பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் எவையும் இன்றி தமிழர்கள் தடுத்து வைக்கப்படுவதே சிறைகளில் ஆட்கள் நிரம்பி வழிவதற்கான காரணம் என்றும் ஆணைக்குழு சுட்டிக் காட்டி உள்ளது.
1876இல் கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலை இலங்கையில் உள்ளவற்றில் இரண்டாவது பெரிய சிறைச்சாலை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலரும் இந்தச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கொழும்பில் உள்ள வெலிக்கட சிறையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்தும் கைதிகள் போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
கண்டி நீதிவான் நீதிமன்றமும் சிறிய குற்றங்களுக்கான சந்தேகநபர்களையும் விளக்க மறியலில் வைப்பதற்கு அதிகளவில் உத்தரவு இடுவதால் சிறையில் இடநெருக்கடி மிக அதிகமாகி இருக்கிறது.
இந்த நிலைமையால் சிறைக் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள தேவையற்ற துன்பங்களை நீக்க நீதி அமைச்சம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி உள்ளது.
போகம்பர சிறை இடநெருக்கடியால் நிரம்பி வழிவதால் அங்கு இனி எவரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்று பிரதான சிறைக் காவலர் தெரிவித்துள்ளார்.
சிறையில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியும்கூட ஆட்களால் நிரம்பி வழிகின்றன. அங்கு ஒரு கூண்டில் 5 முதல் 10 வரையான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைக் காவலர்கள் கூறினர்.
1986ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின்படி ஒரு லட்சம் கைதிகளுக்கு 384 தைதிகள் தண்டனை எதுவும் விதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
தண்டனை விதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது நான்கு மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்து விட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
போகம்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 25 பேர் கடந்த டிசம்பர் மாதம் சிறைச்சாலைக் கூரையில் ஏறி அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.
தம்மை பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
இதன் பின்னர் கடந்த 11ஆம் நாள் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை நீதிமன்றத்தின் முன்நிறுத்துமாறு அல்லது தமக்குப் பிணை வழங்குமாறு கோரியே அவர்கள் தமது போராட்டத்தை மீண்டும் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலைமைகள் குறித்து நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புத் துறை அமைச்சர் மிலிந்த மொறகொடவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு.
போகம்பர சிறை நிலைமை பற்றி மட்டுமன்றி, நாட்டில் உள்ள ஏனைய சிறைகளிலும் கைதிகள் சட்டரீதியாக அணுகப்படுவதையும் மனிதார்ந்த தன்மையுடன் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி பலர் தடுத்து வைக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது எனவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
--
0 Kommentare:
Kommentar veröffentlichen