கடவுள், மதமும், மக்களும்
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு
அறிவாளியாய் இருந்தாலும் அந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும்
என்பதைத் தவிர மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும்
ஏற்படப்போவதில்லை. ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள்,
மோட்சம், நரகம், வேதம், மதத்தர்மம், மதத்தலைவன், என்பனவெல்லாம் அந்த
அதாவது அவன் சார்ந்திருக்கிற மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய,
உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவை எல்லாம் செயற்கையே
ஒழிய இயற்கையுமல்ல.
ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுக்குக்
கடவுள் அது எப்படிப்பட்ட கடவுளானாலும், அது செயற்கைக் கடவுளே ஆகும்.
இதில் இயற்கை, செயற்கை என்பதற்கு என்ன விளக்கம் என்றால் இயற்கை என்பது
உணவு உட்கொள்வது, மலஜலங் கழிப்பது பார்ப்பது கேட்பது, மூச்சுவிட்டு
இழுப்பது, பேசுவது, வலி காண்பது, பசி தோன்றுவது, தூங்குவது,
விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம், சுகம், சூரியன், சந்திரன்,
வெளிச்சம், இருட்டு, பஞ்சப்பூதங்கள் முதலியவை இயற்கையாகும். இவை எல்லா
மக்களுக்கும் பொது என்பதோடு யாராலும் மறுக்க முடியாதவை. மற்றபடி
இத்தன்மைகளல்லாத கடவுள், மதம், மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை,
செல்வம், சிறுமை, பெருமை, பக்தி, பிராத்தனை, வேதம் முதலியவை அடியோடு
கற்பனையேயாகும்.
இந்த இயற்கை, செயற்கைகள் அறியப்படுவதற்கு ஆதாரம் முறையே பிரத்தியட்ச
அறிவும் - பிரத்தியட்ச அறிவுக்குப்புறம்பான நம்பிக்கையுமேயாகும்.
ஆகவே, உலகில் உள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் உணர்ச்சிக்காரனும்,
நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவேமாட்டான். உதாரணமாக "கிறிஸ்து"
என்றால் "பைபிள்" என்றால் கிறிஸ்துவை ஏற்று அவரில் நம்பிக்கை வைத்து
பைபிளை ஒப்புக் கொண்டவருக்குத் தான் "கிறிஸ்துவே" தவிர, "பைபிளே" தவிர
அவை, நம்பிக்கையில்லாதவருக்கு உண்மையாய் தத்துவமாய் இருக்க முடியாது.
அதுபோலவே, "முகமது நபி" என்றால், "குரான்" என்றால் முகமது நபியை ஏற்று,
அவரின் மீது நம்பிக்கை வைத்து குரானை ஒப்புக் கொண்டவருக்குத் தான் நபியே
தவிர, குரானே தவிர, நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி நபியாகவும்,
குரானாகவும், இருக்க முடியும்? அப்படியே தான் மற்ற மதங்களும், வேத
சாஸ்திரங்கள் முதலியவையுமாகும். ஆகவே, நம்பாதவனுக்கு, ஏற்காதவனுக்கு எது
எது இல்லையோ அவை எல்லாம் பெரிதும் செயற்கையே ஆகும். கடவுளும், கடவுள்
நம்பிக்கையும் அதில்பட்டதுதான்.
ஒரு மனிதனை மற்றொரு மனிதன் "நீ கிறிஸ்துவை நம்பித் தான் ஆக வேண்டும்?
பைபிளை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நரகத்தில் அழுந்துவாய்"
என்று சொல்பவனும் "நீ நபியை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் எரி
நரகில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு
அறிவற்றவனே ஆவான். ஒரு மனிதனைப் பார்த்து, "நீ கடவுளை நம்பித்தானாக
வேண்டும்; இல்லாவிட்டால் நீ நரகத்தில் அழுத்தப்படுவாய்" என்று
சொல்கிறவனும் என்பதை மதவாதிகளும் உணர வேண்டும். கடவுளும், மதமும்
அறிவற்றவனைத்தான் ஆட்டும் என்பதோடு வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும்
கூட ஆக்கிவிடும்.
ஆனால், எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி
இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே,
"வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது.
வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்;
விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே – சதையாகவே வந்து முடிவில்
சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை -
வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று.
அது போன்றவைதான் கடவுளும், மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே
இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.
ஆனால், சூரியன், சந்திரன் முதவானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா?
முடியாது. ஏனென்றால் அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட
பகுத்தறிவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு, "எனக்கு அவை இல்லை",
"என் கண்ணுக்கு – என் புத்திக்கு அவை தென்படவில்லை", "நான்
ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் -
உண்மை பகைக்கும் ஏற்ற உதாரணமாகும்.
மற்றும், கடவுள், மதவாதியாக இருப்பவர்கள் "ஒரு மனிதன் மதத்தை ஏன்
மறுக்கிறான்?" என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். அது போலவே
ஒரு மனிதன் கடவுளை ஏன் மறுக்கிறான் என்பதையும் (கடவுள்வாதி) சிந்தித்துப்
பார்க்க வேண்டும். மற்றும் கடவுள், மதவாதிகள், கடவுள் - மத மறுப்பாளர்களை
விட எந்த விதத்தில் அறிவாளிகள்? எந்தவிதத்தில் உயர்ந்த இந்திரியங்களை
(மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை) உடையவர்களாக இருக்கிறார்கள்?
என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து
சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும்
இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடவுள் என்ற பொருளுக்கு மனிதன் கற்பித்து இருக்கும் குணம் என்னவென்றால்,
கடவுள் யாவற்றையும் படைத்து (படைத்ததோடல்லாமல்) யாவற்றையும் நடத்துகிறவன்
என்பதாம்.
அதாவது நன்றோ செய்வேன், தீதோ செய்வேன், நானா அதற்கு நாயகன், நீ
நடத்துகிறபடி நடத்தப்படுகிறவன்தானே? என்பது தான் கடவுள்
நம்பிக்கைக்காரர்கள் கடவுளைப்பற்றி மக்களுக்குச் சொல்லும் இலட்சணம்.
இந்தக் கருத்து ஒரு கடுகளவாவது மனிதனுக்குப் பயன்படுகிறதா? மற்ற
மனிதர்களுக்குத்தான் சொல்லப்படுகிறதே ஒழிய, எவனுக்காவது தன் விஷயத்தில்
நம்பவோ நம்பி நடக்கவோ வாழ்க்கையில் கொள்ளவோ பயன்படுகிறதா?
மக்கள் மடையர்களாக இருந்த வரையில் அதாவது சிந்திக்கும் தன்மை
இல்லாதவர்களாக இருந்தவரையில் - இருக்கிறவரையில் கடவுளுக்கு சர்வ சக்தி,
சர்வ செயல் "இருந்திருக்கலாம்". இன்று அறிவாளிக்கு – அறிவுவாதிக்கு அந்த
எண்ணம் சரி என்று தோன்ற முடியுமோ?
தவிரவும் கடவுளும், மதமும் மனிதனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
கற்பிக்கப்பட்டவை அல்லது தோன்றியவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
அக்காலக் கற்பனையானது காலக்கிரமத்தில் மாறுதலடைந்து கொண்டே
வந்திருக்கிறது என்பதையும் யாராவது மறுக்க முடிகிறதா?
இந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவக்
கடவுளும், 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நபி மதமும், முகமது நபி கடவுளும்
மாத்திரம் சீர்திருந்தி மாற்றம் அடைந்துள்ளபோது, பலப்பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய ஆரியக் கடவுள்களும், ஆரிய மதமும் மாற்றமடையக்
கூடாது என்றால் அது எப்படிப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க
முடியும்?
இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில்
மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது
என்று சொல்லப்படுமானால், அது பெரும் புரட்டாகத்தான் இருக்க முடியுமே
ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது
என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று
வலியுறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய
விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000, 5000, 2000, 1500ஆண்டுகளுக்கு முன்
இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது.
அக்காலக் கடவுளும், மதமும் இவைகளைக் கற்பித்தவர்களும், அக்கால மனிதத்
தன்மைக்கு மேற்பட்டவர்களும் "ஏழைகளுக்கு உதவி செய்தால் உனக்கு "மோட்சம்",
"சன்மானம்" கிடைக்கும் என்று சொன்னார்கள். அவர்களால் சொல்லப்பட்ட வேத
சாஸ்திரங்களும் அப்படியே சொல்கின்றன. இன்றைய வெகு சாதாரண விஞ்ஞான அறிவு,
ஏழைகள் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் பிறப்பிக்கப்பட என்ன அவசியம்?
அவர்கள் யாரால் எதனால் பிறப்பிக்கப்பட்டாலும் சரி, இன்று அவர்கள்
கண்டிப்பாக மனித உலகத்தில் இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. இதற்கு
யாரால் தான், எந்தத் தெய்வீகப் புருஷனால்தானாகட்டுமே என்ன பதில் சொல்ல
முடியும்?
ஆகவே, கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றை
எப்படிப்பட்டவர்களானாலும் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களைப் பொறுத்தவரை
அடக்கமாக வைத்திருத்தால் காக்கப்பட்வர்கள் ஆவார்கள். அப்படிக்கினறி, தான்
பெரிய கடவுள் பக்தன் மத பக்தன் என்கின்ற கர்வங்கொண்டு அவற்றைக் காப்பாற்ற
வெளிக்கிளம்புவானேயானால், அவன் கண்டிப்பாக அவர்களை ஒழிக்க அவற்றின்
"பெருமை"யை அழிக்கப் புறப்பட்டவனே ஆவான்.
கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது,
மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும்.
மதத்தைவிட மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீக
சக்தி உள்ள மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன் மனிதப் பிறவி
என்பதாகும்.
எனவே, பெரிய ஆட்கள் அதாவது 25 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கடவுள்,
மத உணர்ச்சி இருந்தாலும், 24 அல்லது 30 வயதிற்கு உட்பட்ட மக்களிடம்
கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை.
அப்படி இந்தக் கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால் தான் மனிதப்
பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல கருதும் உணர்ச்சி இல்லாமல் தான் மனிதப்
பண்பு மக்கள் யாவரையும் ஒன்று போல கருதும் உணர்ச்சி, நேர்மை நல்லதைப்
போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவையும் ஒன்று போல் கருதிச்
செய்யும் பொதுத் தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும்.
இன்று இவை சுத்த சத்தமாய் இல்லாததற்குக் காரணம் இந்தக் கடவுள், மதம்,
மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப் பிறப்பு என்கின்ற
உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.
0 Kommentare:
Kommentar veröffentlichen