2010 ஜனவரி 6ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த இன அழித்தலிற்குப் பிறகு கூடும் இரணடாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது.
இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் - ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது.
இலங்கையில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியிறுத்தி "அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23ஆம் தேதியன்று முதல்வர் தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இது.
இலங்கையில் நடந்த, இன்னமும் தடையின்றி நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப் படுகொலையில் முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும், சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்தத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறும் ஒரு தொடராக அமைகின்றது.
மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் - இலங்கையா? ஈழமா? எது இனப் பிரச்சனைக்குத் தீர்வு - என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ள நாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இது. அவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்கை ஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும், அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது.
இந்த சட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கூடிய ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே.
ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டு காலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகளும் தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம் இதுதான்.
அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் முன்பாகக் கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில் எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்த காலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா?
---------------------------------------------------------------------
ஈழத் தமிழர் இனப்படுகொலையும் தமிழக சட்டமன்ற அரசியல் கட்சிகளும்
மக்களவைத் தேர்தலிற்குப் பிறகு மே 22ஆம் தேதியன்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. மே 23ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பான் கி மூன் வன்னியில் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களை சந்தித்தார். ”உலகம் முழுதும் உள்ள பல அகதிகள் முகாம்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். ஆனால் இங்கு உள்ளதைப்போல கொடூரமான சூழலில் அமைந்துள்ள முகாமை நான் கண்டதில்லை” என்று அவர் கூறினார்.
மே 27ஆம் தேதியன்று ஜெனிவாவிலுள்ள ஐ.நா.சபையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த படுகொலைகளை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய, சீன, ரஷ்ய அரசுகளின் தலைமையிலான கூட்டணி அரசுகள் முறியடித்தன. காங்கிரஸ் கூட்டணி அரசின் தமிழ் இன எதிர்ப்புப் போக்கினை ஜூன் மாதம் கூடிய தமிழக சட்டமன்றம் கண்டிக்கவில்லை.இருப்பினும் ஜூன் 6ஆம் தேதியன்று இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை பான் கி மூன் தெரிவித்தார்.
ஈழப்போரின் கடைசி சில நாட்களில் மட்டும் 20 ஆயரத்துக்கும் மேலான அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களை இங்கிலாந்து நாட்டின் “டைம்ஸ் ஆன்லைன்” பத்திரிகை மே 29ஆம் தேதியன்று வெளியிட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை மீதான வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் மாதம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே துணை போகத் துணிந்த இந்திய அரசு, அந்தக் கோரிக்கையை இன்று வரை கண்டுகொள்ளவில்லை. கேள்வியை முன்வைத்தத் தமிழக உறுப்பினர்களும் தங்களின் வேண்டுகோளை ஏன் மத்திய அரசு ஏற்கவில்லை என்ற கேள்வியைத் தொடுத்து உரிமைக்காகப் போராடவுமில்லை.ஆகஸ்டு 25ஆம் தேதியன்று தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரமான வீடியோ ஆவணம் ஒன்றை இலங்கையில் நடந்துவரும் தமிழ் இனப்படுகொலைக்கு ஆதாரமாக இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தமிழக சட்டமன்றக் கட்சிகள் இதையும் கண்டுகொள்ளவில்லை.
சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னிப் பெருநிலத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும் வேளாண் பணிகளுக்கு உதவுவதற்காக செப்டம்பர் 17ஆம் தேதியன்று ஆறு பேர் அட்டங்கிய நிபுணர் குழு ஒன்றினை இந்திய அரசு அனுப்பி வைத்தது. அதில் நான்கு பேர் தமிழர்கள். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை இந்திய அரசின் பிரதிநிதிகள் என்றும் பாராது, முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க சிங்கள அரசு அனுமதி மறுத்து அவமதித்தது. இதன் பின்னரும் கூட, இந்திய அரசு இலங்கை அரசின் போக்கைக் கண்டிக்க முன்வரவில்லை. இலங்கை அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கையைத் தமிழக சட்டசபையில் எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.இருப்பினும், இவற்றை எல்லாம் பிற நாடுகளின் அரசுகள் கவனிக்கத் தவறவில்லை. இலங்கையில் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இதுவரை வெளியிவந்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் அக்டோபர் 19ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியமும், அக்டோபர் 22ஆம் தேதியன்று அமெரிக்க அரசும், மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் இழைத்ததாக இலங்கை அரசின் மீது குற்றம் சாற்றி அறிக்கை வெளியிட்டன (அரசை இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாக சுட்டிக்காட்டும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டன – இனப் படுகொலை என்று அவைகள் கூறவில்லை).சிங்கள இனவெறி அரசால் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களையும், இனவெறி ஜனாதிபதி மகிந்த ராசபக்சாவையும் தி.மு.க. கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாத இடைப்பகுதியில் சந்தித்து விட்டுத் திரும்பிய நாட்களில் இந்த இரு அறிக்கைகளும் வெளியாயிருந்தன.
”எங்கள் அறிக்கையைக் காட்டிலும் உங்களது அறிக்கையானது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியன உலக அரசுகளுக்கும், மக்களுக்கும் தெரிவிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்பதைப் போருக்குப் பிறகு இலங்கைக்கு முதல் முதலாகச் சென்ற இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பதற்காகத்தான் அந்த இரு அறிக்கைகளும் அவர்களது இலங்கைப் பயணம் நிறைவடைந்த ஒருவார காலகட்டத்துக்குள் வெளியாயிருந்தன.இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின், அமெரிக்க அரசின் குறிப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவினர் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசிடம் அவர்கள் அளித்த அறிக்கையின் விவரங்கள் என்ன என்பதை அவர்கள் இன்றுவரை வெளியிடவில்லை.இருப்பினும், முள்வேலி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சந்தித்துவரும் சித்திரவதையை சிங்களவர்களில் உள்ள சில மனிதாபிமானம் மிக்கவர்கள் வெளிப்படையாகப் பேசத் தவறவில்லை.
மே 14ஆம் தேதியன்று வவுனியாவில் உள்ள முள்வேலி முகாம்களில் இருந்த தமிழ் மக்களைப் பார்த்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா “ இவர்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையின் நீதிஅமைப்பில் இவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதே இல்லை. இதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்படலாம்” என்று ஜூன் 4ஆம் தேதி வெளிப்படையாக அறிவித்தார். http://transcurrents.com/tc/2009/06/idps_in_vavunia_we_are_doing_a.html ).
சிங்கள அறிவுஜீவிகளால் நடத்தப்பட்டுவரும் Groundviews என்ற ஆங்கில இணைய இதழ் ஜூலை 2ஆம் தேதியன்று முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரடியாகக் கண்டறிந்த ஒருவரின் அனுபவத்தை வெளியிட்டது. http://www.groundviews.org/2009/07/02/an-eye-witness-account-of-idp-camp-conditions-in-sri-lanka/ சிங்களத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தக் கட்டுரை தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ள முள்வேலி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கொட்டடிகள்தாம் என்பதை உலகுக்கு உணர்த்தின.
ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று பேசிய அமெரிக்க அரசின் செயலாளரான ஹிலாரி கிளிண்டன் “ இலங்கை அரசானது கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது “ என்று கூறினார்
http://www.egovmonitor.com/node/29093அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலாளரான ரால்ப் மிலிபேணட் அக்டோபர் 14ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் “முகாம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் வரும் காலங்களில் இங்கிலாந்து அரசு அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்திக் கொள்ளும்” என்று எச்சரித்தார். http://www.irinnews.org/Report.aspx?ReportId=86712
அவரது வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாக இருக்கவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 17ஆம் தேதியன்று தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=71064 )
சமாதான வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் படுகொலை செய்யச் சொல்லி இலங்கை ராணுவத்தின் 58ஆவது டிவிஷனின் தலைவரான பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், இராணுவ அமைச்சகத்தின் செயலருமான கோத்தபாயா ராஜபக்சாதான் என்று இலங்கை ராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா டிசம்பர் 12ஆம் தேதியன்று இலங்கையின் சண்டே லீடர் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
முகாமில் அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் தமிழ் பிரஜையான வாணி குமார் டிசம்பர் 20ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவரும் அப்சர்வர் பத்திரிக்கைக்குக் கொடுத்த நேர்காணலில், முகாமில் உள்ள ஒவ்வொரு தமிழச்சியும் எவ்வாறு கற்பழிப்பு, மானபங்க சித்திரவதைக்கு சிங்கள அதிகாரிகளாலும், ராணுவத்தினராலும் உள்ளாக்கப் பட்டனர் என்பதை விவரித்து உள்ளார். அவரது கூற்றை உண்மைதான் என்று இலங்கை அரசின் மனித உரிமை அமைச்சகத்தின் செயலாளரான ராஜீவ் விஜய சேகர ஒத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டிசம்பர் 21ஆம் தேதியன்று ஐ.நா.சபை மீண்டும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறது. முதல் கட்டமாக, ”வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத்தின் மூன்று தலைவர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்ற கேள்வியை அது இலங்கை அரசுக்கு விடுத்திருக்கிறது.
இவை எவற்றையும் தமிழக அரசியல் கட்சிகள கண்டுகொள்ளவில்லை.ராஜ்ய சபையில் டிசம்பர் 5ஆம் தேதி சி.பி.ஐ. தலைவர் டி.ராஜா இலங்கையில் நடந்துவரும் இனப்படுகொலை குறித்து பேசியபோது “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்ய சபை அவைத் தலைவரின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தமிழக அரசியல் கட்சி ஒன்றுகூடக் குரல் கொடுக்க முன்வரவில்லை!
--------------------------------
ஈழத் தமிழர் இன சுத்திகரிப்புக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளும் தமிழக சட்டசபை அரசியல் கட்சிகளும்
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைப் போர் 2009 மே மாதம் 18ஆம் தேதியன்று முடிவடைந்தது என சிறிலங்க இராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர். சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கை அரசால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.இவ்வாறு அடைக்கப்பட்ட / அடைக்கப்படவிருந்த மக்களின் மறுவாழ்வுக்காகவென்று “வடக்கின் வசந்தம்” என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009இல் முன் வைத்தது. வன்னி மக்களின் மறுவாழ்வு என்ற சாக்கில் - போரின் மூலம் தான் கைப்பற்றிய வன்னிப் பெருநிலத்தையும், ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ் குடா பகுதியையும் சிங்கள நிலப்பகுதியாக எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே 7ஆம் தேதியன்று இலங்கை அரசு ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தம்பியும், ஆலோசகரமுமான பசில் ராஜபக்சாவின் தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதே அந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.
இந்த செயற்குழுவானது மூன்று நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது:
l வட ஈழத்தில் இராணுவ முகாம்களை நிறுவுவதும், சிங்களர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை நிறுவுவதும், கண்ணி வெடிகளை அகற்றுவதும் இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம்.
l முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீண்டும் வன்னி நிலத்தில் குடியேற்றுவதும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவுவதும் இரண்டாம் நோக்கம்.
l வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலை ந்டத்துவதும், 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதும் மூன்றாம் நோக்கமாகும்.
வடக்கின் வசந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்ட மறு நாளே இந்திய அரசு இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்தது. மே 23ஆம் தேதியன்று இந்தத் தொகை 500 கோடி ரூபாயாகக் கூட்டப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி இலங்கை ஜனாதிபதியின் தம்பியும், அந்த நாட்டின் நிழல் ஜனாதிபதியாக செயல்பட்டுவரும் பசில் ராஜபக்சா புதுதில்லி வந்திருந்த போது இந்தத் தொகையை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும் மன்மோகன் அரசு முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாயின.
தமிழ் மக்களை உள்ளடக்காத “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் நிர்வாகக் குழுவை எதிர்த்து தமிழக சட்டசபையோ, அதன் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவில்லை. மாறாக, சிங்களர்களின் தலைமையில் அமைந்த நிர்வாகக் குழுவிற்கு இந்திய அரசு அளித்த அங்கீகாரத்தை தமிழக ஆளும் கட்சி எவ்விதக் கேள்வியும் இன்றி ஆமோதித்தது. இந்த அடிப்படைத் தவறே அதனை மேலும் பல தவறுகளை இழைக்கத் தூண்டுவதாக அமைந்து விட்டது.
ஜூன் - ஜூலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த வேளையில் இலங்கைத் தூதுவரான ரோமேஷ் ஜெயசிங்கேவின் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது. ஜூலை 8ஆம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், இராணுவ ஆய்வாளருமான லெப்டினண்ட் ஜெனரல் V.R.. ராகவன் கலந்து கொண்டு பேசினார். சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னிப் பெருநிலத்தில் அடுத்து வரும் சில மாதங்களிலேயே சிங்கள ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 2 லடசத்து 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படலாம் என்ற தகவலை வெளியிட்டார். அவரது கருத்தை அந்த ஆய்வரங்கத்தில் இருந்த இலங்கைத் தூதர் மறுக்கவில்லை. ஜூலை 15ஆம் தேதியன்று இதே கருத்தை சரத் பொன்சேகாவும் வெளியிட்டார்.
http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=11946&cat=1
தமிழர்களுக்குச் சொந்தமான பகுதியில் சிங்களக் குடியேற்றத்தையும், ராணுவமயமாக்கலையும் உறுதிப்படுத்தும் இந்தக் கருத்துக்களை அப்போது நடந்து கொண்டிருந்த தமிழக சட்டமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, ஈழ மக்களின் வாழ்வாதாரமான அவர்களின் பாரம்பரிய நிலத்தைப் பறிக்கும் சிங்கள இனவெறி அரசின் திட்டத்தை எதிர்த்து எவ்விதத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவர இயலவில்லை.
வடக்கின் வசந்தம் என்ற நயவஞ்சகத் திட்டத்தினைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே அக்டோபர் 6ஆம் தேதியன்று சீனாவுக்கு ராஜபக்சா அரசினால் அவசர அவசரமாகக் கொடுக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை ஒப்பந்தங்களை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. பாளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் ரயில் பாதையை அமைப்பதற்கும், வட ஈழத்தின் அனைத்து சாலைகளையும் செப்பனிடுவதற்குமான ஒப்பந்தத்தை சீன அரசு நிறுவனங்களுக்குத் தமிழ் மக்கள் எவரையும் கேட்காமலேயே ராஜபக்சா அரசு அளித்தது. இந்தப்பணிகளை செயல்படுத்த சீனர்கள் பெருமளவில் வட ஈழ நிலத்திற்கு வந்துள்ளனர். அவர்களது செயல்பாடுகள் சாலைப் பணிகளோடு நின்றுவிடுமா அல்லது தமிழ் மக்களை எதிர்காலத்தில் முற்றிலுமாக ஒடுக்குவதற்கான திட்டமிடலில் சிங்கள அரசுடன் அவர்களது செயல்பாடுகள் கைகோர்க்குமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாக உள்ளது http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/12/07/Chinese-projects-proving-costly-for-Lanka.aspx )
ஜூன் மாதம் தொட்டு முகாம்களில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷமே தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. ஆனால், முகாமில் இருந்து புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதக் கவலையையும் கொள்ளவில்லை. சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளை சர்வதேச போரியல் சட்டங்களின் அடிப்படையில் போர்க் கைதிகளாகத்தான் பாவிக்கவேண்டும் என்ற கருத்தை சர்வதேச அளவில் மனித உரிமை இயக்கங்கள் வலியுறுத்தின. சிங்கள அரசின் சித்திரவதைக் கொட்டடிகளில் வீழ்ந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் காக்கும் அந்த அதி முக்கியக் கருத்தையும் தமிழக சட்டசபைக் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டன.
முள்வேலி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் எவ்வாறு நடத்தப்படும் என்ற முக்கியக் கேள்வியைக் கேட்கவும் அவை மறந்து போயின.
அக்டோபர் 11ஆம் தேதியன்று இலங்கைக்கு சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு தமிழகம் திரும்பிய ஐந்தாவது நாளில் முகாம்களில் அடைக்கப்பட்ட பாதிபேர் அவரவர் இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்பதை தமிழக ஆளும் கட்சியின் கூட்டணியானது தனது வெற்றியாக சித்தரித்தது. இருப்பினும், விடுவிக்கப்பட்ட மக்கள் அவர்தம் இடங்களுக்குச் செல்லும்போது எப்படிப்பட்ட அவலத்தை சந்தித்தனர் என்பது குறித்து பேச மறந்து போனது.
சிங்கள ராணுவத்தால் கைகாட்டப்பட்ட இடத்தில் மட்டுமே - தத்தம் குடும்பத்து இளைஞர்களையும், அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்த - தமிழ்த் தாய்மார்களும், வயோதிகர்களும், சிறார்களும் குடியேறவேண்டிய உச்சபட்ச அவல நிலை... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை விடுதலை என்று கூறும் தமிழக சட்டமன்ற அரசியல்வாதிகளின் சிந்தனையை என்னென்று கூறுவது? [முகாம்களில் இருந்து “விடுதலை” செய்யப்பட்ட அவர்களின் தற்போதைய கொடூரமான சூழ்நிலையை ஐ.நா.சபையின் மனித உரிமை செயலகத்தின் செய்திப் பிரிவு வெளியிட்ட செய்தி ஒன்று மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது
http://transcurrents.com/tc/2009/12/report_from_jaffna_long_road_t.html#more
----------------------------------------------------------------
ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம்
உலக சமூகத்தின் போர் நியதிகளை சிங்கள அரசு மீறத் துணிந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா.சபையும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையையே ஈழத் தமிழ் மக்களின் மீது அது இழைத்த போர்க்குற்றமாக அறிவித்து வருகின்றன.
ஈழத் தமிழ் மக்களின் வாழ்விடங்களை ராணுவமயமாக்கி, அவர்களது பல்லாயிரமாண்டுப் பாரம்பரிய நிலத்தையும், பிற வாழ்வாதாரங்களையும் அபகரித்து, அவர்களின் இளைஞர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்றொழிப்பதையும் ஐ.நா.சபையும், மனித உரிமை இயக்கங்களும் இன்று கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளன.
ஆங்கிலேயர்கள் இலஙகையை விட்டு வெளியேறிய காலம் தொட்டே சமத்துவம் என்பதை இலங்கை அரசு கடைப்பிடிக்கத் தவறியது யார் குற்றம்? சமத்துவம் கேட்டுப் போராடிய மக்களைக் காலம் காலமாக அடித்துத் துன்புறுத்த மட்டுமே பழகிப் போன ஒரு கூட்டத்துடன் எவ்வாறு வாழ முடியும்? சமத்துவம் கேட்டது தமிழர்களின் தவறா?
இல்லை என்கின்றன மேற்குலக நாடுகளின் அரசுகள். ஆனால் அவற்றால் சிங்கள அரசுடன் இணைந்து செயல்படும் இந்திய அரசினை மீறி செயல்பட இயலவில்லை என்பதுதான் உண்மை நிலை.
--------------------------------------------------------------
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசைத் ‘தமிழினப் படுகொலை அரசாக’ அறிவிப்பதற்குத் தயங்க வேண்டிய அவசியம் இல்லை . உலகின் பல நாடுகளின் மாநில அரசுகள் இதுபோன்ற தீர்மானங்களை பல்வேறு இனப்படுகொலைகளையொட்டி எடுத்துள்ளன. வேற்று நாடுகளின் அரசோ அல்லது இந்தியாவில் உள்ள வேறொரு மாநில அரசோ இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முன்பு தமிழக சட்ட மன்றம் இந்தத் தீர்மானத்தை எடுப்பது நல்லது.
ஒரு தேசிய, மொழி, இன, மதம் அல்லது குழுவினரை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ அழிக்கும் உறுதியுடன் மேற்கொள்ளப்படும் கீழ்கண்ட நடவடிக்கைகளை இன அழித்தல் என்று ஐ.நா.வின் இன அழிப்பு குற்றம் மற்றும் தண்டனைக்கான பன்னாட்டுப் பிரகடணம் கூறுகிறது:
அக்குழுவினரின் உறுப்பினர்களைக் கொல்வதுந
2. அக்குழுவினரின் உறுப்பினர்களுகு உடல் அல்லது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதுந
3. அவர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உடல் ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் வகையில் அவர்களின் வாழ்வை சிதைப்பது
4. அந்த இனக் குழுவில் பிறப்பைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது
5. அந்த இனக் குழுவினரிடமிருந்து அவர்களின் பிள்ளைகளைப் பிரிப்பது
என்று ஐ.நா.வின் இன அழித்தல் பிரகடனம் கூறும் மேற்கண்ட அனைத்தையும் இன்றுவரை சிங்கள அரசு செய்து வருகிறது.
இலங்கையில் நடந்து வருவது இனப் படுகொலையே என்பதை அறிவிக்கும் முயற்சியில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், பத்திரிகைகளும், அரசுகளும், நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இந்த முயற்சிகள் யாவும் கைகூடுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில், பல பத்தாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகளைக் கூட இன்றளவும் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் மெதுவாகவே ஏற்றுக்கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை நிலை.
இது இனப்படுகொலைதான் என்பதை எந்த ஒரு நிறுவனமாவதோ அல்லது அரசோ முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பத் தவிர, இங்கிலாந்து நாட்டின் டைம்ஸ் ஆன்லைன் பத்திரிகை இந்த அறிவிப்பை மே 29ஆம் தேதியன்று முன்வைத்துள்ளது. அதன் பின்னரே இந்த அறிவிப்பைப் பரிசீலிக்கும் செயல்பாடுகளைப் பல்வேறு நாட்டரசுகள் தொடங்கியுள்ளன.
1915 – 1916ஆம் ஆண்டுகளில் ஆர்மேனியர்கள் ஓட்டோமன் பேரரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை சுமார் 19 நாட்டரசுகள் இனப்படுகொலைதான் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 42 மாநிலங்கள் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கனடா நாட்டின் அரசானது இதற்கான தீர்மானத்தை நிறவேற்றவில்லை என்றாலும் கூட, அந்த நாட்டின் ஒண்டாரியோ மற்றும் க்யுபெக் மாநில அரசுகள் இந்தத் தீர்மானத்தை 2002ஆம் ஆண்டில் இயற்றின. இந்தத் தீர்மானத்தைப் பின்பற்றி 2004ஆம் ஆண்டில் கனடா அரசே இதற்கான தீர்மானத்தை இயற்றியது. இது போன்ற நடவடிக்கையையே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் 2007ஆம் ஆண்டிலும், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் 2009 மார்ச்சிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளையே யூதர்களின் இனப்படுகொலை தொடர்பிலும் நாம் காண்கிறோம். ஜெர்மனி நாட்டின் நாஜி அரசால் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கருத்தை பல்வேறு நாட்டரசுகள் சட்டமாக இயற்றியுள்ளன. ஆஸ்திரியா, போஸ்னியா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் “யூதர்கள் நாஜிக்களால் இனப் படுகொலை செய்யப்படவில்லை” என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும்.
தமிழக சட்டமன்றம் இலங்கை அரசை இனப்படுகொலைக்கான அரசாக அறிவித்தால் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை மேலதிகமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி விட்டால் என்ன செய்வது? எனவேதான் அந்த அரசோடு நீக்குப் போக்காக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இது ஒரு பத்தாம்பசலிக் கருத்தேயொழிய வேறில்லை.
சிங்கள அரசின் செயல்பாடுகளின் மீது சர்வதேச அரசுகள் மற்றும் நிறுவனங்களின் கண்காணிப்புப் பார்வை குவியத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் நடவடிக்கையால் ஈழத் தமிழர்கள் மேலதிகமான சித்திரவதைக்கு உள்ளாக வேண்டிவரும் என்பது நகைப்புக்கு உரிய கருத்தாகவே இருக்கும்.
மாறாக, தமிழக சட்டமன்றத்தால் இயற்றப்படும் அப்படிப்பட்டதொரு தீர்மானம் சிங்கள இன வெறி அரசுக்கு எதிரான நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் நடத்தப்படும் ஒரு வெற்றிகரமான பர்ரப்புரையாகவே இருக்கும். ஈழத் தமிழர்களைக் காக்கும் கவசமாக அது அமையும்.
மத்திய அரசின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்ல.
இந்தியை எதிர்க்கத் துணிந்த மாநிலமே தமிழகம்
இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது 1968 ஜனவரி 23ஆம் நாளன்று - நடந்த நான்காவது தமிழக சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை இன்றளவும் தமிழ் இனம் மறக்க முடியுமா? இந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்ற தீரம் மிக்க தீர்மானத்தை இயற்றிய நாளல்லவா அது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ராஜாஜியின் 1937 ஆகஸ்டு 11ஆம் தேதி அரசாணைக்கு 30 ஆண்டு காலப் போருக்குப் பின் திட்டவட்டமாக முடிவு கட்டிய நாளல்லவா அது? ஸ்டாலின் ஜெகதீசன், பொன்னுசாமி, குமாரசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், நடராஜன், தாளமுத்து போன்ற மொழிப்போர் வீரர்களால் ஊட்டப்பட்ட நெஞ்சுரமானது “இந்தியை அறியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக” என்ற துலேகரின் வார்த்தைகளைக் கொன்றொழித்த நாளல்லவா அது? சியாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், குல்சாரி லால் நந்தா ஆகியோரையெல்லாம் தமிழக சட்ட மன்றம் வெற்றிகண்ட நாளல்லவா அது? 30 ஆண்டுகளாகத் தமிழ் இனம் பட்ட ஏளனத்தை இல்லாதாக்கிய நாளல்லவா அது?
1968 ஜனவரி சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு இணையான கூட்டத்தொடர் இன்னும் சில தினங்களில் மலரவுள்ளது. 2010 ஜனவரி 6ஆம் நாள் மலரவுள்ள அந்தக் கூட்டத் தொடரில் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள இன வாதிகளாலும், அவர்தம் அரசாலும், அவர்களுக்குக்குத் துணை நின்ற இந்திய அரசாலும் ஏளனப்படுத்தப்பட்டும், கொடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த ஈழ மக்களின் விடியலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
முத்துக்குமார், ஜெனீவா முருகதாசன், சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், மலேசியா ராஜா, பள்ளபட்டி ரவி, கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், ஜெயங்கொண்டம் ராஜசேகர், சென்னை சதாசிவம் ஸ்ரீதர், புதுக்கோட்டை பாலசுந்தரம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், கடலூர் நாகலிங்கம் ஆனந்த் ஆகியோரின் ஈகைக்கு நாம் செய்யக்கூடிய ஒரே கைமாறு இதுதான்.
அந்த வீரர்களின் நினைவினை தமிழக சட்டமன்றமானது தன் மனதில் ஏந்தி, இலங்கை அரசு ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிவரும் அரசு என்ற தீர்மானத்தினை இந்த உலகமயமாதல் யுகத்தில் இயற்றிட வேண்டும். இந்த செயல்பாடே ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழ் இனம் முழுமைக்குமேயான விடியலாக அமையும். .
0 Kommentare:
Kommentar veröffentlichen