Sonntag, 27. Dezember 2009

சிவாஜிலிங்கத்தை இந்தியா நாடுகடத்தியதன் பின்னணி என்ன?

  • இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலானது உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பி உள்ளது. இவற்றிற்கும் மேலாக இந்தியா பார்வையாளர் என்ற நிலையிலிருந்து, சரத் பொன்சேகாவின் களமிறங்கலுக்குப்பின் பங்காளியாக மாறியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.



    இந்தியா தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்தியே ஒவ்வொரு அடியையும் நகர்த்தும் என்பது அறிந்த விடயம். தன்னைச் சூழ அமைந்துள்ள சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்படும் அச்ச நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா தனக்கு எதிரான யுத்தங்களில் இலங்கை இந்தியாவுக்கு சார்பற்ற நிலையில் பெற்ற அனுபவத்தை எப்போதும் மீட்டிப்பார்க்கும் இந்தியா, ஒருபோதும் இலங்கையை பகைத்துக்கொள்ள விரும்பாது. மாறாக இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக தன் 'செல்லப்பிள்ளையாக' இலங்கையை விருப்பமின்றி வைத்துக்கொள்ளும். அதாவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பைவிட இந்தியா தனது இறைமையையும், பிராந்திய நலன்களையும் தான் அதிகம் நேசிக்கும்.

    இந்த நிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும் கூட இந்தியா பிராந்திய நலனை மையப்படுத்தியே காய்களை நகர்த்தியிருந்தது. அதுவானது இலங்கை அரசுக்கு 'சிம்ம சொர்ப்பனமாக' இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதில் அதிக உடன்பாடு இந்தியாவுக்கும் இருந்தது.



    இலங்கைக்கு கிடைத்த தலைமைகளுக்குள் ஒரு 'முரட்டுத்தனமான' ராஜபக்சவின் தலைமை இந்தியாவுக்கு மிகப்பொருத்தமாக அமைந்தது. குறிப்பாக எச்சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அளுத்தத்திற்கு கட்டுப்படாத ஒரு தலைமையே தேவையாக இருந்தது. இந்த இடத்தில் ரணில், சந்திரிகா போன்றவர்கள் தலைமையாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தால், இவர்களுக்கான சர்வதேச தொடர்புகளையும், பெருந்தன்மையான அவர்களின் குடும்ப செல்வாக்குப் பின்னணியையும் பாவித்து சர்வதேசம் அவர்களை மனிதநேய மூடிக்குள் மூடிவிடும்.



    இவ்விதமான எவ்வித பின்னணியுமற்ற ஒரு தலைமை எப்போ வருமென காத்திருந்த இந்தியாவிற்கு இன்று வாய்ப்பாக அமைந்துவிட்டது.

    மஹிந்த ராஜபக்ச என்ற போர்வையினுள் நின்று இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தமிட்டது. இந்த நிலையில் இந்தியாவின் அட்டவணைப்படி மஹிந்த ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். சரத் பொன்சேகா களமிறங்குவார் என்ற செய்தி மஹிந்தாவை விட இந்தியாவிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பலவிதமான உபாயங்களை இந்தியா பிரயோகித்தபோதிலும் சரத் பொன்சேகா களமிறங்குவதை தடுக்கமுடியவில்லை. சரத் பொன்சேகாவை அரவணைத்து களமிறங்கும் நிலையை தடுக்க மஹிந்த கொம்பனிக்கு ஆற்றலும் இருக்கவில்லை. கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா முறுகல் காலம் செல்லச் செல்ல அதிகரித்து, இறுதியாக சரத் பொன்சேகா களமிறங்குவதை உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில் சரத் பொன்சேகா வெற்றியடைந்துவிட்டால் முதலில் கிழியப்போவது இந்தியாவின் முகத்திரை தான். தன்னை ஒரு அஹிம்சை நாடாக உலக நாட்டிற்கு போட்ட வேஷம் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பிருக்கும்.



    'ஆட்டுக்கு தீர்பதுதான் குட்டிக்கும்' என்பதைப்போல மஹிந்தவும் சர்வதேச நீதிமன்றம் வரை இழுபடப்போகிறார் என்பது அடுத்த செய்தியாகும்.

    இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி மஹிந்தாவை ஜனாதிபதியாக்குவது என்பதில் தான் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இவற்றுக்கு குறுக்கே நிற்கும் எந்த சக்திகளையும் இந்தியா எதிரியாகவே நோக்குமென்பதில் சந்தேகமே இல்லை.

    இதுஒரு புறமிருக்க,

    இந்தியாவின் அட்டவணைப்படி இலங்கை அரசு மேற்கொண்டது புலிகளுக்கெதிரான யுத்தம் மட்டுமல்ல. ஜனாதிபதித் தேர்தல் அடங்கலாக மகிந்தவை வெல்ல வைப்பதும் தான். இதற்காக தீர்மானிக்கும் வாக்காளர்களாக தமிழர்கள் இருப்பதால் தமிழ் மக்களை கவருவதற்கான பல உபாயங்களை இந்தியா வகுத்து மகிந்தாவுக்கு போதித்திருந்தது. அதன் பிரகாரம் தற்பொழுது மகிந்தவால் வீசப்படும் தமிழ்மக்களுக்கான வாக்குறுதிகள் சரத் பொன்சேகாவால் கூறப்படும் வாக்குறுதிகளை விட மேலாக இருப்பது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்துமளவிற்கு உருப்பெற்று வருகின்றது (இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு இணைப்பு உட்பட). இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்தாவிற்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டுமென இந்தியா மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுடன் தமக்கான நெருங்கிய உறவை வைத்திருப்பதால் கையாளுவதில் இந்தியாவுக்கு இன்னும் இலகுவாக உள்ளது. இதுவே கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானம் தாமதமாகுவதற்கு காரணமாகலாம். இருப்பினும் இலங்கைத் தமிழ்மக்களின் நலன் கருதியே எந்தத்தீர்வும் எடுக்கப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. அதுவானது சரத் பொன்சேகாவிற்கு சார்பாக அமையலாம். இது இந்தியாவை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.



    இந்த 'இடியப்ப சிக்கலினுள்' சிவாஜிலிங்கம் களமிறங்குவது இந்தியாவுக்கு இன்னுமொரு தலையிடி. தமிழ்மக்களின் வாக்குகள் சிதறுண்டு போகும்பட்சத்தில் மஹிந்த - சரத் போட்டியாக அமையும். இறுதியில் ஜனாதிபதியாவதற்கு மூன்றாம் வேட்பாளரின் வாக்குகளைக் கோரும் பட்சத்தில் சிவாஜிலிங்கமோ, இடதுசாரி வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னவோ மூன்றாவது வேட்பாளராகலாம். இவர்கள் இருவரும் நிட்சயமாக மகிந்தா பக்கம் சாயமாட்டார்கள். இந்த நிலையில் மகிந்தா தெரிவு செய்யப்படுவது அரிதாகலாம். இது இயல்பாகவே இந்தியாவுக்கு சிவாஜிலிங்கத்தின் மேல் கோபம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நிலையில் ஈழத்தமிழர்கள் சார்பான மாநாட்டுக்கு சிவாஜிலிங்கம் தமிழ்நாடு செல்வது இந்தியாவின் கோபத்தை இரட்டிப்பாக்கி இருக்கலாம்.



    தசக்கிரீவன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen