பு
அலையால் கடந்த தை மாதத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் ஒரு குடியரசு
அதிபர்.
அவர் தன்னிச்சைப்படி நடப்பது மேலும் மேலும் அதிகரித்தால், மொத்த
சிறிலங்கா மக்களுக்கும் துன்பத்தைத் தரக்கூடிய வகையில் - இந்த அருமையான
சந்தர்ப்பம் வீணே கடந்து செல்ல உறுதியாக அனுமதிக்கப்படும்.
இத்தகைய செயல், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இடையிலான நிலையான அமைதியை
மட்டும் ஆட்டம் காண வைக்காமல் நாட்டின் பல கட்சி மக்களாட்சி முறைக்கும்
பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு எழுதியுள்ளார் அமெரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த The Nation
ஏட்டின் ஐ. நா. வுக்கான செய்தியாளரும், New York Times ஏட்டின்
ஐ.நா.வுக்கான ஆசியச் செய்திப்பிரிவி்ன் முன்னாள் தலைமையாளருமான Barbara
Crossette. அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் ரி. ரேணுபிறேம்.
Barbara Crossette மேலும் எழுதியுள்ளதாவது:
இந்தியாவின் கரையோரத்தில் ஒப்பீட்டளவில் சிறியதான, 21.3 மில்லியன்
மக்களைக் கொண்ட சிறிலங்காத் தீவு வேறு எங்கும் இல்லாதவாறு முறையற்ற
அரசாட்சி ஒன்றுக்குள் ஏன் விழுந்தது?
இது, சிம்பாப்வே அல்லது பொஸ்னியா அல்லது ஹெய்டி அல்ல; இதுவரைக்கும்
அப்படி இல்லை. ஆனால், காலனித்துவத்திற்குப் பின்னான உலகின் வீழ்ச்சிகளில்
புதியதொரு உதாரணம் இது. கென்யா மற்றொரு உதாரணம். இது ஒரு
குறிப்பிடத்தக்க பயனுள்ள படிப்பினை.
மனித மேம்பாட்டு நடவடிக்கைப் படி தெற்காசியவிலேயே மிகவும் வளர்ச்சி
அடைந்த நாடுகளில் ஒன்று சிறிலங்கா. அதன் அயல் நாடுகளான பாகிஸ்தான்,
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் போன்றவற்றிலும் பார்க்க படிப்பறிவு, கல்வி
மட்டம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் இன்னும் அது உயரத்திலேயே
இருக்கிறது.
அந்த நாட்டுக்கு வெளியிலிருந்து எதிரிகள் யாரும் கிடையாது. பெண்கள்
தசாப்தங்களாக உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள். உயிர்ப்புடனான
ஊடகத்துறை அங்கு இருக்கிறது. இரு கட்சி ஆட்சி முறைமை இருக்கிறது. மதிப்பு
மிக்க குடும்பங்களில் இருந்து வருபவர்களே அக் கட்சிகளில் ஆதிக்கம்
செலுத்துகிறார்கள்.
இப்போது, பத்திரிகையாளர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள்,
கொல்லப்பட்டுள்ளார்கள், காணாமல் போயுள்ளார்கள் அல்லது தப்பி வெளியேறி
விட்டார்கள். நிலைமைகளை மேலும் அச்சுறுத்தக் கூடிய வகையில் தன்னையே
தகவல்துறை அமைச்சராக குடியரசு அதிபர் பெயரிட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய குடியரசு அதிபருக்கு தேர்தலில் சவால் விட்ட எதிர்க் கட்சிகளின்
ஒன்றிணைந்த வேட்பாளர் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது
இதுவரை எந்த அடிப்படைக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.
தமிழர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்க் கட்சி வேட்பாளருக்கு
வாக்களித்தார்கள். இப்போது அதற்கான எதிர்வினையை எண்ணி அச்சத்துடன்
காத்திருக்கிறார்கள்.
கடந்த வருடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதற்கும்
அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதற்குமான அனைத்துப்
பெருமைகளும் தனக்கே சேர வேண்டும் என்று குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச
விரும்புகிறார்.
நாட்டை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றிய தலைவருக்கு, மக்கள் தொகையில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட சிங்கள மக்கள் வாக்குகளைப்
பரிசளித்ததன் மூலம், தனது எதிராளியும் போர்த் தளபதியுமான சரத்
பொன்சேகாவை தீர்க்கமாகத் தோற்கடித்தார் ராஜபக்ச.
புலிகள் படை பெரும் ஆயுத இயக்கமாக இருந்தது எனினும் சிறிலங்காவிற்கு
வெளியே எப்போதுமே அனுதாபத்தைப் பெற்றிருக்கவில்லை. புலிகளின் பிடிக்குள்
சிக்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களில்
பெரும்பாலானவர்கள் சண்டையும் அடக்குமுறைகளும் முடிவுக்கு வந்துள்ளதை
வரவேற்கிறார்கள்.
போருக்கு ஆதரவளிப்பதற்காக பணம் கொடுக்குமாறு தாங்கள்
கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்
கூறுகிறார்கள். அது இப்போதும் தொடருகின்றது.
வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் புலிகள் செய்த பரப்புரைகளில் சொல்லப்பட்ட
கருத்தாக்கங்களில் ஓரளவிற்கு மேல் எப்போதுமே உண்மைகள் இருந்ததில்லை.
சிறிலங்காவின் வடக்கிலும், மத்திய மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களிலும்
வாழும் - போராளிகளுடன் ஒருபோதும் இணைந்திராத - தமிழர்களுக்கு கூட, தமது
அரசியல் உரிமைகள் தொடர்பாக மோசமான மனக் குறைகள் இருந்தன. அவை இன்னமும்
இருக்கின்றன.
தமிழர்களின் உயர்வான கல்வி நிலை மற்றும் மொழித் திறன் காரணமாக
பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் அவர்கள் பால் காட்டிய ஆதரவு,
சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் தொடர்பான ஆத்திரத்தை கிளப்பி விட்டது.
1956இல் அப்போதைய பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா, தேசப்பற்று வெறிக்
கொள்கையைப் பற்றிப் பிடித்தார். அது சிங்களத்தை மட்டுமே தேசிய
மொழியாக்கியதுடன் சிங்களப் பெரும்பான்மையினரின் பெளத்த மதத்துக்கும்
முன்னுரிமை கொடுத்தது.
அந்த விடயத்தில் பிரதமர் போதிய அளவிற்குச் செயற்படவில்லை என்று கருதியே
ஆத்திரம் கொண்ட பிக்கு ஒருவரால் மூன்று வருடங்கள் கழித்து பண்டாரநாயக்க
படுகொலை செய்யப்பட்டார். அந்த அளவுக்கு அங்கு சிங்கள இனவெறி தலைதூக்கி
இருந்தது.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தினர் தாக்கப்பட்டனர்;
நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்; அவர்களது சொத்துக்கள்
அழிக்கப்பட்டன. அதனால் தாங்கள் ஒதுக்கப்பட்டதான ஒரு உணர்வு தமிழர்கள்
மத்தியில் பெருமளவில் பரவ ஆரம்பித்தது; அது தொடர்ந்தது; விடுதலைப்
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்ட போதும் - தாம் அடக்கப்படுவதான
தமிழரின் உணர்வு இன்னமும் அப்பயே தான் இருக்கின்றது.
இத்தகைய பின்னணியில், நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டுமானால், வெற்றி
மிதப்பில் இருக்கும் சிங்கள அரசு தமிழர்களை நோக்கிப் பெருந்தன்மையுடன்
தனது கரங்களை நீட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
தமிழர்களின் கலாசார மற்றும் வரலாற்று தலைநகரான யாழ்ப்பாணம் சிறிலங்காப்
படைகளால் வரன்முறைகளற்று சேதமாக்கப்பட்டுள்ளது. அதனைப் பொருளாதார
ரீதியில் மீளக்கட்டி எழுப்புவதுடன், அங்கு வாழும் மக்களின் உள
உறுதியையும் பலப்படுத்த வேண்டி உள்ளது.
போரின் பின்னர் கடந்த இளவேனில் காலத்தில் உருவாக்கப்பட்ட, அடிப்படை
வசதிகளற்ற தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய தமிழ்க் குடும்பங்கள்
பல மாதங்கள் கடந்து விட்ட போதும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில்
பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவிகளை வழங்குகின்றன எனினும் அவை
எப்போதாவது தான் கிடைக்கின்றன. இது ஏற்றுக் கொள்வதற்குக் கசப்பானதாக
இருக்கின்றது எனச் சொல்கிறார்கள் சில அனைத்துலக உதவிக் குழுக்களின்
பணியாளர்கள்.
வெளி உலகு தமக்கு எதிராகவே செயற்படுகின்றது என்று சிங்களவர்கள்
ஆதாரங்களுடன் நம்புகின்றார்கள். சிறிலங்கா எழுத்தாளர் ஒருவர் இதனை
“சிறுபான்மைத் தாழ்வு மனப்பான்மையுடனான ஒரு பெரும்பான்மை இனம்” என
என்னிடம் வர்ணித்தார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen