உலகெங்கும் எந்த கூட்டங்கள் நடந்தாலும் அந்த கூட்டங்களில் எல்லாம் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசப்படுகிறது. தீவிரவாதம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு இந்த உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. அளவிட முடியாத ஆற்றலும் உலகத்தையே தன் கரங்களில் வைத்துக் கொள்ள நினைப்பதுமான அமெரிக்காவின் வல்லாதிக்க சக்தி அந்த செப்டம்பர் 11ல் கதிகலங்கி போய்விட்டது.
இதுவரை எந்த திரைப்படத்திலும் வராத காட்சியாக ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களால் கற்பனை செய்யமுடியாத செயலாக தம் கரங்களையே கொண்டு தம் கண்ணை குத்திய செயலாக அந்த செப்டம்பர் 11 அமைந்தது.
அமெரிக்க விமான நிலையத்திலிருந்து விமானத்தை எடுத்துச் சென்று அமெரிக்க வர்த்தக நிறுவனமான இரட்டை கோபுரத்தை இளநீர் சீவுவதை போல ஒரு விமானத்தை மோதவிட்டு சீவிய அந்த காட்சி உலகமக்கள் எவராலும் மறக்க முடியாத நிகழ்வாக மாறிப்போனது. அத்தோடு நிறுத்தாமல் அமெரிக்க இராணுவதளமான பெண்டகனையும் குறிவைத்து அந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அமெரிக்க ராணுவம் கதிகலங்கிவிட்டது.உலகத்தின் பார்வையனைத்தும் அமெரிக்காவை நோக்கி திரும்பியது. சி.ஐ.எ. என்னும் அமெரிக்காவின் உளவு பிரிவு உலகிலேயே வல்லமை வாய்ந்ததாக கருதப்பட்ட நிலை, அந்த நம்பகத்தன்மை, விமானத் தாக்குதலுக்கு பின் தகர்த்தெறியப்பட்டது.
உலகின் ஒட்டு மொத்த தலைவர்களும் ஒன்றிணைந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். அடிப்படையில் மனிதமூளை ஏதோ ஒரு நிகழ்வை அல்லது ஒரு சித்தாந்தத்தை இல்லையெனில் தாம் விரும்பும் கோட்பாட்டை மூளையிலே பதிவு செய்து கொள்கிறது. இந்த பதிவுகள் நாளடைவில் தன் வாழ்க்கை ஏக்கங்களோடு இயல்பாகவே கலந்துவிடுகிறது.இதன் தொடர்ச்சியே தன் வாழ்வும், கோட்பாடும் வெவ்வேறானது அல்ல என்ற பரிமாண வளர்ச்சி அடைகின்றது. இதுதான் பிறரை அழித்தொழிக்கவும், தாம் அழிந்துபோகவும் காரணியாக மாறிவிடுகிறது. தீவிரவாதம் என்பதை நாம் அடுக்கடுக்காக பல்வேறு கூறுகளாக பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும்.
தீவிரவாதம் என்ற சொல் ஏதோ வானில் இருந்து குதித்த சொல் அல்ல. ஆகவே மனித வாழ்வியலோடு எதெல்லாம் மிகைப்படுகிறதோ அதுவே தீவிரவாதமாக மாறிவிடுகிறது. நாம் தீவிரவாதம் என்பதை சரியாக புரிந்துகொள்ளாவிட்டால் தீவிரவாதிகளுக்கும், போராளிகளுக்குமான வேறுபாடு நமக்கு புரியாமல் போய்விடும்.இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மதத் தீவிரவாதமும் இனத் தீவிரவாதமும்தான். நாம் ஆழ்ந்து பார்த்தோம் என்றால் நாம் வாழும் சமூக கட்டமைப்புகளில்கூட தனிநபர் தீவிரவாத செயல்கள் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய செய்தித்தாள்களில் வரும் மனித அழித்தொழிப்பு நிகழ்வுகளும், ஒருவித தனிமனித தீவிரவாதம் தான். குடும்பங்களில் தன் ஆளுமையை நிலைநாட்ட ஆண்கள் கையில் எடுத்திருப்பது குடும்பத் தீவிரவாதம் ஆகும்.கல்லூரிகளில் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காக மாணவர்களை முடக்கி போட வேண்டும் என்பதற்காக கல்லூரிகளுக்கு விடுப்பளித்து விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவது அதற்காக அடக்குமுறைகளை கையாள்வது அரசு தீவிரவாதம் ஆகும்.
உலக நாடுகளின் மீது தமது ஆக்டோபஸ் கரங்களை விரித்து அந்த நாடுகளில் உள்ள கனிமங்களையும், செல்வங்களையும், கொள்ளையடிக்க நினைப்பது வல்லாண்மை தீவிராதம் ஒன்றுபட்ட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ஈராக் மீது நடந்த அதிபயங்கரமான, காட்டு மிராண்டித்தனமான மனித அழித்தொழிப்பை பயங்கரவாதம் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. அதற்கு மாறாக என்ன பெயர் சொல்லி அழைப்பது.சொந்த மண்ணின் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிய ஈராக்கியர்கள் தீவிரவாதிகள் என்றால் ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் செய்த அக்கிரமத்துக்கு பெயர் தீவிரவாதம் இல்லாமல் வேறு என்ன? ஹமாஸ் படையினரை அழிப்பதாகக்கூறி பாலஸ்தீன நகரத்தின் காசா பகுதியை மிகக் கொடூரமான வெடிகுண்டுகளால் வீழ்த்தி அப்பாவி உயிர்களை சூரையாடிய இஸ்ரேல் தீவிரவாதியா இல்லையா?
இன்று ஈழத்தமிழர்கள் மீது மிகப்பெரிய இன வெளி தாக்குதல்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசிற்கு தலைமையேற்றிருக்கும் ராஜபக்சே தீவிரவாதியா இல்லையா? ஆக தீவிரவாதம் என்பது இடம் சார்ந்து, மண்சார்ந்து, மொழி சார்ந்து நிற்பதாகும். இயற்கையான புற்களும், செடிகளும் முளைப்பது போல் தீவிரவாதம் முளைப்பதில்லை. அது எதிர்வினை செயல்களில் மட்டுமே செழித்து வருகிறது.அடக்க அடக்க எழும்பி நிற்கிறது. அடங்க மறுக்கிறது. அத்துமீறுகிறது. தம்முடைய ஆற்றல் அனைத்தையும் ஒருவர் இணைத்து தமது எதிரியாக இருக்கும் எல்லோரையும் அழிக்க முனைப்பு காட்டுகிறது.
உலக வரலாற்றிலே ரோமானிய அடிமையாக இருந்த ‘ஸ்பார்டகாஸ்’ என்ற மாவீரன் அடிமைத் தனத்திற்கு எதிராக முதல் முறையாக குரல் எழுப்பினான். மாமனிதன் கார்ல்மார்க்ஸ் கூட ஸ்பார்டகாஸையே தமது முன்னோடியாக ஏற்று கொண்டார். ஆக அடிமைவாழ்வுக்கு எதிராக குரல் எழுப்புவது தீவிரவாதம் அல்ல, அப்பாவி மக்களை கொன்றொழிப்பதுதான் தீவிரவாதம் என்பதை நாம் திட்டவட்டமாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் மறுமுறையும் பதிவு செய்கிறோம். தீவிரவாதிகளுக்கும், போராளிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. தீவிரவாதிகள் அழித்தொழிப்பது மட்டுமே தீர்வு என்கிறார்கள். ஆனால் போராளிகள் அதை எல்லாம் கடந்து தமது மக்களை காப்பதற்காகவே உயிர் கொடையாளர்களாக மாறுகிறார்கள்.
ஒரு மதத்தை, ஒரு இனத்தை காக்க ஆயுதம் ஏந்துவது ஏதோ ஒரு ஆயுதகுழுவிடம் இருந்து காத்துக் கொள்வதற்காக என்பதை போலத்தான் இந்த நிகழ்வுகள் தொடங்குகின்றன. ஆனால் முழு பக்கத்திலும் இரத்த சிந்தல்களும், மனித உயிரிழப்புகளும் அளவிட முடியாத அளவில் பெருகி இன்றைய மனித நாகரிகத்திற்கு சவால் விடுகின்றன. யாரைக்காப்பாற்ற ஆயுதம் ஏந்துகிறார்களோ அவர்களே அந்த ஆயுதத்திற்கு இரை போகக் கூடிய கொடுமை நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.மனிதமாண்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் மனித உயிரின் ஆற்றலை உணர்ந்த மானுட சிந்தனையாளர். இதற்காக ஒவ்வொரு நாளும் தமது எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சோகம் என்னவென்றால் இதுவரை நடைபெற்ற போரினால் கோடிக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் இதை மாற்றத்துடிக்கும் மனநிலையும், ஆதரவும் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மகத்துவமிக்க மனித உயிர்கள் மிககேவலமான முறையில் அழித்தொழிக்கப்படுகின்றன. அழித்து ஒழிப்பது ஒரு தீர்வா? என்பதை நாம் ஒருகணம் சிந்திக்க வேண்டும். பதிலுக்கு பதில் தாக்குதல் என்பது ஒரு தீர்வா? என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.இக்கொடிய தாக்குதல் தொடர் கதையாக இருந்து கொண்டேதான் இருக்கும். உலக மாந்தர்களை இயற்கையின் இடிபாடுகள் ஒருபக்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
புதிய பொருளாதார கொள்கை என்னும் பெருங்கொடுமை, ஏழைமக்களை பெரும் பஞ்சங்களால் சூழ்ந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. விடைதெரியாமல் நீளும் இம்மக்களின் துயர்களுக்கு தீர்வுகாண ஒருவழியை கண்டுபிடிப்பதை விட்டு கொடும் ஆயுதங்களால் பதில் சொல்லும் தன்மை அழித்து ஒழிக்கப்பட வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என காரல் மார்க்ஸ் கூறியது உண்மையாகும் பட்சத்தில் மனித குலத்திற்கெதிரான இக்கொடுமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நிலம், மொழி, மதம், இனம் கடந்து மனிதர்களை அப்பட்டமாக நேசிக்கப் பழக வேண்டும். புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் சொன்னதைப் போல உன்வீட்டுக்கும், உன் பக்கத்து வீட்டுக்கும் இடையே உள்ள சுவரை இடித்துத்தள்ள வேண்டும்.
வானைமுட்டும் மலையின் மீது ஏறி நின்று ‘பாரடா உனது மானிட பரப்பை’ என்று கூச்சலிட வேண்டும்.வன்முறை என்பது கோழைகளின் ஆயுதம். நம்பிக்கையற்றவனின் வெறிச்செயல். அரசியலற்ற வன்முறையை ஒருபோதும் நாம் ஆதரிக்கக்கூடாது. வருங்கால தலைமுறை வன்முறைதான் தீர்வு என்று தீய செயலுக்குள் மூழ்கிவிடக்கூடாது. இனக்குழுவை நேசிப்பதால் வன்முறை கொழுந்து விட்டெரிகிறது. இவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் அடிப்படையான சில செய்திகளை மட்டும்தான்.இந்த மண்ணை நேசிப்பவர்கள், உண்மையாக அன்பு செய்பவர்கள், இந்த மண்ணிற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எல்லாம் ஏராளமான படைப்புகளை நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஐரோப்பிய மனிதர்கள் கண்டுபிடித்த அறிவியல் படைப்புகள் இன்று உலகம் முழுக்க பயன்பட்டு இருக்கிறது.
ஜெர்மனியர்கள் கண்டுபிடித்த அரிய மருந்து பொருட்கள் இன்று உலகம் முழுக்க மனிதர்களை குணப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆக மனித படைப்புகளை அப்பட்டமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை தீர்க்க, தீவிரவாதம் தீர்வாகாது என்பதை நாம் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
0 Kommentare:
Kommentar veröffentlichen