அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, திபெத்திய மதத்தலைவர் தலாய்லாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை செய்த விடயம், சீனாவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
அண்மையில் வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தலாய்லாமா, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து திபெத் விடுதலை உட்பட பல்வேறு விஷயங்களை பற்றி கலந்துரையாடினார்.
இதன்போது சீனாவுக்கும், திபெத்துக்கும் உள்ள பிரச்சினையை தீர்க்க, அகிம்சை முறையில் போராடி வருவது பாராட்டத்தக்கது எனவும் ஒபாமா தலாய்லாமாவுக்கு புகழாரம் சூடினார்.
'சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமது பாரம்பரியத்தை பாதுகாக்க, திபெத்துக்கு சுயாட்சி வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும். வல்லரசு என்ற இலக்கை அடைவதற்கு முனைந்து வரும் சீனா, நீதி நெறிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அடக்குமுறை குணத்தை கைவிட்டு நடக்க வேண்டும்' என வாஷிங்டனில் வைத்தே பேட்டி அளித்தார் தலாய்லாமா.
இவற்றையெல்லாம் அவதானித்து கொதிப்படைந்த சீனா, தலாய்லாமாவை சந்தித்து பேசியதன் மூலம் இரு தரப்பு உறவை அமெரிக்கா உதாசீனப்படுத்தியுள்ளதாக கடும் கண்டனம் விடுத்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மா ஷாவோஷூ வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் திபெத். இது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் உணர்வோடு தொடர்புடைய விவகாரம். தலாய்லாமாவை சந்தித்து பேசியதன் மூலம், சீனாவின் உள்விவகாரத்தில் ஈடுபட்டதுடன், ஒட்டுமொத்த சீன மக்களின் உணர்வுகளியும் புண்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
என அவ் அறிக்கை தெரிவிக்கிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen