Dienstag, 19. Januar 2010

தமிழர்களே உங்களுக்கு புத்தி இல்லையா?


தமிழ்நாடும் தமிழ் மக்களும் மனிதத் தன்மையாகிய சுயமரியாதையை இழந்து


மிருகங்களிலும் பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழவும் நிலைமை

ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும் அம்மத

ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாச

புரட்டுகளே முக்கிய காரணம் என்று வெகுநாளாகச் சொல்லி வருகிறோம். அநேக

விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங்களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய்

விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து

இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல் மதம் போச்சு, நாதிகமாச்சு,

தெய்வம் போச்சு என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது

கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்ய வேண்டும் இனி எப்படி நடந்து கொள்ள

வேண்டும்? என்பதைப்பற்றி ஒருசிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன் செய்ய

முயற்சிப்பவர்களையும் காலைவாரி விட சூழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவும், எதிர்

பிரச்சாரங்கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகின்றன.



அன்றியும் முன்னையை விட பார்ப்பனப் பிரச்சாரமும் பலமாய் நடந்து

வருகின்றது. என்னே, தமிழர்களின் மானங்கெட்ட தன்மை!



தமிழ் மக்களில் பலர் படித்தவர்கள் என்றும், பண்டிதர்களென்றும்,

வித்துவான்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும்,

சீர்திருத்தக்காரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு வெளியில் புறப்பட்டு

புத்தகம் எழுதுவது மூலமும், புராண பிரசங்க மூலமும், ஆராய்ச்சி மூலமும்,

சீர்திருத்தப் பிரச்சாரம் மூலமும், பத்திரிகையின் மூலமும் தமிழ் பாஷையைப்

பரப்புவ தென்பதன் மூலமும் மற்றும் பலவழிகளில் பார்ப்பன

மதப்பிரச்சாரங்களையே மேலும் மேலும் செய்கின்றார்களே யொழிய வேறு ஒரு

காரியமும் செய்ய அறிவும் ஆற்றலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த

உபத்திரவம் போதாமல் இப்பொழுது சினிமாக்களும் நாடகக்காரர்களும்

பாராட்டுக்காரர்களும் உபந்நியாசகாரர்களும் இப்பார்ப்பனப் பிரச்சாரத்தையே

கைப்பற்றி தினமும் கோடிக்கணக்கான மக்களுக்கு புராணப் பிரச்சாரம் செய்து

வருகின்றார்கள்.



அன்றியும் சமீப காலமாக நமது நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அறிந்தோ

அறியாமலோ இதே வேலையையே செய்து வருகின்றன எந்தவாரப் பத்திரிகையின்

முகப்பைப் பார்த்தாலும் ஆரியப் புராணப் புளுகுகளைப்பற்றி வியாக்கியானம்

பண்ணுவதும், அதற்கு விசேஷ அர்த்தமும், தத்துவார்த்தமும் சொல்லுவதும்,

எழுதி வைத்தவர்களைப் புகழ்வதுமாகவே இருக்கின்றன. எந்த தினசரிப்

பத்திரிகையைப் பார்த்தாலும் பார்ப்பன மதக் கொள்கைகளைப் பிரச்சாரம்

செய்யத்தக்க வண்ணம் ஆரியக் கதைகளையே விளக்கி வருகின்றது.



ஆனால் ஒவ்வொரு பத்திரிகையும் ஏன் தான் இந்த காரியம் செய்கின்றது என்பதைக்

கவனிக்கும்போது தான் நமது மனம் பதறுகின்றது.



அன்றியும் இந்தக் கொடுமைக்கு இன்னதுதான் பரிகாரம் என்பது நமக்கு

விளங்கவில்லை. தேவஸ்தான மசோதா வந்தக் காலத்தில் கூட எல்லா பார்ப்பனரல்லாத

பத்திரிகைகளும், பார்ப்பனர்களையும் பார்ப்பன பத்திரிகைகளையும் பின்பற்றி

அம்மசோதாவினால் ஒரு காதொடிந்த பலனும் ஏற்படுவதற்கில்லாமல் செய்துவிட்டன.

திராவிடன் ஒன்று மாத்திரம் தைரியமாய் உண்மையாய் பிரச்சாரம் செய்துவந்தது.

ஆனாலும் ஒரு பயனும் உண்டாகவில்லை. தவிர தற்சமயம் முக்கிய பிரச்சினையாய்

இருக்கும் சுவாமிக்காக தமிழ் பெண்களை பொட்டுக்கட்டி விபச்சாரத்திற்கு

அனுகூலமாக்கினதை ஒழிக்கச் செய்யும் பிரயத்தனத்தையும், பக்குவமறியாக்

குழந்தைகளைப் பெண்ஜாதி புருஷர்களாக ஆக்கி குரங்கு குட்டிகள் போல

பிள்ளைகள் பெற்று மிருகப் பிராயத்திற்கு போய்க் கொண்டிருக்கும்

நிலையைத்தவிர்க்கச் செய்யும் பிரயத்தனங்களையும் அடக்க பார்ப்பனர்கள்

செய்யும் இடையூறுகள் ஒன்றல்ல, பல. கொஞ்ச காலமாக சுதேச மித்திரன் முதலிய

தினசரி பத்திரிக்கையில் இதே விஷயங்கள் வெளியாகின்றன.

சங்கராச்சாரியர்களும், பண்டிதர்களும், சாஸ்திரிகளும், வைதீகர்களும் தினம்

ஒவ்வொரு இடத்தில் மீட்டிங்குகள் நடந்ததாகப் பேர் செய்து இவ்விரு

காரியங்களையும் மறுத்து கண்டித்து தீர்மானங்கள் செய்ததாக எழுதி வருவதும்,

பொதுமக்கள் ஏமாறும்படி கடவுள் சொன்னதாகவும் தேவர்கள் சொன்னதாகவும்

ரிஷிகள் சொன்னதாகவும் அசரீரி சொன்னதாகவும் அநேக விஷயங்களை எடுத்து

எழுதுவதுமாய் இருக்கின்றார்களே! இதை யாராவது கவனிக்கின்றார்களா? என்று

கேட்கின்றோம்.



இது தவிர பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாடப்புதகங்கள் என்று அநேக பார்ப்பனர்களும்

சுயமரியாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதார்களும், ராமாயணம்,

பாரதம், பாகவதம், கந்தப்புராணம் பெரிய புராணம், அருணாசலப்புராணம்,

திருவிளையாடல் புராணம், முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறுசிறு

கதைப்புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்கு பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும்

சகிக்கக் கூடியதாயில்லை.



எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் ஆரியர் மேலோர் என்பதும், பிராமணன்,

க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் தென்னாட்டில் ஒரு

முரட்டு ஜாதியர் காட்டுமிராண்டிகளாய் இருந்தார்கள், அவர்களைத்தான்

வானரங்கள் என்று சொல்லப்படுவது என்றெழுதுவதும், ஆரியர் தென்னாட்டிற்கு

வந்த பிறகே தமிழ் மக்கள் மனிதத் தன்மையை அடைந்தார்கள் என்று எழுதியதுமான

புத்தகங்களைப் படிக்கச் செய்வதே இப்போது தேசீயப் படிப்பாக மாறி வருவதும்

நினைக்க நினைக்க வயிறெல்லாம் பற்றி எரிகின்றது. இன்னும் பல வழிகளில்

தமிழர்களை இழிவுபடுத்தியிருக்கின்றார்கள்.



அவைகளையெல்லாம் இதில் எழுத மனம் வெட்கப்படுகிறது. இதற்கு என்ன வழி என்று

யார் சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்களுடைய முகக்கோணலை பொறுத்துக்கொள்ள

தமிழ் மக்களில் ஆட்கள் இல்லையென்றால் அந்த சமூகம் வாழுவதால் பயன் என்ன?

என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லார்களில் வயிற்றுக்கில்லாத கூலிகளின்

செய்கைகளைப்பற்றி நாம் பிரமாதமாய் இதில் எழுத வரவில்லை.



வயிற்றுக்கு தாராளமாய் கிடைக்கத்தக்க தொழிலையும் தனி சம்பாத்தியத்தையும்

சொத்துகளையும் நிலையையும் வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் பார்ப்பனப்

பிரச்சாரங்கள் செய்யும் முட்டாள் தனத்திற்கு நாம் என்ன சமாதானம் செய்து

கொள்ளக்கூடும் பார்ப்பனரல்லா அரசர்களில் பெரும்பகுதியார்

பார்ப்பனர்களுக்குப் பிள்ளையாய் பிறக்கக் கருதுகிறார்களேயொழிய பார்ப்பன

மதக் கொடுமையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இழிவைப்பற்றி கருதுகிறார்களா?

என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதும் இல்லை.



பார்ப்பனரல்லாத ஜமீன்தார்கள் பிரபுக்கள் லேவா தேவிக்காரர்கள்,

வியாபாரிகள் என்போர்களோ ஏழைகளை வதைத்துப் பட்டினி போட்டு ஏமாற்றிக்

கொள்ளையடித்து பல லக்ஷக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்துக்

குட்டிச்சுவர்களாக விளங்கும் கோவில்களைக் கட்டுவதும் அங்கு பார்ப்பனத்

திருவிழா செய்வதும் பார்ப்பன மதப்பிரச்சார பள்ளிக் கூடங்கள் வேத

பாடசாலைகள் கட்டுவதும் பார்ப்பனர்கள் சாப்பிட சத்திரங்கள் கட்டுவதான

கொடுமைகளைச் செய்வதற்காகவே தங்கள் பணங்களை உபயோகிக்கின்றார்கள்.

பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களோ தங்கள் செல்வாக்கு முழுவதையும் பார்ப்பன

நன்மைக்கே உபயோகிக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுடைய

உத்தியோகத்திற்கும் வாழ்வுக்கும் ஆபத்தாய் முடிந்துவிடுகின்றது.

பார்ப்பனரல்லாத சன்னியாசிகளின் சங்கதி சொல்லவே வேண்டியதில்லை எனலாம்.

சுருங்கக் கூறினால் இயற்கைக்கு விரோதமான இன்பத்தை அனுபவிப்பதே அவர்களது

ஸ்தபசாகிவிட்டது. இனி மீதி இருக்கும் பாமர மக்களோ மேல்கண்ட பெரிய

ஆசாமிகள் என்பவர்கள் நடப்பதைப் பார்த்தும் அவர்களைப் பின்பற்றி மேலும்

மேலும் தங்களை உயர்ந்த ஜாதியான் என்றும் பக்திமான் என்றும் சனாதன இந்து

என்றும் சொல்லிக் கொள்வதற்கே ஆசைப்பட்டு விபூதியையும் நாமத்தையும் பூசிக்

கொள்ளுவதும் யாத்திரையும் சடங்கும் செய்வது-மான வாழ்க்கையிலேயே தமது

சம்பாதனையை கூடப் போடுவதுமாய் இருக்கின்றார்களே யொழிய அய்யோ பாவம்!

மனிதத் தன்மை இன்னது என்பதைப்பற்றி ஒரு சிறு கவலையும் இல்லாதவர்களாய்

வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இந்த நிலையில் தமிழ் மக்களின் சுயமரியாதை

எங்கே இருக்கின்றது? எப்பொழுதுவரும் என்பதைப்பற்றி சற்று யோசித்துப்

பாருங்கள் நேயர்களே!



உங்கள் மனம் பதற வில்லையா? உங்கள் அறிவு வெட்கப்படவில்லையா? நீங்களும்

மக்கள் என்று எண்ணிக் கொள்ள உங்கள் எண்ணம் இடம் கொடுக்-கின்றதா?

உலகத்தில் மானமற்ற மக்கள், ஈனம் உற்ற மக்கள் சுயமரியாதை இன்னதென்று உணராத

மக்கள் என்பவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்கள் யார்? என்பதை சற்று

நிதானமாய் தேடிப்பார்த்தால் உங்களைத் தவிர வேறு யாரையாவது கண்டு

பிடிப்பார்களா? போதும்! போதும்! இனியாவது உங்கள் முயற்சியை சற்று

சுயமரியாதைப் பக்கம் திரும்புங்கள்! தேசீய நரகத்தில் அழுந்தாதீர்கள்!

கடைந்தெடுத்த அயோக்கியர்களுக்கும் துரோகிகளுக்கும்

பிழைப்புக்காரர்களுக்கும் அறிவிலிகளுக்கும். அதை விட்டுவிடுங்கள்.

தமிழ்த்தாயின் மானத்தைக் காப்பாற்ற முன்வாருங்கள்.



சமீப காலத்தில் நடைபெற வேண்டிய சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு வரிந்து

கட்டி முன் நில்லுங்கள், உங்கள் விண்ணப்பங்களில் உங்கள் ரத்தத்தைக்

கொண்டு கையெழுத்துச் செய்து அனுப்புங்கள். உங்கள் சொத்துக்கள் என்பதில்

ஒரு பகுதியை இப்போதே ஒதுக்கி வைத்து விடுங்கள். புரட்டுப்பிரச்சாரங்களை

வெறுத்துத் தள்ளிப் பாமர மக்களுக்கு உண்மை இன்னது, போலி இன்னது, சத்தியம்

இன்னது பொய் இன்னது என்று உணரும்படி செய்யுங்கள்! சுயமரியாதைக்கு

உழைக்கும் உண்மைப் பத்திரிகைகளை எல்லா தமிழரும் படிக்கும்படி

செய்யுங்கள்! இனி உறங்காதீர்கள்! பார்ப்பனர்களின் மதத்தின் மூலமாக

புராணங்கள் மூலமாக அதில் உழலும் பண்டிதர்கள் மூலமாக அரசியல்

பார்ப்பனரல்லாதார்கள் மூலமாக தமிழ் மக்கள் தலை எடுக்கக் கூடும் என்றோ

அல்லது சுயமரியாதை அடையக்கூடும் என்றோ நினைப்பதை அடியோடு மறந்து

விடுங்கள்! மறந்து விடுங்கள்!
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen