Montag, 10. Januar 2011

விடை சொல்வாரா விஜயகாந்த்?

''நாங்க விஜயகாந்த் கட்சியில் இருந்து வர் றோம். வர்ற ஞாயித்துக்கிழமை, மக்கள் உரிமை மீட்பு  மாநில மாநாடு சேலத்தில் நடக்குது. நீங்க எல்லோரும் குடும்பத்தோட அவசியம் வரணும்...'' - என்றபடி ஒரு தட்டில் மாநாட்டு அழைப்பிதழ், மஞ்சள், குங்குமம், பூ வைத்து சென்ட்டிமென்ட்டாகக் கொடுக்கிறார். கூடவே, ''பூவும் பொட்டோட நீங்க நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்கணும்...'' என்று வாழ்த்திவிட்டுச் செல்கிறார் உமா.



சேலத்தில் இப்படி வீடு வீடாகப்போய் சென்டிமென்ட் சென்ட் தெளிப்பவர், சேலம் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமாராஜ்!



மாநாடு பரபரப்பு இப்போதே கூத்தாடுகிறது. குறிப்பாக, நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீராசாமிபுதூர் கிராமமே திருவிழாக் கோலத் தில் களை கட்டியிருக்கிறது. மாநாட்டுக்கான முழுப் பொறுப்புகளையும் சேலம் கிழக்கு மாவட்ட அழகாபுரம் மோகன்ராஜ், மேற்கு மாவட்ட பார்த்தீபன், மாநகர் மாவட்ட ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் ஒப்படைத்திருக்கிறார். அவர்களும் இணைபிரியாமல் வேலை பார்த்து வருகிறார்கள்.



மூவர் சார்பாக அழகாபுரம் மோகன்ராஜ் நம்மிடம் பேசினார். ''பெரிய பொறுப்பை எங்களை நம்பி கேப்டன் ஒப்படைச்சிருக்கார். அதை சிறப்பா நடத்தி முடிக்கிற வரைக்கும் எங்களுக்குத் தூக்கமே கிடையாது. மாநாட்டால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் வரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கோம். டூ-வீலர், கார், பஸ்னு எல்லாத்துக்கும் தனித்தனியா பார்க்கிங் வசதி... பெண்களுக்குத் தனி நுழைவாயில் அமைச்சிருக்கோம். திறந்த வெளியில்தான் மாநாடு நடக்கப் போகுது. எந்தக் கட்சி அரசியல் மாநாடு நடத்தினாலும் கொக்கி போட்டு கரன்ட் எடுப்பதைத்தான் கலாசாரமாக வெச்சிருக்காங்க. ஆனா, இதுக்கு முழுக்க முழுக்க ஜெனரேட்டர்தான் பயன்படுத்துவோம்.



மாநாடு முடிஞ்சு ஊருக்குக் கிளம்பும் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் அடங்கிய பாக்ஸ் கொடுக்கப் போறோம். இப்படி 25 லட்சம் பேருக்குத் தயார் பண்ணப் போறோம். நாங்க ஃபிளக்ஸ் வெச்சா மட்டும் மூணு நாளைக்கு முன்னாடிதான் வைக்கணும். மாநாடு முடிஞ்சு ரெண்டு நாளில் எடுத்துடணும்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுறாங்க. மூணு மாசத்துக்கு முன்னாடி கருணாநிதி சேலத்துக்கு வந்தப்ப வெச்ச ஃபிளக்ஸ் பேனர்கள் இன்னும் பல இடங்களில் அப்படியே இருக்குது. அதை போலீஸ் கண்டுக்க மாட்டாங்க. ஆடட்டும்... எவ்வளவு நாளைக்கு? நாங்களும் பார்த்துக்குறோம்!'' என்று தெம்பாகச் சொல்லிச் சிரித்தார்.







மகளிர் அணிச் செயலாளர் உமாராஜை சந்தித்துக் கேட்டோம். ''18-ல் இருந்து 22 வயசுக்குள்ள இருக்கும் இளம் பெண்கள் 500 பேரை தொண்டர் படைக்காகத் தேர்வு பண்ணி இருக்கோம். அவங்க பெரும்பாலும் கல்லூரி மாணவிகள். 'தொண்டர் படைக்கு விருப்பம் இருப்பவர்கள் வரலாம்’னு நாங்க சொன்னதும், கல்லூரி மாணவிகள்தான் அதிகம் வந்தாங்க. இந்தப் படைப் பெண்களுக்கு யூனிஃபார்ம் கொடுக்க போ றோம். அவங்களுக்குப் பயிற்சி கொடுத்து மாநாட்டுக்கு வரும் பெண்களை ஒழுங்குபடுத்தும் வேலையை இவங்கதான் பார்க்கப் போறாங்க.







சாதி, மத, கட்சி பேதமில்லாம ஒவ்வொரு வீட்டுக்கும் போய் மஞ்சள், குங்குமம், பூ கொடுத்து மாநாட்டுக்கு நாங்க கூப்பிடுற துக்கு, நல்ல வரவேற்பு இருக்கிறது. நிச்சயமா இந்த மாநாட்டுல மகளிர் அணியோட பங்கு ரொம்பவே அதிகமா இருக்கும்...'' என்றார் பூரிப்பாக.



பிரேமலதா விஜயகாந்த் கடந்த 4-ம் தேதி மாநாட்டுத் திடலைப் பார்வையிட வந்திருந்தார். அவரிடம் பேசினோம். ''9-ம் தேதி மதியம் 1.31-க்கு மாநாட்டுத் திடலில் கேப்டன் கொடியேற்றி வைப்பார். பிறகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். கூட்டணியைப் பற்றி தலைவர் என்ன சொல்லப் போறாருன்னு ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்பார்த்துட்டு இருக்கு. அப்படிப்பட்ட அதிர்ச்சியான முக்கிய முடிவை தலைவர் அறிவிப்பார். தலைவர் எடுக்கும் எந்த முடிவும் தன்னிச்சையானது கிடையாது. தே.மு.தி.க-வின் ஒவ்வொரு தொண்டனையும் கருத்துக் கேட்டு, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவுதான். அதனால்தான் கூட்டணிபற்றிய அறிவிப்பை ஓர் அறைக்குள் உட்கார்ந்து அறிவிக்காமல், தொண்டர்களின் மத்தியில் அறிவிக்கப் போகிறார் கேப்டன். 2005-ல் நாங்கள் மதுரையில் நடத்திய மாநாட்டை ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்த்தது. சேலத்தில் நடக்கப் போற மாநாடு, அரசியலில் திருப்புமுனையை உண்டாக்கப் போகும் மாநாடு என்பதால், இந்திய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது!'' என்றார் நம்பிக்கையாக.



அ.தி.மு.க., கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சத்தமில்லாமல் மாநாட்டுக்குத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கூட்டணி நம்பிக்கையில்தான்!



- கே.ராஜாதிருவேங்கடம்



படங்கள்: எம்.விஜயகுமார்

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen