தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் இணக்கப்பாட்டைக் காண்பதிலும், அகதிகள் முகாம்களில் உள்ளோரை மீள் குடியமர்த்தம் செய்வதிலும், தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதிலும் சிறிலங்க அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, தான் அந்நாட்டிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அதிபர் ராஜபக்சவுடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள பான் கி மூன், தமிழர்களுக்கு எதிரான போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைப்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பாக பான் கி மூன் முடிவு குறித்து ஐ.நா. செய்தி மையம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
“கடந்த ஆண்டு தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போருக்குப் பின் சிறிலங்க அரசுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் படி, தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் இணக்கப்பாட்டைக் காண்பது, போரினால் இடம்பெயர்ந்த மக்களை மறு குடியமர்த்தம் செய்வது, போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பாக்குவது ஆகியவற்றில் சிறிலங்க அரசின் நடவடிக்கையும், முன்னேற்றங்களும் திருப்தியளிப்பதாக இல்லை என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இவையாவற்றையும் தான் விவாதித்ததாக செய்தியாளர்களிடம் பேசுகையில் பான் கி மூன் கூறினார்.
இலங்கைத் தீவில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கவலை தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பிரச்சனைகள் குறித்துப் பேச ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் பி. லின் பாஸ்கோ, சிறிலங்கா சென்று அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேசுவார் என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார், என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen