புதியவை வருவதும் பழையவை கழிவதும் ஒரு வழமையான நடைமுறை. அந்த வகையில் நாம் 2009ம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு புதிய ஒரு ஆண்டில் கால் பதித்துவிட்டோம். புதிய ஒரு ஆண்டு பிறக்கின்றபோது எத்தனையோ எதிர்பார்ப்புக்கள் வருகின்றன. மனதில் மகிழச்சி, பட்டாசு வெடிப்புக்கள் இன்னபிற நம் மக்களின் கேளிக்கைகளின் மத்தியில் ஒரு புதிய ஆண்டு மலர்கின்றது. அவ்வாறு மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அந்த ஆண்டு சிலவேளைகளில் தனிப்பட்ட வகையில் நமக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்துவிடுகின்றது. நன்மைகள் கிடைத்தவகையில் அந்த ஆண்டை நம்மால் மறக்கமுடியாததாகலாம். அல்லது தீமைகளை ஏற்படுத்திய வகையிலும் அந்த ஆண்டை மறக்கமுடியாத ஆண்டாக இருக்கலாம். அந்த வகையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் அந்த ஆண்டு முக்கியத்துவம் பெறுகின்றது.அதுபோல் வரலாற்றிலும் ஒவ்வொரு ஆண்டும் சிற்சில விடயங்களுக்காக இடம்பிடித்துவிடுகின்றது.
கடந்து சென்ற இந்த 2009ம் ஆண்டு நம்மக்களை பொறுத்தவரையில் எவ்வாறான ஒரு ஆண்டாக அமைந்திருந்தது என்று ஒரு பார்வையை அந்த ஆண்டின் மீது திருப்புவோம். 2009ம் ஆண்டு சிங்களத்தின் கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுத்தவாறே ஆரம்பித்தது. அந்த ஆண்டு நடுப்பகுதியில் சிற்சில நம்பவங்கள் மானம்கொண்ட, உணர்வுள்ள தமிழ் மக்களைமிகுந்த கவலைக்கு உட்படுத்தியது. கடந்த மேமாதத்தில் வடக்கில் நடைபெற்ற மிகக்கடுமையான போர் ஆயிரக்கிணக்கிலான அப்பாவி உயிர்களை காவுகொண்டது. சொத்து இழப்புகள், பொருளாதார இழப்புக்கள், தொடர் இடப்பெயர்வுகள் என எம்மக்களை இன்னல்களின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. அதுமாத்திரமல்லாது, ஏறக்குறைய மூன்று தசாப்த கால உரிமைப்போர் வரலாறு காணாத ஒரு நெருக்கடியைச் சந்தித்து நின்றது. எம்மக்களின் மனங்களை நிலைகுலையச் செய்யும் சில செய்திகளும் அக்காலப்பகுதியில் நம்காதுகளை வந்தடைந்தன.
எம்மக்கள் எத்தனையோ இன்னல்களை சந்தித்து நிற்கையில் சர்வதேசம் முழுவதும் எம்நிலைகண்டு வெறுமனே கவலையும், அறிக்கைகளுமே வெளியிட்டன. தமிழ் மக்கள் யாருமே அற்ற அநாதைகளாக இவ்வுலகில் வாழ்கின்றார்கள் என்ற ஒரு யதார்த்தபூர்வமான உண்மை கடந்த ஆண்டில் பல்வேறு காலகட்டங்களிலும் தென்பட்டன. தமிழினத்தின் வீழ்ச்சிக்கு நம்மக்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதனை நாம் பல சந்தர்ப்பங்களில் யதார்த்தபூர்வமாவே உணர்ந்துவிட்டோம். ஒவ்வொரு தடவையும் நம்மக்கள் செய்த தவறுகளை அல்லது சில தனிநபர்களின் முடிவுகள் வரலாற்றில் நாம் எழுச்சி கொள்ளமுடியாத அளவுக்கு நம்மை கொண்டு சென்றுள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதற்காக வரலாறறில் நாம் பழிபோடமுடியாது. நமது சில தவறுகள் வரலாற்றுத’ தவறுகளாகிவிடுகின்றன.
யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு கூறிக்கொண்டாலும், வடகிழக்கு தமிழர் தாயகம் உட்பட தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் நம்ம மக்கள் இன்னல்களையே எதிர்கொண்டு வருகின்றார்கள். இராணுவ இயந்திரத்தின் அராஜகங்கள் இன்னும் எம்மக்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. கடந்த ஆண்டில் இதன் உச்ச அளவை எம்மக்கள் உணர்ந்து கொண்டார்கள். சிறிலங்கா அரசின் இராணுவ அட்டகாசங்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு என்ற கேள்வியும், அவர்களின் நடவடிக்கையால் ஏற்பட்ட சலிப்பும் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.
வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற அறிவிப்புக்கள் வெறுமனே ஆட்சியாளர்களின் ஆட்சியின் வீச்சு எல்லையை எடுத்துக்காட்டியதே தவிர அதனால் மக்கள் பயனடையவில்லை. பெயருக்கு சில திட்டங்கள். அவைகளினால் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன? நம்மக்களின் ஒரு பகுதியினர் துன்பத்தில் துவண்டிருக்க மறுபுறும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், கேளிக்கைகள் என மக்களின் மனங்களை திசை திருப்பியது அரசு. திட்டமிட்ட சில சம்பவங்கள் மக்களின் பார்வையை திருப்பின. சந்தர்ப்பவாத அரசியல், சிலசலுகைகள், ஆடம்பர வாழ்க்கை எனப்பலதும் எம் உரிமைகளை விட்டுக்ககொடுக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்துவிட்டோம். சலுகைகளுக்காக உரிமைகளை இழந்த இனத்தின் பட்டியலில் நாம் இன்று இணைந்துவிட்டோம்.
எம்மக்கள் போரில் வடுவிலிருந்து விடுபட முன்னரே எம்மக்களை அழித்த வெற்றியினை தமதாக்கிக்கொண்டு சிங்களத்தின் சிங்கங்கள் இன்று தேர்தலுக்கான வாக்கு வேட்டையை ஆரம்பித்துவிட்டன. தமிழர்களின் இழப்பிலும், துன்பத்திலும் என்றுமே சிங்களம் ஆதாயம் தேடவே முற்படுகின்றது என்பதற்கு சிறிலங்காவின் இந்த அதிபர் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.
போர் மாத்திரமல்ல, இயற்கையின் செயற்பாடுகளும் கடந்த ஆண்டில் நமக்கு நெருக்கடியையே தந்தது எனலாம்.
நல்லவைகளுக்காக கடந்த 2009ம் ஆண்டுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, நடந்த கசப்பானவற்றை கண்டு துவண்டு விடாமல், அதற்கான காரண காரியங்களை கண்டறிந்து அதிலிருந்து வீறுகொண்டு எழுந்து இந்த புதிய ஆண்டில் தோல்விகண்டவற்றில் வெற்றி காண்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம். சர்வதேமெங்கிலும் வாழும் எம் உறவுகள் தம்மிடையே உள்ள அரசியல், சமூக, பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு எம் இனத்தின் எழுச்சிக்காகவும், எம் மொழியின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்போம் என்று திடமான உறுதியுடன் புதிய ஆண்டில் பயணிப்பொம்.
பிறந்துள்ள இந்த 2010 என்கின்ற இப்புதிய ஆண்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விடைபெறுகின்றேன்.
—
இவண்
ஆசிரியர்
மீனகம் தளம்
RSS Feed
Twitter



Donnerstag, Dezember 31, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen