சிறிலங்காவில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவின் சிறப்புத் தூதுவராக முன்பு நியமிக்கப்பட்டிருந்த இந்தித் திரையுலகின் முக்கிய கதாநாயகன் அமிதாப் பச்சன் கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டார் எனத் தெரிவித்துள்ளதாக என்.டி.ரி.வி. தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
அமிதாப் பச்சன் இந்த விழாவின் தூதுவராக நியமிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டதிலிருந்து, மும்பையில் அவரது வீட்டின் முன்னே 'நாம் தமிழர்' அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில், கொழும்பு விழாவில் பச்சன் கலந்துகொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன், அனைவரது உணர்வுகளையும் மதித்து நடப்பதாக தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க; தமிழத்திரையுலகின் பிரபலங்கள் ரஜினி,கமல்,மணிரத்னம்.அஜீத், சூர்யா, நமீதா, எனப் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை வெளிப்படையாக அறிவிதத்தனர். இவ்வாறான நிலையில் தென்னிந்திய திரைப்படத் துறை சார்ந்த முக்கிய அமைப்புக்களும் எதிர் நிலை எடுத்துள்ள நிலையில் பிறமாநிலங்களின் பிரபல நட்சத்திரங்களும் இவ்விழாவினைத் தவிர்த்துள்ளனர். மலையாளத் திரையுலகப் பிரபலங்கள், மம்முட்டி, மோகன்லால், இந்தித் திரையுலகில், ஷாருக்கான், அர்ஜுன் ரம்பால் , ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர், விழாவை தவிர்த்துக் கொள்வதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எவ்வளவு தடைகள் வந்தாலும் ஐஃபா விழாவினை நடத்தாமல் விடமாட்டோம் - சிறிலங்கா எந்த தரப்பிலிருந்து எவ்வகையான தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து சர்வதேச திரைப்பட விழாவினை நடத்தி முடிப்போம் என சிறிலங்கா சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரியளவில் இவ்விழாவிற்கான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தமிழ்நாட்டின் சில தரப்பினரின் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் சுற்றுலாத்துறை பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் திலீப் முதாதெனிய தெரிவித்துள்ளார்.
ஆயினும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விழாவினை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளதோடு, விழாவுக்கான ஆயத்த நடவடிக்கைகள், அரங்க நிர்மாணம் என்பன துரித கதியில் நடந்துவருவதாக அறியப்படுகிறது.
எது எப்படியாயினும், விழாவின் சுவாரசியம், எதிர்பார்ப்பு குறைந்து வருவதாகவும், தமிழகத்தின் ஒரு பகுதி அசைவிலேயே இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நடத்தும் இவ்விழா ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றது எனில், கடந்த வருடம் இறுதி யுத்தத்தின் போது ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டிருந்தால், தமிழ்மக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியுமே என்கிறார்கள் தமிழக உணர்வாளர்கள். முடியாது போனது யார் தவறு..?
0 Kommentare:
Kommentar veröffentlichen