ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "நாட்டை கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. இவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவரை விடுதலை செய்துகொள்ள சட்டத்துடன் போராடும் அதேசமயம் மறுபுறம் கோயில் குருமாரை நாடி பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வேறு வழிகள் கிடையாது. ஏனென்றால் இன்று இலங்கையில் மிக மோசமாக குடும்ப ஆட்சி மேலோங்கியுள்ளது என்றார்.
இங்கு உரையாற்றிய ஜே.வி.பி.யின் முக் யஸ்தரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஹந்துநெத்தி கூறுகையில், ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தக் கூடாது என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி கட்டுப்போட்டுள்ளது. இந்த நிலை hனது தமது உரிமைகளை வென்றெடுப்ப தற்கான ஜனநாயக வழிகளை மூடியுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஒரு குற்றமும் செய்யாத ஜெனரல் சரத் பொன்சேகாவை பலவந்தமாக தூக்கிச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக கூட ஜனநாயக வழிமுறைகளில் போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் கூறுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் வன்முறைச் சூழலில் பாதுகாப்புகள் பறிக்கப்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.
ஆனால், அரசாங்க வேட்பாளர்களுக்கு சகல பாதுகாப்புகளும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான நிலையாகும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஒருபோதும் ஜனநாயகமான முறையில் நடைபெறாது. எதிர்க் கட்சிகள் மிக மோசமான வன்முறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen