Sonntag, 20. Dezember 2009

கடுமையான போட்டி எதிர்நோக்கப்படும் -இதயச்சந்திரன்


தேசப்பற்றாளர் என்று சிங்கள தேசத்தால் முன்னர் புகழாரம் சூட்டப்பட்ட சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகி போல் விமர் சிக்கப்படுகிறார்.




ஆங்கிலப் பத்திரிகையொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதி யுத்தத்தில் பா. நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட் டமைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவே காரணமென்று சரத் கூறியதாக வெளிவந்த செய்தியே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகி யது.



மனிதாபிமான யுத்தமென்று அரசாங்கம் கூறியதை, தலைகீழாக மாற்றக் கூடிய வகையில் அதிகார மையத்தை நோக்கிய போட்டி முன்னெடுக்கப்படுகிறது.



விவகாரம் பூதாகரமானவுடன் தான் அப்படிக் கூறவில்லையென்று சரத் மறுத்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு இந்தியாவையும் கடந்து மேற்குலகம் வரை பாய்ந்து சென்றுள் ளது.



சரத்பொன்சேகாவின் அதிரடியான கருத்துகளால் அதிகம் அதிர்ந்தது இந்தியா தானென பல அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க “இது ஒரு துரோகம்’ அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனக் கூறும் அதேவேளை, தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய மிகப் பெரிய காட்டிக் கொடுப்பொன்றை இராணுவம் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.



சிங்கள தேசத்தின் இரண்டு தேசிய வீரர்களும் யுத்த வெற்றியைப் பங்கு போடும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் யுத்தத்திற்கான முழுப் பொறுப்பினையும் தானே ஏற்றுக்கொள்வதாக அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டார்.



அரசியலில் புதிதாகக் களமிறங்கிய சரத் எதிர்கொண்ட முதல் போர்க்களம், சில சிக்கல்களை அவருக்கு உருவாக்கியுள்ளது.

அரச தரப்பும், இவர் கூறிய போர்க் குற்றச்சாட்டினைத் தமக்குச் சாதகமாக மாற்றிட, அதனை ஊதிப் பெருப்பிக்கும் காரியத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.



ஆனாலும் சரத் பொன்சேகாவின், அரசாங்கம் மீதான விமர்சனங்கள் குறைவடையவில்லை. பிரச்சினைக்குரிய இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்து பேசுவதை தவிர்த்தவாறு, பாதுகாப்புச் செயலாளர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கும் உத்தியினை சரத் தற்போது மேற்கொள்கிறார்.



15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர், தனக்கு பயிற்சி வழங்கியதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமென்றும், கணினி இயக்குநருக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே கிடைக்குமெனவும் தனது தாக்குதல்களை பல்குழல் எறிகணைகள் போல் தொடுக்க ஆரம்பித்துள்ளார்.



2010 ஜனவரி 26 ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பங்குகொள்ளும் பதிவு செய்யப்பட்ட 14,088,500 வாக்காளர்களை குறி வைத்தே இந்த எதிர்வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.



இதில் 13.88 சதவீத மக்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்பது புதிய விவகாரம். அவ்வாறு இருப்பது யாருக்கு சாதகமாக அமையுமென்பதை போட்டியாளர்கள் தீர்மானித்திருப்பார்கள்.



அதிலும் வட மாகாணத்தை சார்ந்த தமிழ் மக்களிடையே அடையாள அட்டை இல்லாதோர், 13.88 சத வீதத்தில் பெரும் பகுதியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இன்னமும் தமது சொந்த இடங்களில், மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், பல இலட்சம் தமிழ் பேசும் மக்கள் அல்லற்படுகின்றனர்.



இந்நிலையில் நடத்தப்படும் இத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் முதன்மை வேட்பாளர்கள் இருவரும் தமது வியூகங்களை வகுக்கின்றனர்.



சுயேட்சையாக களமிறங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்விரு வேட்பாளர்களையும் நிராகரிப்பதோடு, தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதாகக் கூறுகின்றார்.



இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் டெலோ அமைப்பிலும் ஒரு அங்கத்தவர், ஆனாலும் இவர் கூட்டமைப்பின் சார்பிலோ அல்லது தான் சார்ந்த டெலோ கட்சியின் சார்பாகவோ இத்தேர்தலில் பங்குபற்றவில்லை.



மாறாக, தமிழ் மக்களின் பெரும் அரசியல் சக்தியான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு அப்பால் சென்று, சுயமாக இயங்குவதென்று முடிவு செய்துள்ளார் போல் தெரிகிறது.



ஏற்கெனவே அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக கூட்டமைப்பில் சில கருத்துப் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.



அத்தோடு ஜனாதிபதித் தேர்தலும், மேலும் பல கருத்து மோதல்களை கூட்டமைப்பிற்குள் உருவாக்கி, அதன் அரசியல் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென்று கணிப்பிடலாம்.



அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் பெரும் சவாலான விடயமாக இருக்கப் போகிறது.



கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கூட்டு உருவாக்கப்பட்ட வேளையில் கட்சி எதனையும் சாராதவர்களாக இருந்தாலும் கூட்டில் இணைவதற்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து போட்டியிட்டார்கள்.



எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாக, தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாவிட்டால் சில பிரதிநிதித்துவச் சிக்கல்கள், தற்போதைய உறுப்பினர்களுக்கு ஏற்படும் வாய்ப்புமுண்டு.







சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் ஆழமான புரிதலை உள்வாங்கியிருக்கும் கூட்டமைப்பின் சில பிரதிநிதிகள், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, தனியாக அரசியல் தளமொன்றிற்குள் புகும் சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன.

ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுக்கான அரசியல் களமல்ல என்கிற வாதத்தையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.



ஆகவே யாரை ஆதரிக்க வேண்டுமென்பதற்கும் அப்பால், எவரை ஆட்சிப் பீடமேற விடாது தடுக்க வேண்டுமென்பதில் நுண்ணரசியல் சார்ந்த இராஜ தந்திரத்தைத் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதே மேற்கூறிய வாதத்தை முன்வைப்போரின் கருத்தாக அமைகிறது.



2009 மே 18க்கு முன்பாக, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வராத பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரினவாத ஒடுக்குமுறைகளின் வடிவங்கள், மிகவும் அழகான பரிமாணங்களைக் கொண்டவை.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் அதன் எதிர்வினையை காணக்கூடியதõகவிருந்தது. பல திசைகளிலிருந்து வந்த ஒடுக்குமுறைகள் மக்களின் உளவுரணில் மாறாத வடுக்களை உருவாக்கியிருந்தன.



பயங்கரவாதத்திற்கெதிரான போரென்றும், மனிதாபிமான யுத்தமென்றும் பிராந்திய வல்லரசுகளும் ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய மக்கள் மீதான அடக்குமுறைகள், தேசிய இன நல்லிணக்கத்தினை சாத்தியமற்ற விடயமாக்கி விட்டது. நிபந்தனையற்ற ஆதரவினை வருகிற தேர்தலில், அரசாங்கத்துக்கு வழங்கப் போவதாகக் கூறுவோரை, மக்கள் ஏற்றுக் கொள்வார்களென்று எதிர்பார்க்க முடியாது.



இந்நிலையில் “உலகின் சில நாடுகள் எதிர்த்தால் அதை அவர்களின் பிழையெனலாம். எல்லா நாடுகளும் எம்மை எதிர்த்தால் நாம் நமது நிலைப்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும். தீவிர சுய விமர்சனமும், மீள் பரிசீலனையும், செம்மைப்படுத்தலும் தற்போதைய தேவை’ எனக்கூறுவோர் இன்றைய உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் நிலைப்பாடு, குறிப்பாக தாயக மக்களின் அரசியல் முடிவுகள் எவ்வாறு அமைதல் வேண்டுமென எதிர்பார்ப்பது போல் தெரிகிறது.



கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து உலக ஒழுங்குச் சமன்பாட்டில் தலைகீழான மாற்றங்கள் பல உருவாகியுள்ளன.

ஓருலக அமெரிக்க நாயகனின் ஆசியப் பிராந்திய ஆளுமை பொருளாதாரச் சீரழிவினால் வலுவிழந்து போயுள்ளது.



ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையிலும் பாதுகாப்புச் சபையிலும் மேற்குலக சக்திகளினால் இலங்கை அரசிற்கு எதிராக, மென்போக்கான எதிர் நகர்வுகளைக் கூட மேற்கொள்ள முடியாதிருந்தது.



பொருளாதார அழுத்தங்களினால் தமது ஆளுமையை நிலைநிறுத்தும் முயற்சிகளும் நீர்த்துப் போயின.

இந் நிலையில் போரின் இறுதியில் அனைத்துலக தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்றியதாக ஆனந்தாக் கல்லூரியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியாவிற்கு தெரிவித்த நன்றியறிதலை, உன்னிப்பாக நோக்க வேண்டும்.



இந்தியா, சீனாவை, தனது வீழ்ந்து கிடக்கும் பொருளõதார நிமிர்விற்காக எதிர்பார்க்கும் அமெரிக்கா, அந்நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆதரவினை கருத்திற் கொள்ளாமல், அவற்றோடு தமிழர்களின் அரசியல் நலனுக்காக முரண்படுமென்று எதிர்பார்க்க முடியாது.



எல்லோரும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தார்கள் என்பதை விட அவ்வாறு ஆதரிப்பதால் தமக்கு அப்பிராந்தியத்தில் எத்தகைய சிக்கல் ஏற்படுமென்பது குறித்தே இவர்கள் கவலையடைந்தார்கள். இன்றைய உலக ஒழுங்கில் ஆசியாவைப் பொறுத்தவரை சீனா, இந்தியா என்கிற வல்லரசாளர்களின் இராஜதந்திர பொருளாதார ஆளுமைகளே எதையும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாகத் திகழ்கின்றன.



2002 ரணில் பிரபா ஒப்பந்தம் ஊடாக, இலங்கை இன முரண்பாட்டு அரசியலில் கால்பதித்த மேற்குலகம், சந்திரிகா பண்டாரநாயக்க அதிபராகவும் ரணில் பிரதமராகவும் இருந்த நிலையில் 2005 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்தது.



அன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் வல்லாதிக்கம், தற்போதைய நிலையோடு ஒப்பிடும் போது வலிமை மிக்கதாகவும் இலங்கை அரசியலில் ரணில் ஊடாக ஆழமாகக் காலூன்றி மேற்குலகின் விடுதலைப் புலிகளைத் தடை செய்து நெருக்கடிகளை உருவாக்கிய நிலையில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழர் தரப்பு நிராகரித்தது.



ஆனாலும் இன்றைய கள நிலைமையோ முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்தியா, சீனாவின் பூரண ஆதரவோடு, விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் நசுக்கப்பட்டு, குரலற்ற மனிதர்களாக தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.



இன்று பிராந்தியத்தின் பிரதான வல்லாதிக்க சக்திகளின் பின்னால், பலமான நிலையில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதனை 2005 இல் பெற்ற பட்டறிவினூடாக புரிந்து கொள்ளலாம்.



2008 இல் அமெரிக்காவின் உலக சாம்ராஜ்யத்தில் உடைவுகள் ஏற்படலாமென்பதை எந்த அரசறிவியலாளர்களோ அல்லது பொருளாதார நிபுணர்களோ கணிப்பிடத் தவறினர். இந்த எதிர்வு கூறலை தீர்மானிக்கும் சக்தி தமிழர் தரப்பிற்கு இருந்திருக்குமாயின் சென்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் முடிவு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

ஆனாலும் வரலாற்றுப் பட்டறிவினை ஆசானாக ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் பலம் பொருந்திய ஒடுக்கும் சக்தியின் மீள்வரவை முறியடிக்க, இராஜதந்திரத்தை பிரயோகிக்க வேண்டும்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen