Freitag, 18. Dezember 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம்


எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கொள்கைப் பிரகடனத்தை கண்டியில் வெளியிட்டு வைத்தார்.




அதன் தமிழாக்கம் வருமாறு:



01. இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே, முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,



* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு

* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு

* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு

* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.



02. நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.



03. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.



04. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.



இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்...



05. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.



06. முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.



07. ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.



08. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.



09. நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.



10. கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.



இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும்http://www.eelamwebsite.com/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen