ஐ.நா நிபுணர் குழுவிற்கு சீனாவும் எதிர்ப்பு – வெற்றியளிக்கும் சிறீலங்காவின் காய் நகர்த்தல்
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவிற்கு ரஸ்யாவைத் தொடர்ந்து சீனாவும் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்கள் இது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கின் காங் (Qin Gang), சிறீலங்கா அரசும், மக்களும் இதற்கான விசாரணையை மேற்கொள்ளும் அளவிற்கு வினைத்திறனைக் கொண்டிருப்பதாகவும், ஏற்கனவே சிறீலங்கா அரசு விசாரணைக் குழுவொன்றை நியமித்திருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையும், அதன் செயலரும், ஏனைய நாடுகளும் அதன் உள்விவகாரத்தில் தலையிடாது, நாட்டைக் கட்டியெழுப்ப உதவி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரமுள்ள இரண்டு நாடுகள் (ரஸ்யா, சீனா) சிறீலங்கா அரசுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றமை, எதிர்காலத்தில் சிறீலங்கா அரசு தொடர்பான கடும்போக்கையோ, நடவடிக்கையையோ ஐக்கிய நாடுகள் சபை எடுக்க முடியாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறான பின்புலத்தில் பன்னாட்டு அரசியல் புறநிலைச் சூழலைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் விழிப்புடனும், உற்சாகமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதரவான நிலைப்பாட்டடை உருவாக்க முயற்சிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, இந்த நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அதிரப்தி அடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, ஐ.நா சபையில் வீற்றோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா உட்பட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மகிந்த ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிம் கூறியிருக்கின்றார்.
போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் பிறேசில், மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளால் சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் இந்தியாவின் ஆதரவுடன் சிறீலங்கா அரசினால் முறியடிக்கப்பட்டிருந்ததை பதிவு நினைவூட்ட விரும்புகின்றது.
RSS Feed
Twitter



Donnerstag, Juli 01, 2010
வானதி





0 Kommentare:
Kommentar veröffentlichen