Mittwoch, 9. Dezember 2009

மனித இனத்தின் எதிர்காலம் கோப்பன்ஹேகன் மாநாட்டிலேயே தங்கியுள்ளது - பான் கீ மூன்


காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் கடந்த 7ம் திகதி முதல் நடைபெற்று வரும் மாநாடு உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள வேளை கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பாகத் தொழில்மய நாடுகள் எடுக்கவுள்ள தீர்மானங்கள் மீதே மக்கள் அனைவரினதும் கண் திரும்பியுள்ளது.




இந்நிலையில் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையினால் கோப்பன்ஹேகனில் நடாத்தப்படும் காலநிலை மாநாட்டின் முடிவுகளிலேயே மனித இனத்தின் எதிர்காலம் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.



பான் கீ மூன், உலகின் முக்கிய அரச தலைவர்களான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவின் மக்கள் பிரதிநிதி வென் ஜியாபாவோ ஆகியோருடன் அடுத்த வாரம் கோப்பன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.



காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் ஆரம்பம் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது என்று கூறிய பான் கீ மூன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பாக உலக நாடுகளிடையே உறுதியான அரசியல் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதுடன் 2010ம் ஆண்டு இது தொடர்பான சட்டமும் வேகமாக இயற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.



வெப்பநிலை சம்பந்தமான பதிவுகளை 1850ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் ஐ.நாவின் WMO அமைப்பு 2009ம் ஆண்டு வெப்பம் கூடிய 10 வருடங்களில் ஒன்று எனவும் 2000 - 2009 வரையிலான காலப்பகுதியே உலகில் அதி கூடிய வெப்பம் நிலவிய காலம் என்றும் அறிவித்துள்ளது.



உலகில் வெப்பம் அதிகமாக நிலவும் பிரதேசங்களாக மத்திய ஆப்பிரிக்காவும் தென்னாசியாவும் காணப்படுகின்றன.



இந்நிலையில் உலக நாடுகள் 1990ம் ஆண்டில் காணப்பட்டதை விட 25-40 வீதம் கார்பன் வெளியேற்றத்தை 2020 இற்குள் குறைப்பதற்கும் 2050ம் ஆண்டு பூகோள ரீதியில் கார்பன் வெளியேற்றம் இதில் பாதியாகக் குறைப்பதற்குமான நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen