மக்களின் ஆதரவினால் ஆட்சிக்கு வர முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிரணி வேட்பாளர் என்ற விடயம் ஊடாக ஆட்சிபீடமேறி தனது கனவை நனவாக்க முற்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். அதற்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி தக்க பதிலளிப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
இராணுவம் தொடர்பிலõன எதிரணி வேட்பாளரின் கூற்று மற்றும் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறியதாக வார இறுதி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் எதிரணி தரப்பு அறிவிக்கவில்லை.
இதேவேளை, இந்தியாவுக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் இடம்பெர்ந்துள்ள தமிழ் மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2005ஆம் ஆண்டு தேர்தல் மற்றும் அதற்கு முன்னரான தேர்தல்கள் எவ்வாறு நடைபெற்றன என ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும். கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவருக்கு தெரியும். மேலும் அவர் கையெழுத்திட்ட போர்நிறுத்த உடன்படிக்கையினால் ஏற்பட்ட நிலைமையும் ஞாபகம் இருக்கும்.
எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் தெரிவித்துள்ளார். அதாவது, சரத் பொன்சேகா தனது கூற்றை மறுத்துள்ள நிலையிலும் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுவது ஏன்? இதுதான் பொது நோக்கமா? இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பில் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவிப்பர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
யுத்தம் நடைபெற்ற காலக்கட்டத்தில் சர்வதேச சக்திகள் மற்றும் உள்நாட்டின் சிலர் என பல சக்திகள் யுத்தத்தை நிறுத்த முயற்சித்தன. ஆனால், தற்போது அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, வேறு வழிகளில் பல முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.
இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாவிட்டால், தான் பதவியிலிருந்து விலகி விடுவதாக எதிரணி வேட்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், காபந்து அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஒருவேளை சரத் பொன்சேகா வெற்றி பெற்று பதவி விலக நேர்ந்தால் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பீடம் ஏறிவிடுவார். அப்போது எவ்வாறாவது புலிகளின் புதிய சக்திகளுடனாவது அவர் பயணிப்பார். இவ்வாறானதொரு நிலைமை தேவையா என்பதை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மக்கள் தீர்மானிக்க வேண்டும்
0 Kommentare:
Kommentar veröffentlichen