Dienstag, 2. März 2010

செம்மொழி மாநாட்டுக்கு முன் செய்யத்தக்கன.

எதிர்வரும் சூன் திங்களில் தமிழகம், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டின் வழியாக தமிழுக்கு எத்தகைய நன்மைகள் நடக்கும் என்பது தெரியவில்லை. இம்மாநாட்டின் மூலமாகத் தமிழ்மொழிக்கு ஏற்படவுள்ள ஆக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்பாக தமிழுக்கு உருப்படியாகச் செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கின்றன. மாநாடு நடத்த முண்டியடிப்பவர்கள் இந்த உருப்படிகளை முதலில் செய்ய வேண்டும். உண்மையிலேயே தமிழுக்கு ஆக்கமாகச் எதையேனும் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக கீழே உள்ள 10 பணிகளை செய்து முடிப்பதே காலத்தால் தமிழுக்குச் செய்யும் அரும்பணியாக அமையும். -சுப.ந










********************************





அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம்! கோவை மாநகரில் ஜூன் மாதம் நான்கு நாட்களும் தமிழ் மழை பொழியப்போகிறது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்குத்தான் முதல்வர் கருணாநிதி முதலில் திட்டமிட்டார். அது முடியாமல் போனதால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடி முடிப்பதில் தீவிரமாகிவிட்டார். அரசியல் எல்லைகளைக் கடந்து சிந்திக்கும் தமிழறிஞர்கள் மத்தியில், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.





'தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது

தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது

குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்

கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!

அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்

ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே

இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி

ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!'





என்று பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்தும் வந்திருக்கிற தமிழ், இன்னும் தொய்வில்லாமல் தொடர வேண்டுமானால், ஆக்கபூர்வமாகச் சில காரியங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.





1. தமிழுக்கு ஆசனம்!





இன்று பள்ளிகளில் தமிழ் முழுமையான பயிற்றுமொழியாக இல்லை. தமிழைப் படிக்காமல் ஒருவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து உயர் கல்லூரிப் படிப்பை முடித்து அரசு வேலையை வாங்கிவிட முடியும். வேறு எந்த மாநிலத்திலும் அவர்களின் மாநில மொழியைப் படிக்காமல் இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில்தான் ஆங்கிலம் பாட மொழியாகவும் இரண்டாவது மொழியாக ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றுடன் தமிழும் இருக்கும் நிலை தொடர்கிறது. விரும்பினால் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கட்டாயம் இல்லை என்ற நிலையில், யார் தமிழைச் சீந்துவார்? உயர் கல்வியைத் தமிழில் படிக்கப் புத்தகங்கள் இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், போதிய மாணவர்கள் முன்வராதபோது புத்தகம் தயாரித்து என்ன செய்ய என்று கேட்கிறது அரசு. இவர்களது கண்ணாமூச்சியில் தமிழ் மூச்சுத் திணருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் பல புத்தகங்களை அடுத்தடுத்து அச்சடிக்கவே இல்லை. அதேபோல் நீதிமன்றத்தில், கோயில்களில் தமிழ் கொலுவிருக்கவில்லை. இப்படி அனைத்து நிலைகளிலும் தமிழ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது!





2. தெருவில் தமிழ் இல்லை!





'தமிழ் நாட்டுத் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று கவலைப்பட்டார் பாரதிதாசன். வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் எனப் பெரியவை அனைத்தும் ஆங்கிலத்தில் தனது பெயரை அறிவிக்கின்றன. அதைத் தாண்டினால் தேநீர்க் கடைகள் 'ஸ்நாக்ஸ் ஷாப்'களாக மட்டுமே தங்களை அடையாளப்படுத்தி வருகின்றன. அனைத்துக் கடைகளிலும் தமிழில்தான் பெயர்ப் பலகைவைக்க வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. ஆனாலும், கடைப்பிடிப்பார் இல்லை. வணிகர் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதரித்த பிறகும் ஆங்கில மணம் குறையவில்லை!





3. தமிழைத் தகுதி ஆக்க வேண்டும்!





தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களைத்தான் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக மாநிலத்தில் முதலாவதாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு நிதி உதவி மற்றும் சலுகை தரப்படும். அது போன்ற ஏற்பாடுகள் கல்வியில் வேலைவாய்ப்பில் வழங்கப்பட வேண்டும். எந்தப் பட்டப் படிப்பாக இருந்தாலும், தமிழை ஒரு பாடமாகப் படித்தாக வேண்டும். தமிழ் வழி படித்தவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ் வழி பயிற்றுவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசாங்கத்தின் மற்ற சலுகைகள் கிடைப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும். பொதுமக்களை ஈர்க்கும்வகையில் தமிழை வலுவாக்க வேண்டும்!





4. முழுமையான வரலாறு என்ன?





தமிழ், தமிழன், தமிழ்நாடு மூன்றுக்கும் முழுமையான அதிகாரப்பூர்வ வரலாறு இன்று வரை இல்லை. தமிழ் வளர்ச்சித் துறை, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைந்து பல்லாண்டுகளாக தமிழ்நாட்டு வரலாற்றை எழுதி வருகிறார்கள். இதுவரை ஐந்து தொகுதிகள்தான் வந்துள்ளன. இந்த வேகத்தில் போனால், தமிழக வரலாறு வந்து முடிய பல ஆண்டுகள் ஆகும். அதேபோல், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர்ச் சொல் என்ன என்பதைக் கண்டுபிடித்து 'செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' தொகுக்கும் வேலை கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1974-ல் தொடங்கப்பட்டது. அதுவும் இன்று வரை முழுதும் வெளிவரவில்லை. தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நாகசாமி, நடனகாசிநாதனுக்குப் பிறகு ஆர்வமானவர் அமர்த்தப்படவில்லை. தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் பதவியில் அவ்வை நடராஜனுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அமர்த்தப்பட்டார்கள். அருங்காட்சியகம் 'பிடிக்காதவரை' நியமிக்கும் இடமாக ஆகிவிட்டது. தமிழுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் பார்க்கும் நிறுவனங்களை முறையாக கவனிக்க வெண்டும்!





5. செம்மொழி ஆகி என்ன பயன்?





தமிழுக்குச் செம்மொழித் தகுதி முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் கிடைத்தது. மத்திய அரசு அதனை மனமுவந்து செய்துகொடுத்தது. தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொல்பொருள் ஆய்வுத் துறை, அகரமுதலித் திட்ட இயக்ககம், திராவிட மொழிப் பல்கலைக்கழகம், ஆசியவியல் நிறுவனம் போன்றவை செய்யாத எதை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது என்று அறிவிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் 100 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளன. அவர்கள்விட்ட எதை இது செய்யப்போகிறது? கருணாநிதி பாடல் குறுந்தகடும், தொல்காப்பியத்தை பாகவதர்களைவைத்துப் பாடவைப்பதும் இதன் வேலையாக இருந்தால், மக்களுக்கு என்ன பயன்? ஏற்கெனவே, தொல்பொருள் ஆய்வுத் துறை இருக்கும்போது, அதே காரியம் செய்பவர்களுக்கு செம்மொழி நிறுவனம் பணம் ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான விதிமுறைகளை வகுக்கக்கூட மத்திய அரசு தடையாக இருந்துள்ள நிலைமைதான் நடந்துள்ளது!





6. தமிழ்ப் பள்ளிகள்!





ஒவ்வொரு நாடும் தங்களது மொழியை வளர்க்கச் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகின்றன. அதுபோன்று தமிழுக்கும் அமைத்தாக வேண்டும்.அனைவரும் தமிழ் படிக்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழியின் வளம், சொல்லும் திறம், இலக்கியச் செழுமை, அதில் உள்ள கற்பனை ஆகியவற்றை அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக, தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் அமைக்க வேண்டும். இதில் ஆர்வமுடைய அனைவரும் சேரலாம். படிக்கலாம். பட்டங்களோ, தேர்வுகளோ இல்லை என்பது மாதிரி திட்டமிடலாம். இது நம்மவர்கள் மட்டுமல்ல, தமிழ் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் சொல்லித்தர வாய்ப்பாக அமையும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால், நாம் அதைச் செய்யவில்லை!





7. அதீத கற்பனை அவசியம் இல்லை!





மத்திய ஆட்சி மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15 மொழிகளை அட்டவணை மொழிகளாகச் சொல்கிறது. இந்த 15 மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. 'அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்கி விட்டால், அனைத்துக்கும் மூத்த மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும்' என்று பலத்த கைத்தட்டலுக்கு மத்தி யில் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் இருக்கிறது. ஏற்கெனவே தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் இருந்த பெயர்ப் பலகைகளில் தற்போது தமிழ் நீக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைக்கு உட்பட்ட மத்திய அரசு அலுவலகங்களின் பயன்பாடுகளில் தமிழுக்குத் தரப்பட வேண்டிய இடத்தைப் பெறுவதுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்!





8. உலகத்தை ஒன்றாக்கும் மொழி!





பரந்து விரிந்த இந்த பூமிப் பரப்பில் 233 நாடுகளில் தமிழன் வாழ்கிறான். இங்குள்ள 6 கோடிப் பேரைத் தாண்டி, மீதி 4 கோடிப் பேர் இருக்கிறார்கள். இலங்கை, கனடா, அமெரிக்க ஐக்கிய மாநிலம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, சுவிஸ், பிஜி, மியான்மர் ஆகிய நாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுக்கும் தாய்த் தமிழகத்துக்கும் அதிகளவு ஒட்டும் இல்லை... உறவும் இல்லை. அங்கும் பல அமைப்புகள் உள்ளன. இங்கும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் தொடர்புகள் இல்லை. சென்னையில் இருக்கும் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட், பிரிட்டனுடன் தொடர்புவைத்து இயங்கி வருகிறது. இதுபோன்று அனைத்து நாட்டுத் தமிழர்களையும் இணைக்கும் ஒருங்கிணைப்பு மையம் அமைக்க வேண்டும்!





9. அனைத்து அறிவும் ஒரே இடத்தில்!





100 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் தயாராகி வருகிறது. மிகப் பெரிய முயற்சி. ஆவணக் காப்பகம், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை இலக்கிய சங்கம், கன்னிமரா நூலகம் என்று பல்வேறு காலகட்டங்களில் இது போல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் சென்னையில் பிரிந்து பிரிந்துகிடக்கின்றன. இவையும் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரமாண்டமானவைதான். அவற்றையும் தனியாகக் கவனிப்பாரற்று ஒதுக்கி விடாமல், இதனுடன் இணைத்தால் உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகமாக கோட்டூர்புரத்தில் அமைவது பெருமைக்குரியதாகும். தமிழ் மொழி தனது செல்வங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறது என்ற பெயர் கம்பீரமாக எழும்!





10.கண் கலங்கும் கணினித் தமிழ்!





ஓலைச்சுவடி காலத்து தமிழ் இன்றைய கணினி யுகத்திலும் அதையும் உள்வாங்கி வளர்ந்துகொண்டு இருக் கிறது. ஆனால், அதன் புத்தெழுச்சிக்கும் இருப்புக்கும் இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன. ஆங்கிலத்தில் சொன்னால் குரலைப் பதிந்துகொண்டு அதை எழுத்தாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கணிணியில் வந்து விட்டது. கணிணியை வைத்துக்கொண்டு ஆங்கிலத் தில் அடைந்துள்ள எல்லைகளை இன்னும் தமிழ் நெருங்கவில்லை. யூனிகோட் குறியீட்டு முறை தான் அனைத்து உலக மொழிகளுக்குமான பொதுவான குறியீட்டு முறை. ஒவ்வொரு மென் பொருள் தயாரிப்பாளரும் வெவ்வேறு குறியீட்டு முறையைத் தமிழில் பயன்படுத்துவதால் ஒருவர் சேகரித்த தகவல் இன்னொருவரால் படிக்க முடியவில்லை. இந்த அடிப்படையில் தமிழ் மொழிக்கு 313 எழுத்துக் குறியீடுகள் தேவை. ஆனால், யூனிகோட் கன்சார்டியம் 128 இடங்களை தான் தந்துள்ளது. எனவே யூனிகோடில் தமிழுக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழில் கீ-போர்டு இன்னும் வரவில்லை. எனவே, கணினியைப் பொறுத்தவரை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.





'தமிழ் தழைக்க இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்துவிட்டு வெற்றி மாநாடாகக் கொண்டாடுவதுதான் சிறப்பானதாக இருக்கும்' என்பது பலதரப்பட்டவர் கருத்து!
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen