விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணி அவருக்காகப் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரு சுங்க அதிகாரிகள் கைதாகியுள்ளனர். விடுதலைப் புலி இயக்கத்தினர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நோர்வே அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலமான 2004 ஆம் ஆண்டில், கைதுசெய்யப்பட்டுள்ள இரு சுங்க அதிகாரிகளும் வன்னி சென்று பொட்டு அம்மானைச் சந்தித்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு கூறுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு வேண்டிய சாதனங்களை கொழும்பு துறைமுகம் ஊடாக தடையின்றிக் கொண்டுசெல்வதற்கு இவர்கள் இருவரும் உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது முகவர்களை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலும் கொழும்பு துறைமுகத்திலும் அமர்த்தியிருந்ததாகக் கூறுகின்ற அரசாங்கம், தற்போது விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறுகிறது. புலிகளுக்கான பொருள் விநியோகங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பல பாதுகாப்பு நடவடிக்கைகளை கொழும்பு துறைமுக சுங்கத் துறையின் ஒரு பகுதியினர் கடுமையாக எதிர்த்துவந்தனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen