Donnerstag, 24. Juni 2010

குஷ்புவும், நமீதாவும் செம்மொழி மாநாடும் : வே.மதிமாறன்

ஏ.ஆர். ரகுமானின், வன்இசையின் துணையோடு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சவ்ராஸ்டிரம், தமிழ் பாடகர்கள் ஒன்றிணைந்து, முக்கி… முக்கி…. பாடி செம்மொழி மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். இவர்களின் கூக்குரலில் தமிழர்களின் காது் செவிடாகிவிடும் அளவிற்கு தெருவெங்கும் திரும்ப, திரும்ப ஒலித்தது ‘தமிழ் மொழியாம்… தமிழ் மொழியாம்…’ என்கிற அபயக்குரல்…கூக்குரலோடும், அபயக்குரல் பாணியிலும் இசையமைத்து, ஈழத்தமிழர்களின் துயரங்களை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் என்று யாராவது ஒரு புண்ணியவன் விளக்கம் எழுதாமல் இருந்தால் அவர்களுக்கு புண்ணியமாக போகும். ஒலிப்பதிவை ஏ.ஆர். ரகுமான் ‘சிறப்பாக’ செய்ய, அதற்கு எற்றாற்போல் ஒளிப்பதிவை கவுதம் மேனன் செய்திருக்கிறார்.




சிதம்பரம் பத்மினி, சிறுமி ரீட்டா மேரி, சின்னாம்பதி கிராமத்து பெண்கள் இவர்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்த காவல்துறையின் வீரதீர தியாக செயல்களை நியாயப்படுத்தி என்ன தப்பு பண்ணாலும் அவர்களை ‘காக்க…காக்க…’ என்கிற பெயரில் படம் எடுத்தவர்தான் இந்த கவுதம் மேனன். அதற்காகத்தான் செம்மொழி விளம்பர பிராஜக்ட் அவரிடம் தரப்பட்டதோ என்னவோ? (அவரு பத்து பைசாகூட வாங்கலியாமே அவரே சொல்லியிருக்கார்).



கவுதம் என்பது அவரு பேரு. மேனன் என்பது அவரு படிச்சு வாங்குன பட்டமா? (வசனம் உபயம் ‘வேதம் புதிது’ திரைப்படம்).



எப்படியோ… பல மொழி பேசுற மக்களை ஒண்றிணைத்து தமிழுக்கு மாநாடு நடக்குது. வாழ்க தேசிய ஒற்றுமை.



போன ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை தங்கத் தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின போர்முரசு குஷ்பு தொகுத்து வழங்கினார்.



அந்த மேடையில் குஷ்பு, ‘பெரியாரின் கொள்கைகள்’ என்பதற்கு பதில், ‘பெரியாரின் கொள்ளைகள்’ என்று பேசினார். அதுபோல் செம்மொழி மாநாட்டு தொகுப்புரையை கலைஞர் டி.வி. புகழ் நடிகை நமீதா தொகுத்து வழங்குவாரோ என்னவோ? தெரியல.



ஒருவேளை அவருதான் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தா?!



அந்தம்மா வழக்கமா கலைஞர் டி.வியில பேசுறமாதிரி …



‘நம்ம கலைஜர் மச்சான்… செம.. மொலி மாநட்டை.. சூப்பரா.. நடத்துறாரு… நம்ம கலைஜர் மச்சானுக்கு உடன் பிரப்பு எல்லாம் ஒரு ஓ…போடு…’ ன்னு பேசுனா?’



நினைக்கவே நமக்கு சங்கடமா இருக்கு. உடன்பிறப்புகளுக்கு எப்படி இருக்குமோ தெரியலையே?



- வே.மதிமாறன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen