விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் நீதிமன்றங்களை அமைக்க இலங்கை அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்தப் பகுதிகளை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள்தான் வைத்திருந்தனர். அவர்களே சட்டத்துறையை நிறுவி நீதிமன்றங்களையும் அமைத்து நடத்தி வந்தனர். இந்த நீதிமன்றங்களை கங்காரு நீதி்மன்றங்கள் என்று இலங்கை அரசு கூறி வந்தது. அதாவது கட்டப்பஞ்சாயத்து என்ற பொருளில் கூறி வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி கிளிநொச்சி இலங்கை அரசின் வசம் வந்தது. தொடர்ந்து 25ம் தேதி முல்லைத்தீவும் புலிகளிடமிருந்து பறிபோனது.
கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகராக திகழ்ந்தது. முல்லைத்தீவு ராணுவத் தலைமையகமாக செயல்பட்டு வந்தது.
1987-ம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் தங்களது காவல்துறை மற்றும் நீதிபதி முறைகளைக் கொண்டு வந்தனர்.
விடுதலைப் புலிகளிடம் பிடிபடும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தண்டனை அளித்தது இந்த நீதிமன்றங்கள்தான்.
இந்த நிலையில் தற்போது இந்த இரு பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்விரு பகுதிகளிலும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படுவது மிகச் சிறந்த மாற்றமாகும் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.விக்னராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாகாணத்துக்கு புதிய நீதிபதியாக எஸ். சிவகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர சாவகச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் நீதிமன்ற வளாகம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவைப்படும் நிதியை ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் அமெரிக்காவின் எய்ட் அமைப்பு அளிக்கிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen