Mittwoch, 16. Dezember 2009

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும்


ஜனாதிபதி தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சிறிலங்கா வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு கடும் போட்டியை எதிர்நோக்கும் தேர்தல் என்று கருதப்படுவதனால் இரு பிரதான வேட்பாளர்களும் பரபரப்புடன் செயற்படத் தொடங்கிவிட்டனர். பரஸ்பரம் இரு தரப்பினரிடமிருந்தும் ஆட்களைக் கழற்றி எடுக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.




எனினும் இது விடயத்தில் ஜனாதிபதியின் சாதனையை சிறிதளவேனும் முறியடிக்க ஜெனரல் பொன்சேகாவினால் முடியவில்லை. பொன்சேகா தரப்பினர் விஜேதாச ராஜபக்ச என்ற ஒருவரை மட்டும் கழற்றி எடுக்க, ஜனாதிபதியோ அதற்கு வட்டியும் முதலுமாக எஸ்.பி.திசாநாயக்க, ஜோன்சன் பெர்ணான்டோ, நந்திமித்ர ஏக்கநாயக்க, ஆசாத் அலி என பலரைக் கழற்றி எடுத்து விட்டார்.

இதுவரை காலமும் இல்லாத வகையில், தமிழ் மக்களும் பெருத்த கவனிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கைகளிலுள்ள தமிழர் இரத்தங்களை துடைத்தும், துடைக்காமலும், தமிழ் மக்கள் மீது பாசம் பொங்க ஓடி வருகின்றனர். இருவரும் தமிழ் மக்கள் மீது பாசாங்குத்தனமான பாசங்களை அள்ளிக் கொட்டுகிறார்களே தவிர, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான உறுதியான எந்தத் திட்டங்களையும் முன்வைப்பதற்கு தயாராகவில்லை. அவ்வாறு முன்வைத்தால், சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற போர் வெற்றிப் பிரசாரம் மங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு.



போர் வெற்றிப்பிரசாரத்தினை சிங்கள மக்களிடம் விற்கலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அதனை விற்க முடியாது. இது தான் இரு வேட்பாளர்களும் எதிர்நோக்குகின்ற பெரிய நெருக்கடி. இந்தப் பாழாய்ப்போன தேர்தலினால், தமிழ் மக்களிடமும் வழிய வேண்டியிருக்கின்றதே என்று புலம்புவதைத் தவிர, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் ரணில் எப்பொழுதும் வெற்றுக் காசோலைக் கனவில் இருப்பார். ஆனால் .இந்தத் தேர்தலில் ஜெனரலை வேட்பாளராக இறக்கியதனால் அந்தக் கனவு நிறைவேறாது என்ற கவலை அவருக்கு. மகிந்தர் தனது தமிழ் எடுபிடிகளையே மலையாக நம்பியிருந்தார். யாழ் மாநகர சபைத்தேர்தல், வவுனியா நகர சபைத் தேர்தல் என்பவற்றின் மூலம் அதுவும் பொய்த்து விட்டதால், தற்போது வெலவெலத்துப் போயுள்ளார். இரு தரப்பும் மக்கள் மத்தியில் செல்வாக்காக உள்ள தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என ஓடத் தொடங்கியுள்ளனர்.



தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மகிந்தரின் எடுபிடிகளின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. மகிந்தர் வென்றால் நாங்கள் நீந்துவோம். மகிந்தர் தோற்றால், நாங்கள் மூழ்குவோம் என்பதே அவர்களின் நிலையாகும். தாங்கள் இருக்க மகிந்தர் தமிழத் தேசியக் கூட்டமைப்பிடம் ஒடுவதும் அவர்களுக்கு எரிச்சலைத் தருகின்றது.



இவர்கள் எல்லோரிலும் பார்க்க அதிகம் பரிதாபத்திற்குரியதாக இருப்பது இந்தியா தான். போரை முன்னின்று நடத்தி தமிழ் மக்களை அழித்த இந்தியாவிற்கு தற்போது இரண்டு பிரச்சினைகள். ஒரு சுண்டக்காய் நாடு, தான் கலைக்க கலைக்க நழுவி ஓடுகின்றதே என்பது முதலாவது பிரச்சினை. நழுவி ஓடினாலும் பரவாயில்லை. சீனாவினைக் கொண்டு வந்து இறக்குகின்றது என்பதே இந்தியாவிற்கு பெரும் கவலை. சிறிலங்காவின் தென்பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்துக்கொடுத்த மகிந்தர், தற்போது வடபகுதியையும் கொடுக்க முன்வந்துள்ளார். 25 ஆயிரம் சீனத் தொழிலாளர்கள் வட இலங்கைக்கு வரப்போகின்றார்கள். இது பர்மாவைப் போல விரைவில் இலட்சங்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது இந்தியாவிற்கு விழுந்த அடி மட்டுமல்ல, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் சேர்ந்து விழுந்த அடியாகும்.



இரண்டாவது பிரச்சினை சரத் பொன்சேகா வெற்றியடைந்தால், சிறலங்காவிற்குள் மேற்குலகம் நுழைந்துவிடும் என்ற அச்சமாகும். இந்தியா தென்னாசியாவிற்கு வெளியே மேற்குலகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றது. ஆனால் தென்னாசியாவிற்குள் மேற்குலகத்தினை நுழைய விடத் தயாரில்லை. இது விடயத்தில் தென்னாசியாவின் அரசன் என்று மேற்குலகம் அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது. தென்னாசியா நாடுகளை இந்தியா ஒருபோதும் இறைமை உள்ள நாடுகளாகக் கருதுவதில்லை. மாறாக இந்தியாவின் காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளாகவே கருதுகின்றது.



கோட்பாட்டு ரீதியாக பார்ப்போமாயின் சிறிலங்காவில் இன்று எல்லா இனத்தவரையும் இணைத்து இலங்கைத் தேசியம் என்பது நடைமுறையில் இல்லை. மாறாக சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம் என்பனவே நடைமுறையில் உள்ளன. சிறிலங்கா அரசு என்பது சிங்கள தேசத்திற்குரிய அரசே ஒழிய அனைத்து மக்களுக்குமுரிய அரசு அல்ல. இந்நிலையில் சிங்கள தேசம் தனது தலைவர் யார்? என நடாத்தும் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்கு பெறுதல் வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. சிறிலங்கா அரசு சிங்கள தேசத்திற்குரிய அரசு என்பதால் தான் தமிழ் மக்கள் நீண்ட காலம் போரை நடத்தி வந்தனர். அனைத்து இனங்களையும் இணைத்த இலங்கை அரசொன்றை உருவாக்கினால் நாம் இணையத் தயார். அல்லது நாம் தனியே செல்லப் போகின்றோம் என்பது தான் போராட்டம் வழங்கிய அரசியல் செய்தி. சிறிலங்கா அரசு தமிழ் மக்களை இணைக்கவும் தயாரில்லை. தனியே செல்ல விடவும் தயாரில்லை. அடிமைக் கூட்டமாக வைத்திருப்பதே அதன் நோக்கம் என்பதே அரசு வழங்கும் செய்தியாகும்.



இரண்டாவது சிங்களக் கட்சிக்கும், சிங்களத் தலைவருக்கும் வாக்களிக்கின்ற பழக்கத்தினை சுயநிர்ணயமுடைய தனித்தேசத்தவரான தமிழ் மக்களுக்கு வழங்குவது நல்லதா? மக்களிடமுள்ள தனியான நேச உணர்வினைக் குலைத்து ஓர் அடிமைக்கூட்டமாக இது மாற்றி விடாதா என்பது அடுத்த கேள்வியாகும். தமிழ்த்தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு சென்ற ஓர் நிலையில், சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாகியுள்ள ஒரு நிலையில் சிங்களத் தலைவர் ஒருவரை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு சொல்வது சரியானதா?



எனவே கோட்பாட்டு ரீதியாக நாம் பார்க்கும் போது தமிழ் மக்கள் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியாது.



நடைமுறை ரீதியாகப் பார்ப்போமாயி;ன் இரண்டு பிரதான வேட்பாளர்களின் கைகளிலும் தமிழ் மக்களின் இரத்தம் உறைந்து போயு;ளளது. சுயமரியாதை என்பது தனிமனிதருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. மாறாக சமூகத்திற்கும் அது இருக்கின்றது. ஒரு சுயமரியாதை உள்ள சமூகம் இரத்தக்கறை படிந்த கைகளை எப்படித்தான குலுக்க முடியும்?



இதை விட இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளில் இது வரை உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பவையே தமிழ் மக்களினது அடிப்படை அபிலாஷைகளாகும். 1985ம் ஆண்டு திம்பு மாநாட்டில் இவ் அபிலாஷைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.



இந்த அபிலாஷைகள் தொடர்பில் உறுதியான கருத்துக்கள் எவற்றையும் இரு பிரதான வேட்பாளர்களும் முன்வைக்கவில்லை. இதற்கு முன்னர் 1994ம் ஆண்டு தேர்தலில் பொதுஜன முன்னணி சமஷ்டிக் கோரிக்கையை பெயருக்கு ஏற்றிருந்தது. அதேபோல் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்றிருந்தது. இன்று போர் வெற்றி மிதப்பில் சிங்கள சமூகம் இருப்பதனால் சமஷ்டி என்ற சொல்லை பெயருக்குக் கூட சொல்ல இரு தரப்பும் தயாராக இல்லை. வெறுமனவே 13வது திருத்தத்திற்கு மேலாக என்று மட்டும் கூறிக்கொள்கின்றனர். அந்த மேலாக என்பதன் உள்ளடக்கம் என்ன? என்பது பற்றி வாயே திறப்பதில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக இரு தரப்பும் சொல்கின்ற கருத்திற்கு மேலதிகமாக மற்றய தரப்பு சொல்வதற்கு தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் தமது வாக்கு வங்கி சரிந்து விடும் என்பதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி மகிந்தர் ஒரு படி மேலே சென்று 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தினை ஒருபோதும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகவே கூறியுள்ளார்.



எனவே நடைமுiறாகப் பார்க்கும் போதும் இரு தரப்பிற்கும் தமிழ் மக்களினால் வாக்களிக்க முடியாது. மீதமாக இருப்பது இராஜதந்திரம் என்ற விடயம் தான். இராஜதந்திர ரீதியாக அணுகும் போது ஒரு தேசிய இனம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இராஜதந்திர செயற்பாடு என்பது வாளின் கூர் முனையில் நடப்பது போன்றது. சற்றுப் பிழைத்தாலும் பெருந்தீங்கு ஏற்படலாம். குறிப்பாக இராஜதந்திர செயற்பாட்டை முன்னெடுக்கும் போது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு தீங்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



இராஜதந்திர ரீதியாகப் பார்த்தால் இன்று சரத் பொன்சேகாவிற்குப் பின்னால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நிற்கின்றது. ஜனாதிபதி மகிந்தருக்கு பின்னால் இந்தியா நிற்கின்றது. எனவே மேற்குலகை ஆதரிப்பதா? இந்தியாவை ஆதரிப்பதா? என்றே தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்விரு தரப்பில் எவரை ஆதரிப்பதால் குறைந்த மட்டத்திலாவது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்க முடியும் என்பது பற்றி விவாதிக்க வேண்டும்.



இரு தரப்பும் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்;வு, ஜனநாயக விழுமியங்கள், தமிழ் மக்கள் செயற்படக் கூடிய அரசியற் தளங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்தல் வேண்டும்.



அரசியல் தீர்வு எனப் பார்த்தால் இந்தியாவின் அதி உச்சத் தீர்வு 13வது திருத்தம் தான். அதற்கு மேல் இந்தியா ஒருபோதும் செல்லப்போவதில்லை. சிலவேளைகளில் அழுத்தம் கூடினால் ஜம்மு, காஸ்மீருக்கு இருப்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை சிபார்சு செய்யலாம்.



13வது திருத்தம் சுயாதீனமாகச் செயற்படக் கூடிய மாகாண சபைகளை உருவாக்கவில்லை. மாறாக மத்திய அரசின் தயவில் தங்கி நிற்கின்ற மாகாண சபைகளையே உருவாக்கியுள்ளது. மத்திய அரசு தயவு பண்ணாமல் ஒரு சிறிய செயற்பாட்டைக் கூட மாகாண சபைகளினால் மேற்கொள்ள முடியாது. வரதராஜப்பெருமாளின் வட கிழக்கு மாகாண சபையும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.



இந்தியா தனது நாட்டு யாப்பில் உள்ளது போன்ற முறையினையே 13வது திருத்தத்தில் சிபாரிசு செய்திருந்தது. அங்கு மாநிலங்களுக்கு யாப்பு ரீதியாக சுயாதீனமான அதிகாரங்கள் கிடையாது. எனினும், மத்திய அரசு பன்மைத்தன்மை கொண்டதாக இருப்பதனால் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக மாநிலங்கள் சிறியளவில் சுயாதீனமாக இயங்க முடிகின்றது.



ஆனால் சிறிலங்காவில் அரசியல் நிர்ப்பந்தம் எதிர்மாறாகவே உள்ளது. நிரந்தரப் பெரும்பான்மையும், நிரந்தர சிறுபான்மையும் இருப்பதால் பெரும்பான்மை இனம் ஒருபோதும் அரசியல் நிர்ப்பந்தத்தை கொடுக்கத் தயாராக இல்லை. எனவே அரசியல் தீர்வு என்ற வகையில் பார்த்தால் ஒருபோதுமே இந்தியாவைத் தவிர்க்க முடியாது.



மேற்குலகத்தின் நிலை இதற்கு மாறானது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ ஜனநாயகம் அங்கு நிலவுகின்றது. மேற்குலகத்தினைப் பொறுத்தவரை முதலாளித்துவ ஜனநாயகம் இருக்க வேண்டும். ஆனால் அது பெரும்பான்மை வாதமாகவும் போகக் கூடாது என்பதில் அக்கறையும் உள்ளது. பெரும்பான்மைவாதம் இருக்கக் கூடாது என்பதற்காகவே அது சமஷ்டி சிந்தனையை முன்வைத்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பிரிவினை பலவீனமாக்கும் எனக் கருதுவதனால் பிரிவினையை அது ஆதரிப்பதில்லை. ஆனால் ஒரு முழுமையான பூரண சமஷ்டியை அது ஆதரித்து நிற்கும்.



எனவே அரசியல் தீர்வு விடயத்தில இந்தியா பக்கம் நிற்பதனை விட மேற்குலகத்தினர் பக்கம் தமிழ் மக்கள் நிற்கலாம். ஆனாலும் இவ் அரசியல் தீர்வு தொடர்பாக மேற்குலகம் குரல் கொடுக்குமே தவிர இந்தியாவுடனான உறவினைப் பகைக்கக் கூடாது என்பதற்காகவும், இலங்கைத் தீவு சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லக் கூடாது என்பதற்காகவும் பெரிய அழுத்தங்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் குரலாவது கொடுக்கும் என்ற வகையில் நாம் அதனை ஆதரிக்கலாம்.



ஜனநாயக விழுமியங்களைப் பொறுத்தவரை மேற்கின் ஜனநாயக விழுமியங்கள் உயர்ந்தவை. இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் பலவீனமானவை. அதுவும தேசிய இன விவகாரத்தில் இந்தியாவின் விழுமியங்கள் மிகவும் பலவீனமானவை. எனவே மேற்கினை ஆதரிப்பதனால் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தமது அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும்.



தமிழ் மக்கள் செயற்படக் கூடிய அரசியற் தளம் என்ற வகையில் பார்த்தால் இரண்டு இடங்களிலுமே தமிழ் மக்களுக்கு அரசியற் தளம் உண்டு. இந்தியாவில் தமிழ் நாடு ஒரு அரசியற் தளமாக உள்ளது. மேற்குலகில் புலம்பெயர் மக்கள் வசிக்கும் நாடுகள் அரசியற் தளங்களாக உள்ளன.



தமிழ்நாட்டில் மாநில அரசிற்கு சுயாதீனமான இருப்பு இல்லாததினாலும் இரு பிரதான கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வேண்டி நிற்பதனாலும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக அனுபவத்தாக்கம் பெரிதாக இல்லாததினாலும், இந்திய ஜனநாயக விழுமியங்கள் பலவீனமாக இருப்பதனாலும் அவ் அரசியற் தளத்தினால் போதிய வினைத்திறனுடன் செயற்பட முடியவில்லை.



ஆனால் புலம்பெயர் அரசியற் தளம் என்பது அவ்வாறானதல்ல. தாயகத்தின் நீட்சியாக உள்ள மக்களே அங்கு வசிக்கின்றனர். தமிழ் மக்களிடம் அங்கு அமைப்பு ரீதியான பலமும் உண்டு. அந்நாடுகளின் ஜனநாயக விழுமியங்களும் வலிமையாக உள்ளன. எனவே தமிழ்மக்கள் அரசியற் ரீதியாக செயற்படக் கூடிய வாய்ப்பு அங்கு அதிகமாக உள்ளது. எனினும் இங்குள்ள பாதகமான அம்சம் என்னவெனில் மேற்குலகம் சார்பான சரத் பொன்சேகா வெற்றியடைந்தால் மேற்குலகம் அதிகளவில் சரத் பொன்சேகாவைப் பாதுகாக்கவே முற்படும். அரசியல் தீர்வினை விட முதலாளித்துவப் பொருளாதாரத்தினை இலங்கைத் தீவில் வளர்ச்சியடையச் செய்வதிலேயே அதிக அக்கறை செலுத்தும். இதனால் ஒருப்பக்கத்தில் அரசியல் தீர்வு முயற்சி இழுபட்டுச் செல்கின்ற அதேவேளை முதலாளித்துவ பொருளாதார முயற்சிகளினால் தமிழ் மக்களின் உணர்வுத் தரமும் வீழ்ச்சியடையலாம். இப்போக்கு முரண்பாட்டின் கூர்மை நிலையினை மங்கச் செய்யப்பார்க்கும்.



ஆனாலும் முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக தற்போதுள்ள கெடுபிடி நிலை குறையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் தமிழ் மக்கள் ஓரளவிற்கு மூச்சுவிடக் கூடிய சூழல் ஏற்படும். போரினால் சிதைந்து போன வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் வாய்ப்புக்கள் உருவாகும்.



எனவே கொள்கை, நடைமுறை என்பவற்றிற்கு அப்பால் இராஜதந்திர ரீதியாக தேர்தலில் பங்குபற்றக் கூடிய வாய்ப்புகள் இருந்தால் தீவிரமாக ஆலோசித்து தமிழ் மக்கள் முடிவு செய்யலாம்.



இனி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் மக்களுக்குள்ள தெரிவுகளைப் பார்ப்போம்.



தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலைப் பகிஷ்கரித்தல், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துதல், இடதுசாரி முன்னணி வேட்பாளரான விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரித்தல், இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரித்தல் என நான்கு தெரிவுகள் உள்ளன. இத்தெரிவுகள் ஒவ்வொன்றினையும் மிகக் கவனமாக ஆலோசிப்பது அவசியமானதாகும். கொள்கை, நடைமுறை அடிப்படையில் முடிவுகள் எடுப்பதில் இத்தேர்தலில் எதுவும் இல்லாததினால் இராஜதந்திரம் என்பதனை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.



தேர்தலைப் பகிஸ்கரித்தல் என்ற முதலாவது தெரிவினைப் பார்ப்போம். கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தேர்தலைப் பகிஸ்கரிப்பதே எடுக்கக் கூடிய சரியான முடிவாகும். முன்னர் கூறியது போல கொள்கை ரீதியாக தற்போதைய சிங்கள அரசிற்குள் தமிழ் மக்கள் இல்லை. எனவே சிங்கள மக்கள் தமது தலைவர் யார் என்பது தொடர்பாக நடைபெறும் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கேற்க முடியாது. அத்துடன் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் பழக்கத்தினையும் தமிழ் மக்களுக்கு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கின சிங்களத் தலைவரையும், ஒடுக்கும் சிங்கள அரசினையும் தமிழ் மக்கள் ஏற்பதாக அமைந்து விடும். தமிழ்த்தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ள ஒருநிலையில் இச்செயற்பாடு சர்வதேச மட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியலின் நியாயத்தன்மையை பலவீனப்படுத்தி விடும்.



தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது தமிழ் மக்களுக்கு புதியதொன்றல்ல. பகிஸ்கரிப்புப் போராட்டத்தினை இலங்கைத் தீவிற்கு அறிமுகப்படுத்தியவர்களே தமிழ் மக்கள் தான். 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நடைபெற்ற தேர்தலை இலங்கைக்கு பூரண சுதந்திரம் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக யாழ்குடாநாட்டு மக்கள் பகிஸ்கரித்தனர். யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் இப்போராட்டத்தினை முன்னெடுத்தது. இது தமிழ் மக்கள் நடத்திய முதலாவது பகிஸ்கரிப்புப் போராட்டமாகும்.



இரண்டாவது 2005 ஜனாதிபதித்தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். புலிகள் இதற்கான அழைப்பினை விடுத்திருந்தனர். புலிகள் வன்முறையால் மக்களைத் தடுத்தனர் என்பது அதிமேதாவிக் கற்பனை. ஒரு சில இடங்களில் நடந்திருக்கலாம். ழுமு வடக்கு கிழக்கிலும் நடந்தது என்பது ஏற்கமுடியாதது.



மூன்றாவது போராட்டத்தை அண்மையில் எவரும் அழைப்பு விடுக்காமலேயே மக்கள் மேற்கொண்டனர். வவுனியா நகரசபை, யாழ்;ப்பாண நகர சபைத் தேர்தல்களிலேயே மேற்கொண்டனர். அந்தப்போராட்டம் இந்த அரசினை நாம் ஏற்கவில்லை என்ற செய்தியை சர்வதேசத்திற்கு தெரிவித்தது. இந்த தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றிக் கிடைத்திருந்தால் கிழக்கு மாகாண சபை போன்ற ஒரு நாடகத்தினை வடக்கிலும் அரசாங்கம் நடத்தியிருக்கும். ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் கைகூடவில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும் என்பதற்கேற்பவே வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணத்தினை அரசு கைவிட்டது.



பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளார்களே என்ற எதிர்வாதம் ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இது தவறானது. ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் ஒன்றல்ல. கொள்கை ரீதியான சிங்கள அரசினை நாம் ஏற்கவில்லை. எனவே சிங்கள அரசு நடத்தும் அனைத்துத் தேர்தல்களையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும் என்பது சரியானதே. ஆனால் இராஜதந்திரம் என்ற அடிப்படையிலேயே அந்த வாக்களிப்பினை நாம் ஏற்கவேண்டும்.



பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மூன்று இராஜதந்திரப் பிரச்சினை இருக்கின்றது. முதலாவது ஜனாதிபதித் தேர்தல் போல சிங்களவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தல் அல்ல இது. மாறாக தமிழரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆகும்.



இரண்டாவது அரசின் எடுபிடிகள் அத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற விடயமாகும். இது தடுக்கப்படவில்லையானால் அரசாங்கம் அவர்களை மக்களின் பிரதிநிதிகளாக சர்வதேச மட்டத்தில் காட்டி தமிழர்த்தேசிய அரசியலையே சிதைக்கப் பார்க்கும்.



மூன்றாவது, பாராளுமன்றத்தை தமிழ்த்தேசிய அரசியலை நியாயப்படுத்துவதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தக் கூடிய நிலை இருப்பதாகும். போராட்டக் காலத்தில் ஆயுத இயக்கம் பகிரங்க அரசியல் செய்ய முடியாத நிலையில் இந்த உறுப்பினர்கள் ஊடாக அதனையும் மேற்கொள்ளக் கூடிய நிலை ஏற்படும். தமிழர்த்தேசியக் கூட்டமைப்பு இப்பணியினை எவ்வளவு தூரம் செய்தது என்பது விமர்சனத்திற்குரியதே!



எனவே பாராளுமன்றத்தேர்தலையும், ஜனாதிபதித்தேர்தலையும் நாம் ஒன்றாகப்போட்டுக் குழப்பக் கூடாது.



இந்த ஜனாதிபதித்தேர்தலுக்கு பகிஷ்கரிப்பு பொருத்தமான அணுகுமுறையா என்பதை இராஜதந்திர ரீதியில் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். தமிழர்த்தேசிய அரசியலை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்துவதற்கு இத்தேர்தலைப் பயன்படுத்த முடியுமாயின் தமிழ் மக்கள் தேர்தலில் பங்கேற்றுவதே சரியானதாக இருக்கும்.



இரண்டாவது தெரிவு தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாகும். தமிழ்மக்களுக்கு உள்ள தெரிவுகளில் இதுவே அதிகளவில் பொருத்தமானதாக இருக்கும். தமிழ் வேட்பாளரை நிறுத்தி பெரும்பான்மையான தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள அரசோடு இல்லை என்ற செய்தியை சர்வதேச மட்டத்திற்கு தெரிவிக்கலாம். அதேவேளை மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களின் ஐக்கியத்தையும் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.



ஆனால் இதிலுள்ள பிரச்சினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதற்கு தயாராக இல்லை என்பதாகும். புலம்பெயர் மக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவுகளை பொறுப்பேற்கத் தயாராக இருக்கின்ற போதும் தமிழர்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதற்கு இணங்கவில்லை என்பது கவலைக்குரியதாகும். மக்கள் வாக்களிப்பில் அக்கறைக் காட்டாமல் விடுவார்களோ என்ற அச்சம் கூட்டமைப்பிற்கு இருக்கலாம். அரசின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற அச்சமும் இருந்திருக்கலாம். எனினும் தமிழர்த்தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த யாராவது அல்லது தமிழர்த்தேசிய ஆதரவாளர் யாராவது போட்டியிட முன்வந்தால் அதனைச் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும்.



மூன்றாவது தெரிவு இடதுசாரி வேட்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு வாக்களிப்பதாகும். தமிழர்த்தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழர்த்தேசிய ஆதரவாளரோ போட்டியிடாதவிடத்து விக்கிரமபாகுவிற்கு ஆதரவளிப்பது பற்றி தமிழ் மக்கள் பரிசீலிக்கலாம். தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சிங்களத் தலைவர் என்ற வகையில் ஆதரவு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும்.



ஆனால் இங்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று இடதுசாரி முன்னணி அமைப்பு ரீதியாக மிகவும் பலவீனமான கட்சியாகும். சிங்கள மக்கள் மத்தியில் சிறிய தளம் கூட அதற்கு கிடையாது. அந்தத் தளத்தினை அமைக்கும் முயற்சியிலும் கட்சிய இறங்கியதில்லை.



இரண்டாவது தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவு பிரபலமில்லாத வேட்பாளராக அவர் இருக்கின்றமையாகும். கட்சி ஒரு அறிக்கை விடும் கட்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்கள் மத்தியிலும் பெரியளவிற்கு அது செயற்படவில்லை.



நான்காவது தெரிவு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதாகும். இதில் மகிந்தவுக்கு வாக்களிப்பது பற்றி நினைத்தே பார்க்க முடியாது. பச்சை இனவாதத்தினைக் கக்குகின்ற கட்சிக்கு தமிழ் மக்களினால் எப்படி வாக்களிக்க முடியும்? இராஜதந்திர ரீதியாக மகிந்தருக்கு பின்னால் இந்தியா இருப்பதால் அது பொருத்தமானதாக இல்லை. மகிந்தருக்கு வாக்களிப்பது இந்தியாவின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையினை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்.



ஆனால் பொன்சேகா மேற்குலகம் சார்பானவராக இருப்பதனால் அவருக்கு வாக்களிப்பது பற்றி யோசிக்கலாம். எனினும் முதலாவது வாக்கினை ஒருபோதும் அவருக்கு வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவது சுயநிர்ணய உரிமையை ஏற்காத, தமிழ் மக்கள் மீது இன அழிப்பினை நடத்திய ஒருவரை ஏற்பதாக அமைந்துவிடும். தமிழ்த்தேசிய அரசியல் நியாயத்தன்மையையும் பலவீனப்படுத்தி விடும். தமிழ் மக்கள் சிங்கள அரசுடன் இல்லை என்ற அடிப்படையான கோட்பாட்டு வாதத்திற்கும் தடையாக அமைந்துவிடும்.



முதலாவது வாக்கினை தமிழ் வேட்பாளருக்கோ அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட விக்கிரமபாகு கருணாரத்னவுக்கோ அளித்து விட்டு இரண்டாவது வாக்கினை சரத் பொன்சேகாவிற்கு அளிக்கும் போதே தமிழ்த் தேசிய அரசியலில் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அதேவேளை இராஜதந்திர காரணத்திற்காக இரண்டாவது வாக்கினை அளிக்கின்றனர் என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு சொல்லக் கூடியதாகவிருக்கும்.



இரண்டாவது வாக்கினைக் கூட வெற்றுக் காசோலையாக வழங்கிவிட முடியாது. தமிழ் மக்களின் குறைந்த பட்ச நலன்கள் தொடர்பாக ஒரு உத்தரவாதத்தினை சர்வதேச சக்திகளை சாட்சியாக வைத்து பெற்ற பின்னரேயே வழங்குதல் வேண்டும்.



எனவே முடிவாக, இராஜதந்திர காரணத்திற்காக தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றலாம். தமது முதலாவது வாக்கினை தமிழ் வேட்பாளருக்கு வழங்க வேண்டும். தமிழர் வேட்பாளர் இல்லாதவிடத்து இடதுசாரி முன்னணி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு வழங்கலாம். இரண்டாவது வாக்கினை நிபந்தனையின் அடிப்படையில் சரத் பொன்சேகவிற்கு வழங்கலாம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen