Freitag, 21. Januar 2011

போர்க் குற்றங்கள்: மீண்டும் சிக்கலில் சிறிலங்கா அதிபர்


சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவிற்குப் பயணமாகிறார் என்ற செய்தி வெளிவந்திருக்கும் நிலையில், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் மீண்டும் குரலெழுப்பியிருக்கின்றன.

போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது. சிறிலங்காவினது முப்படைகளின் தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்சவே இருக்கிறார்.

அனைத்துலக சட்டத்திற்கு அமைய, தங்களுக்குக் கீழ் செயற்படும் இராணுவத்தினர் இதுபோன்ற போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததை அதன் தளபதி அறிந்திருந்தால் அனைத்துலக சட்டங்களுக்கு அமைய அந்தத் தளபதியினை நீதியின் முன் நிறுத்தமுடியும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கூறுகிறது.

"நீதிக்குப் புறம்பான கொலைகள், துன்புறுத்தல் மற்றும் கட்டாய காணாமல்போதல் போன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரோ அவர்களுக்கு எதிரான சட்ட முன்னெடுப்புக்களைச் அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு உள்ளது" என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் சறீபி [Sam Zarifi] கூறுகிறார்.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார் என்பதை அமெரிக்காவிலுள்ள சிறிலங்காவினது தூதரகத்தின் பேச்சாளரால் உறுதிப்படுத்த இயலவில்லை.

சிறிலங்காவில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

தற்கொலைத் தாக்குதல்களை முன்னெடுத்ததோடு சிறுவர்களையும் படையில் இணைத்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கிறது.

"சிறிலங்கா இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதக்குழுக்களின் கைகளில் சிக்கி தாங்கள் கடுமையான துன்பமடைந்தமைக்கு காரணமானவர்கள் யாரோ அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோருகிறார்கள்" என்கிறார் சாம் சறீபி.

கடந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்திருந்த சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவின் பயணம் இடைநடுவில் குழப்பமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதிபர் மகிந்த ஒக்ஸ்போட் யூனியனில் ஆற்றவிருந்த உரை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்ததோடு விடுதலைப் புலிகள் அமைப்பினது செயற்பாடுகளும் முற்றுப் பெற்றன.

போரின் இறுதி மாதங்களில் மோதல்கள் உக்கிரமடைந்து காணப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் மாத்திரம் இராணுவத்தினால் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுமே பொறுப்பு என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் பிறற்றிக்கா பூட்டினிஸ் அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்திற்கு எழுதியிருந்ததாக அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த அமெரிக்காவின் இரகசியத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"நாட்டினது அதிபர் ராஜபக்ச, உயர் பதவிகளில் இருக்கும் அவரது சகோதரர்கள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் போன்சேகா ஆகியோர் உள்ளிட்ட நாட்டினது முக்கிய சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களே இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு. தனது படைவீரர்களும் மூத்த அதிகாரிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு துணியாதமைதான் வரலாறு" என 2010 சனவரி 15ம் நாளன்று அமெரிக்கத் தூதர் அனுப்பிய இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை விசாரணை செய்யும் முனைப்புக்கள் மந்தகதியில் இருப்பதற்கு இதுதான் காரணம் என அவர் கூறியிருந்தார்.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen