ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அரச சொத்துகளையும் ஆளணிகளையும் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து இவ்விடயம் குறித்து முறையிடப்போவதாகவும் அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
"தேர்தலில் எந்தவொரு பிரதிநிதி போட்டியிட்டாலும் அவரது சுதந்திரமான கருத்துகளை வெளியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். நமது நாட்டைப் பொருத்தவரையில் அரச ஊடகங்கள் உட்பட பெரும்பாலான அரச துறை ஊழியர்களும் சொத்துக்களும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.
மாத்தறைப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய வாகனங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. இதனை ஆதாரத்துடன் நாங்கள் இங்கு தருகிறோம். குறிப்பிட்ட திகதிதகளில் எத்தனை சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும், எந்த விதத்தில் அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பவற்றை விளக்கமாக எழுதி மாத்தறை பிரதேச சபைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அநேகமான பகுதிகளில் அரச சொத்துக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
தேர்தல் ஆணையாளருக்கு பாராளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய சூழலை பெற்றுத்தருமாறு நாம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Kommentare:
Kommentar veröffentlichen