தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக உலகப்பரப்பில் விழுதூன்றி நிற்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை இலக்குவைத்து தனது சதிவலையை மிகவும் நுட்பமாகவும், நுண்ணியமாகவும் சிங்களம் பின்னத் தொடங்கியுள்ளது.
ஒருபுறம் இதற்கு ஒத்திசைவாகவும், மறுபுறம் சுயநிகழ்ச்சித் திட்டத்துடனும் சமாந்தரமான சதிவலைகளை இந்திய ஏகாதிபத்தியமும், உலக வல்லரசுகளும் கனக்கச்சிதமாகப் பின்னி வருகின்றன. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழீழ தேசத்தின் அரசியல் வேணவாவாக விளங்கும் சுதந்திரத் தமிழீழ தனியரசுக் கோரிக்கையையும் உலகிற்கு எடுத்துரைப்பதற்கான பரப்புரைப் பணிகள் மேற்குலக தேசங்கள் தோறும் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ள பின்புலத்தில், இவற்றை முளையில் கிள்ளியெறியும் நடவடிக்கைகளில் சிங்களம் இறங்கியுள்ளது.
இவற்றை நுணுகி ஆராய்ந்து, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு அரசியல் - தத்துவார்த்த வடிவம்கொடுத்து மூன்று தசாப்தங்கள் மாபெரும் தேச விடுதலைப் பணியாற்றிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுக்கு சமர்ப்பணமாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழர்களாயினும் சரி, உலகத் தமிழர்களாயினும் சரி, இன்று அனைத்துத் தமிழர்களுக்கும் முகவரியளித்த பெருமைக்குரிய மாபெரும் தலைவனாகவும், தளபதியாகவும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார்.
பிரபாகரன் என்பது இன்று ஒருதனிமனிதனுடைய பெயரல்ல. மாறாக, பத்துக்கோடித் தமிழர்களையும் குறியீடு செய்துநிற்கும் மாபெரும் இயங்கு சக்தியே இன்று பிரபாகரனாக பரிணமித்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு வந்து இற்றைக்கு ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பான முரணியங்களுக்கு முற்றுப்புள்ளி எட்டப்படவில்லை. இது சிங்களத்திற்கும், உலகிற்கும், முழுத் தமிழினத்திற்கும் ஒருதெளிவான செய்தியை உணர்த்தி நிற்கின்றது.
அதாவது, தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பையும், இல்லாமையும் எந்தவொரு சக்தியாலும் நிர்ணயித்துவிட முடியாது என்பதே அந்தச்செய்தியாகும். பிரபாகரன் என்ற மாபெரும் சக்தி அடியும், முடியும் கொண்டு அளவிடக்கூடியதல்ல. தமிழீழ தேச விடுதலை என்ற இலட்சிய ஊற்றில் இருந்து பெருக்கெடுக்கும் நதிமூலமாகப் பிரபாகரன் என்ற மாபெரும் சக்தி இன்று உலகத் தமிழர்களை ஆகர்சித்து நிற்கின்றது.
தமிழீழ மண்ணை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் கருத்துக்கூறிய முதுபெரும் தளபதி கேணல் கிட்டு: தலைவர் தான் இயக்கம். தலைவர் தான் போராட்டம். தலைவர் தான் தமிழீழம்.
என்று குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாள இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேணல் கிட்டு அவர்கள் கூறிய கருத்துக்களின் அர்த்தபரிமாணமாக, கடந்த நவம்பர் 27ஆம் நாளன்று உலகெங்கும் மாபெரும் எழுச்சியுடன் நிகழ்ந்தேறிய மாவீரர் நாள் நிகழ்வுகள் திகழ்கின்றன எனக் கூறின் அது மிகையில்லை.
இதனை இன்று சிங்களமும் சரி, இந்திய ஏகாதிபத்தியமும் சரி, உலக வல்லரசுகளும் சரி நன்குபுரிந்து கொண்டுள்ளன. பிரபாகரன் என்ற தலைமைத்துவத்தை அழிப்பதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையில், தமிழீழ தேசியத் தலைவரை நேரடியாகக் குறிவைத்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தை சிங்களமும், இந்திய ஏகாதிபத்தியமும், உலக வல்லரசுகளும் நகர்த்தியிருந்தன. முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது எதுவாக இருப்பினும், அதன் விளைவு என்பது பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியாக இன்று உலகத் தமிழர்களை ஆகர்சித்து விழுதூன்றியுள்ளது. இவ்வாறாக தமிழீழ தேசத்தின் ஆன்மாவாகவும், உலகத் தமிழர்களின் அடிநாதமாகவும் விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரை அழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில், ஈழத்தமிழினத்தின் கருத்தியல் உலகில் இருந்து அவரை அகற்றுவதற்கான பிரயத்தனங்களில் இப்பொழுது சிங்களம் இறங்கியுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற விவாதங்களுக்கும், கேள்விகளுக்கும் அப்பால் அவர் எங்களை விட்டு எவ்வாறு நீங்கிவிட முடியும் என்ற கேள்விக்கு முதலில் நாம்விடைகாண வேண்டும்.
தமிழீழ மக்களின் விடிவைத் தனது இலட்சியமாகக் கொண்டு தனது பதினாறாவது அகவையில் களமிறங்கிய ஒரு மாபெரும் வரலாற்றுப் புருசனாகப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்கள் திகழ்கின்றார். தமிழீழ தேச விடுதலை இன்னமும் ஈட்டப்படாத நிலையில் - தமிழீழ தனியரசு நிறுவப்படாத சூழலில், எம்மைவிட்டு எவ்வாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நீங்கிவிட முடியும் என்பதை சுயவிசாரணைகள் ஊடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். வன்னி மண்ணில் தமிழ் குருதியை ஆறாகப் பெருக்கெடுத்தோட வைத்து, ஒன்றரை இலட்சம் தமிழ் உயிர்களை நரபலி வேட்டையாடிய சிங்களம், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிநாத சக்தியை உடைத்தெறியும் தனது இலக்கை நிறைவுசெய்வதற்காக இன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நேரடியாகக் குறிவைத்துள்ளது.
இதன் ஓர் நடவடிக்கையாகவே தமிழீழ தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பான குழப்பங்களை மென்மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் சிங்களம் ஈடுபட்டு வருகின்றது. பிரபாகரன் இருந்தால் தமிழீழம், இல்லையென்றால் தமிழீழம் இல்லை.
என்ற சூத்திரத்தை சிங்களம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.
இதன் அர்த்தபரிமாணங்களை அடையாளம் கண்டு, தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வரலாற்றுப் பணியை பெரும் விழிப்புணர்வுடன் முன்னெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது.
தனது பதினாறாவது அகவையில் விடுதலைத்துறவறம் பூண்ட எமது பெருந்தலைவர், எத்தனையோ சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைத்தவர். இமாலயத் துரோகங்களை எதிர்கொண்டு - முறியடித்து தமிழீழ நிழல் அரசை நிறுவிய பெருமைக்குரியவர்.
சோழ மாமன்னர்களான கரிகாற்பெருவளவனுக்கும், இராசஇராசனுக்கும், இராசேந்திரனுக்கும் பின்னர் தமிழினத்தின் வரலாற்றில் உதித்த மாபெரும் வீரன். அடங்கிக் கிடந்த ஈழத்தமிழர்களை வீறுகொண்டெழ வைத்து, வீரமும், வலிமையும் மிக்கவர்களாக உலகத் தமிழர்களுக்கு அடையாளம் அளித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இவ்வளவு தூரத்திற்கு முன்னகர்த்திய அந்த மாபெரும் தலைவனால் ஈழத்தமிழினத்தின் விடுதலையை நிச்சயப்படுத்த முடியும்.
எங்கள் பெருந்தலைவனின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து, அவரது வழியில் பயணிப்பதன் ஊடாகவே நாம் எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக்கொள்ள முடியும். அதனை விடுத்துப் புதிதாக சிந்திப்பதாகக் கூறிக்கொண்டு தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகளில் இருந்து விலகிச்செல்வதால் நாம் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை.
தமிழீழ தேசியத் தலைவரின் அரசியல் சிந்தனைகளில் இருந்து ஈழத்தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் அந்நியப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்கூறும் கருத்தியல் உலகில் இருந்து பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியை அந்நியப்படுத்துவதற்கு சிங்களம் முற்படுகின்றது. சிங்களத்தின் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஈழத்தமிழர்களிடையே கருத்தியல் பிளவை ஏற்படுத்தும் வகையிலான நகர்வுகளில் இன்று இந்திய ஏகாதிபத்தியமும், சில உலக வல்லரசுகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிந்து அவர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு துணைநிற்கப் போவது போன்று பாசாங்கு செய்யும் இவ்வாறான வல்லாதிக்க சக்திகள், தமிழீழ தேசத்தின் அரசியல் பிரக்ஞையை சிதறடிக்க முற்படுகின்றன. சிங்கள தேசத்தை வழிப்படுத்தி தனது தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்குள் கொண்டுவருவது மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டமாக உள்ளது.
இதனை நிறைவேற்றுவதற்கான கருவியாக ஈழப்பிரச்சினையை மேற்குலகம் கையிலெடுத்துள்ள பொழுதும், இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வைத் தரப்போவதில்லை. ஈழப்பிரச்சினையை சாக்காக வைத்து சிங்கள தேசத்தின் மீது மேற்குலகம் பிரயோகிக்கக்கூடிய இராசதந்திர - பொருண்மிய அழுத்தங்கள் சிங்கள தேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இதனால் எமது அரசியல் சுதந்திரம் விரைவுபடுத்தப்படும் என்று நாம் நப்பாசை கொள்வது அபத்தமானது - ஏன் ஆபத்தானதும்கூட.
எமது தேசத்தின் விடுதலை என்பது எமது கைகளிலேயே முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது. எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக மேற்குலகின் உதவியை நாம் திரட்டிக்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. மேற்குலகைக் கொண்டு சிங்கள தேசத்தை நாம் தண்டிப்பதோ, இராசதந்திர - பொருண்மிய வழிகளில் தாக்குவதோ தவறில்லை.
அதுவும் சாத்தியமானதே! ஆனால் எமது விடுதலையை முற்றுமுழுதாக மேற்குலகம் வென்றுதரும் என்றும் நாம் நம்புவோமாக இருந்தால் அதுவே நாம் எமக்கு இழைக்கும் மாபெரும் தவறாக அமைந்துவிடும். ஏற்கனவே இந்தியா தமிழீழத்தை வென்றெடுத்துத் தரும் என்று ஈழத்தமிழர்கள் நம்பியிருந்து ஏமாந்த - ஏமாற்றப்பட்ட வரலாற்றை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியாது!
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அரசியல் பணிகளும் சனநாயக மயப்படுத்தப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால் சனநாயக மயப்படுத்தல் என்பது ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளையும், பண்பாட்டு புறநிலைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்படும் பொழுது மட்டுமே, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான உந்துசக்தியாக அது அமையும்.
மாறாக, சனநாயக மயப்படுத்தல் என்பது மேற்குலகின் தாராண்மைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்குள் சிக்குவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியை சீர்குலைத்துவிடும். இவ்வாறான சீர்குலைவிற்குள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இட்டுச்செல்லும் நிகழ்ச்சித் திட்டத்துடன் உலக வல்லரசுகள் இயங்குவதை நாம் மறந்துவிடக்கூடாது.
வன்முறைகளை சொல்லிலும், செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடும் பொழுது மட்டுமே அவர்கள் மீதான தடை நீக்கப்படும் என்று கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து ஒற்றைப் பல்லவியைப் பாடிவந்த அமெரிக்கப் பேரரசு, ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் உறைநிலைக்கு கொண்டுவந்த பின்னரும் அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு பின்னடிப்பதன் சூத்திரத்தைப் புரிந்து கொள்வதற்கு விண்வெளி விஞ்ஞானம் கற்றிருக்கத் தேவையில்லை.
அமெரிக்கப் பேரரசின் இதே அணுகுமுறையை ஏனைய மேற்குலக அரசுகளும் கையாண்டு வருவது ஈழத்தமிழினத்திற்கு ஒரு தெளிவான செய்தியைப் புலப்படுத்துகின்றது. அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளையும், பிரபாகரன் என்ற மாபெரும் இயங்கு சக்தியையும் தமிழ்கூறும் கருத்தியல் உலகில் இருந்து நிரந்தரமாக அகற்றுவதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்களத்திற்கு, அன்றுபோல் இன்றும் மேற்குலகம் துணைபுரிகின்றது என்பதே அந்தச் செய்தியாகும்.
எந்தவொரு தேசிய விடுதலைப் போராட்டமும், களம், பின்தளம் ஆகிய இரு தளங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது வரலாற்று நியதி. இந்த நியதியிலிருந்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் விதிவிலக்குப் பெற்றுவிடவில்லை. ஆரம்பத்தில் தமிழகத்திலும், அதன் பின்னர் மணலாறு, யாழ்ப்பாணம், வன்னி என்றும் காலத்திற்குக் காலம் இடம்மாறிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்தளம் தற்பொழுது ஈழத்தமிழர்களின் புகலிட தேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளமை கண்கூடு.
ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் என்பது பொதுவாக களத்தை மையப்படுத்தியே அமைந்திருக்கும். எனினும் களத்தில் தலைமை இயங்க முடியாத சூழல் ஏற்படும் பொழுது, பல்வேறு அலகுகளாக அது பரலாக்கம்பெற்று பின்தளத்தில் மீள்நிலைப்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் களம்நோக்கி நகர்வது வழமை. இவ்வாறான புறநிலைக்குள் இன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இட்டுச் செல்லப்பட்டிருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நிதர்சனமாக்குகின்றன.
இன்று புகலிட தேசங்களில் வேரூன்றி விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக பலம், மீண்டும் காலவோட்டத்தில் தமிழீழ தாயகக் களம் நோக்கி நகர்த்தப்படும் என்ற வரலாற்று நியதி, சிங்களத்திற்கும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் உலக வல்லரசுகளுக்கும், இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தியென்பது மறுப்பதற்கில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் உயிரூட்டம் அளித்து ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும்
என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அச்சம் வெளியிட்டமை இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இறுதி யுத்தத்தில் விழுப்புண்ணெய்திய கணிசமான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டதோடு, மக்களோடு மக்களாக அங்கிருந்து வெளியேற முற்பட்ட மேலும் ஒரு தொகுதி போராளிகள், முதலில் வதைமுகாம்களில் முடக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த துயரநிகழ்வுகள் கடந்த ஏழு மாதங்களில் நிகழ்ந்தேறியுள்ளன.
இவர்களைவிட தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த ஒருசில போராளிகள் சிங்களப் படைகளிடம் சரணடைந்ததோடு, அவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட மேலும் ஒருதொகுதி போராளிகள் சிங்களப் படைகளால் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தம்மிடம் சிறைப்பட்டுள்ள போராளிகளில் ஒருதொகுதியினரைப் பயன்படுத்தி புகலிட தேசங்களில் பெரும் குழப்பங்களை தோற்றுவிப்பதற்கான சதிதிட்டங்களை சிங்களம் செயற்படுத்தி வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஏற்கனவே போர்க்காலத்தில் தமிழீழத்தில் இயங்கிய தமது உளவாளிகளையும், இரட்டை முகவர்களையும் தமிழகத்திலும், மேற்குலக தேசங்களிலும் சிங்களப் புலனாய்வுத்துறை களமிறக்கியுள்ளது.
தேசப்பணியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு வருகை தந்திருப்பதாகக் கதையளக்கும் இவர்கள், எவ்வித தங்குதடையுமின்றி மேற்குலக தேசங்களை வலம்வருவதன் சூத்திரத்தை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
வெளிநாட்டுப் பயணம் என்பது எவ்வளவு கடினமானது என்பது ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரும் நன்குபட்டறிந்த விடயம். இவ்வாறான பின்புலத்தில், இப்படியான ஆட்களை யார் இயக்குகின்றார்கள் என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு புகலிட தேசங்களில் தனது கைக்கூலிகளை நேரடியாகக் களமிறக்கியிருக்கும் சிங்களப் புலனாய்வுத்துறை, மறுபுறம் தம்மிடம் சிறைப்பட்டுள்ள போராளிகளைக் கையாண்டு, அவர்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.சிங்களத்திடம் சிறைப்பட்டுள்ள பெரும்பாலான போராளிகள் கொடூர வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, இவர்களில் ஒருதொகுதியினர் சிங்களப் புலனாய்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்டு, சலுகை யுக்திகள் மூலம் நாசகார உளவியல் போர் நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான தமிழீழ தேசவிரோதச் செயல்களில் ஈடுபட மறுக்கும் போராளிகளை போதைமருந்துகளுக்கு அடிமைகளாக்கி அவர்களை தமது ஏவலாளிகளாக மாற்றும் கொடுஞ்செயலில் சிங்களப் புலனாய்வுத்துறை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
கடந்த போர்க்காலத்தில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருசில முன்னாள் தளபதிகளும், பொறுப்பாளர்களும் இவ்வாறு சிங்களப் புலனாய்வுப் பிரிவினரால் கையாளப்படுகின்றனர். இவர்களைப் போதைமருந்துகளுக்கு அடிமைகளாக்கி, தொலைபேசி வாயிலாக புகலிட தேசங்களில் உள்ளோருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் சிங்களப் புலனாய்வுத்துறையினர், இவர்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே தேசியப் பணியில் ஈடுபடுவோரை இனம்காணும் நடவடிக்கையில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளனர். வன்னிக் காட்டில் இருந்து தாம் தொடர்புகொள்வதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள், வெளிநாடுகளில் தேசப்பணியில் ஈடுபடும் சிலரைக் குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களின் ஊடாகத் தகவல் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இதற்கான வலையமைப்புக்கள் இயக்கப்படுவதோடு, இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளையும், சூரிச் மாநிலத்தையும், ரொறன்ரோவையும் தளமாகக் கொண்டு சில முகவர்களையும் சிங்கள புலனாய்வுத்துறை இயக்கி வருவது அண்மைக்காலங்களில் நிதர்சனமாகி வருகின்றது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் போன்றோருடன் தொடர்புகளைப் பேணும் இவ்வாறான முகவர்கள், அவர்களுடன் சாவகாசமாக உரையாடி அன்றாட அரசியல் - பரப்புரை நடப்புவிபரங்களைத் திரட்டி, பின்னர் அவற்றை சிங்களப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறான முகவர்கள் தொடர்பாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை சிங்களம் நேரடியாக குறிவைத்துள்ள நிலையில், தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வைப் பேணுவதன் ஊடாகவே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பலத்தை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பிரபாகரன் என்ற மாபெரும் சக்தியால் இயக்கப்படும் காலநதி. தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணமும், அவரது வழிகாட்டலும் இற்றைவரைக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும், உலகத் தமிழர்களையும் வழிநடத்திச்செல்லும் பொழுது, தமிழீழ தேசத்திற்கு தலைமையேற்கும் தகுதியை வேறு எவராவது கொண்டிருக்க முடியுமா?
அல்லது தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை இல்லாதொழிப்பதன் ஊடாக தமிழீழ தேசிய விடுதலையை வென்றெடுப்பது சாத்தியமாகுமா?
முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் சந்தித்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்துவதன் சூத்திரம்தான் என்ன?
ஆயுதப் போராட்டத்தை தொடங்குவதாகக் கூறியவாறு, மக்கள் விடுதலைப் படை என்றும், மார்க்சியப் போராட்டம் என்றும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு புதிய குழுக்கள் தோற்றம் பெறுவதன் பின்னணிதான் என்ன?
ஈழத்தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக சிதைப்பதைத் தவிர வேறு எவ்விதமான நோக்கத்தையும் இவை கொண்டிருக்க முடியாது. இவற்றை உடைத்தெறிந்து, எதிர்படும் சகல சவால்களையும் வெற்றிகொண்டு, பிரபாகரன் என்ற மாபெரும் இயங்கு சக்தியின் வழிநடத்தலில், மாவீரர்களின் தியாகவரலாறு வழிகாட்ட, புலிக்கொடியின் கீழ் அணிதிரண்டு தமிழீழ தனியரசை நிறுவுவதைத் தவிர ஈழத்தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வேறு எந்தத் தெரிவும் இல்லை என்பது மட்டுமே இனி நிச்சயமானது!
இந்த மெய்யுண்மையைத் தழுவிநின்று தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்போம்.
பிரம்மசீடன்
0 Kommentare:
Kommentar veröffentlichen