
ஜனநாயகத்தில் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பாரிய பொறுப்பு மக்களையே சார்கிறது. இதற்காக குறிப்பாக சிறுபான்மையினர் யார் ஆண்டால் என்ன என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு தமது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றத் தமக்குச் சேவையாற்றக்கூடிய மக்களின் தலைமையைத் தெரிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இடம்பெற வேண்டியது மட்டுமன்றி, புத்திசாலித்தனமான தெரிவாகவும் இருக்க வேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரத்தைப் பொறுத்தவரை தற்போதைய தேர்தல் சிங்களப் பேரினவாதத்திற்கான தலைமைத்துவப் போட்டியாகத்தான் நடக்கவிருக்கின்றது என்றாலும் அதற்கு தமிழரின் ஆதரவு அவசியமாவதோடு, யுத்தவெற்றி என்ற அடிப்படையில் களமிறங்க இருக்கும் இரு வேட்பாளர்கள், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இருப்பது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டுகளிலும் சிறுபான்மையினக் கட்சிகளின் பங்கு என்பன சிறுபான்மையினரின் வாக்குகளைத் தீர்மான சக்திகளாகக் கூட மாற்றலாம். இந்நிலையில்தான் சிறுபான்மையினர் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் முதலாமவர் புலிகளுடன் பேசி சமாதானத்தை நிலைநாட்டுவேன் என்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதி வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மிகக் கொடூரமான யுத்தத்தை மேற்கொண்டு வெற்றிபெற்றிருப்பதோடு, சிறுபான்மையினக் கட்சிகளைச் சிதைத்து சிங்கள தேசியவாதக் கட்சிக்குள் இணைத்தும் இணைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருபவர்.
இலங்கையின் அனுபவத்தின்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு 2 ஆவது தேர்தலில் தோல்வியைத் தழுவியது இல்லையென்றாலும் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டு,பொதுவேட்பாளர் என்பன ஆளுங்கட்சிக்குச் சற்று சிக்கலாகவே இருக்கின்றன. இவற்றை கருதி சிறுபான்மையினரின் ஆதரவு திரட்ட இடம்பெயர்ந்து முகாமில் உள்ளவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையும் ஜனவரி 31 க்கு முன் அனைவரும் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த குறிப்பாக வட மாகாணத் தமிழர்களின் ஆதரவு வேண்டி நிற்கின்றேன் என்பன போன்ற கருத்துகளையும் தற்போதைய ஜனாதிபதி வெளியிட்டு வருகின்றார். இருப்பினும் அரசியலில் தன்னை நன்கு வலுப்படுத்திக் கொண்ட ஒருவரிடம் இருந்து எதையாவது பெற்றுக் கொள்வதைவிட வலுப்படுத்திக் கொள்ள முடியாத ஒருவர் மூலம் அதைப் பெறுவது சுலபம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். மகிந்த மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படாது. இதுவும் தற்போதைய அரசியல் யாப்பும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது.
இனி இரண்டாவது முக்கிய வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலையும் அவர் பொதுவேட்பாளரான பின்னணியும் கூடத் தமிழ் மக்களுக்கு முரணானதே. இவர் கனடாவில் நெஷனல் லான்ட் பத்திரிகைக்குத் தெரிவித்த கருத்தானது "தமிழ் மக்கள் தங்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையாலேயே போர் மூண்டது. தமிழ் சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதுமே அனுமதிக்கப்போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என நான் உறுதியாக நம்புகிறேன். சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக் கூடாது%27. இதிலிருந்து இவரின் பேரினவாத அரசியல் கலாசாரம் முழுமையாக விளங்குகிறது. இதனால் இவர் எதிர்க்கட்சியின் ஆதரவின்றி 22 வீத வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்படுவதோடு, குறிப்பாக பௌத்த பிக்குகளின் ஆதரவினையும் பெற்றுக் கொள்வார் என்றும் கருதப்படுகின்றது.
இவரின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பேராசிரியரான சுமணசிறி லியனகே, "குறுகிய கால அடிப்படையில் அவரின் அரசியல் பிரவேசம் ஜனநாயகத்திற்கு நல்லது. ஏனெனில், எதிர்த்தரப்பு அணிசேர அவர் உதவிக் கொண்டிருக்கிறார். ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவையாகும். ஆனால், நீண்டகால அடிப்படையில் ஆபத்தானது%27.என்றார். இந்த அரசியல் அறியாத குழந்தை பிறந்த பின்னணியானது முக்கியமாக ஜனநாயகம் பேசும் ஐ.தே.கட்சியும் சோசலிஷம் பேசும் ம.வி.முன்னணியினதும் வரலாறு இல்லாத இணைப்பினாலாகும்.
ஐ.தே.கட்சியின் கொள்கைப்படி மக்கள் உரிமையைப் பாதுகாத்து நல்லாட்சியை ஏற்படுத்தல், அதிகாரப் பகிர்வு,நடமாடும் சுதந்திரம் என்பனவற்றுக்காக ம.வி. முன்னணியுடன் த.தே.கூட்டமைப்பையும் இணைத்து அவர்களுக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்புகளையும் வழங்குமாம். இவ்விடயத்தில் சரத்தையிட்டு எழும் சிக்கலானது அவர் ஏற்கனவே பாதுகாப்புப் படைகளை தமிழ் அகதிகளின் சொந்தக் கிராமங்களில் வைத்திருத்தல், இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தீர்வாகாது, இந்நாடு சிங்கள,பௌத்தர்களுக்கே உரியது என்று கூறியமை குறிப்பிடத்தக்கதாகும். மாறாகத் தமிழர்களுக்குச் சார்பாக நடந்தால் சரத் ம.வி.முன்னணியை எவ்வாறு திருப்திப்படுத்துவார் என்பதும் கேள்விக்குறியாகும்.
அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்வு கொடுத்து மந்திரிகளாக்கி ஆளுங்கட்சி வலுவாக இருக்கும் வேளையில் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக ஆகிவிட்டால் எதிர்க்கட்சியால் எல்லாவற்றையும் செய்யமுடியுமென நினைப்பது தவறாகும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பொதுத் தேர்தலில் தோல்வியடைவது சிக்கலானதும் ஐ.தே.கட்சியின் தலைமையின் கனவு கைகூடாத நிலையுமாகிவிடும்.
மேலும், சரத்திற்கு மகிந்தவிடம் மிகச் சிறியளவு இருக்கும் சர்வதேசத்திற்குப் பொறுப்புக் கூறும் தன்மை அடியோடு இல்லாதிருக்கும் நிலை கூடத் தமிழர்களுக்குச் சாத்தியமானதல்ல. அதிலும் இவர் தெரிவு செய்யப்பட்டதும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்காது இராணுவ உதவி கொண்டு பாகிஸ்தான், மியன்மார் போன்று இராணுவ ஆட்சியை ஏற்படுத்திவிட்டால் தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்ற ஐயமும் எழுகின்றது.
எனவே, இரு வேட்பாளர்களை இட்டும் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக வட பகுதி மக்களிடம் இருக்கும் கேள்வியானது வன்னியில் இனச் சுத்திகரிப்பு நடத்தியவர்களையே தமக்குத் தலைமை தாங்கும்படி அங்கீகரிக்க அவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? என்பதாகும். "சரத் பொன்சேகாவை விடத் தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம்,ஜனநாயக வழிமுறைகளில் பரீட்சயமானவராயினும் யுத்த வெற்றி தமிழர்களுக்கு ஏற்படுத்திய அவலம், தமிழர்களுக்கான உரிமையை வழங்க மறுத்தல் என்பனவற்றில் இருவரினதும் நிலை ஒரு தராசின் சமநிறையானவையாகும்%27.
இத்தகைய பின்னணியில் சிறுபான்மையினக் கட்சிகளின் போக்கானது கவலைக்குரியதாகவும் அதேவேளை,கண்டனத்திற்குரியதாகவுமே இருக்கின்றது.சிறுபான்மையினக் கட்சிகளிடையே சுவிஸில் இடம்பெற்ற கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டதாம். இவ்வாறு நாடுவிட்டு நாடு போய் இனப்பிரச்சினைக்குத் தீர்வும்,மீளக்குடியமர்வு,மனித உரிமை மீறல், மலையக மக்களின் பிரச்சினைகள்,முஸ்லிம்களின் அபிலாசைகள் என்பனவற்றுக்குத் தீர்வு வெளியிடமுன் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடாமல் இருந்தால் சரி.
இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசப்படும்போது சிலரின் கடுமையான எதிர்ப்பினால் அது பற்றி விவாதிக்கப்படவில்லை என்பதன் உட்பொருள் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகத் தனது அரசியல் இலாபம் கருதி யாராவது ஒருவரை ஆதரித்துவிட்டு கடைசியில் முழு சிறுபான்மையின சமூகத்திற்கும் அழிவைச் சம்பாதிப்பதாகவே கருதப்படுகின்றது. தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற தமிழர்களுக்குச் சேவையாற்றக் கூடியவர் எனத் தெரிந்த ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்த பேரினவாதக் கட்சிகள் ஒருபோதுமே விரும்பாத நிலையில் தமிழ்க் கட்சிகள் மட்டும் அவர்கள் நிறுத்தும் ஒருவருக்கு ஓடோடிச் சென்று ஆதரவு கொடுக்கக் காத்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக இலங்கைத் தமிழர் 1982 இல் குமார் பொன்னம்பலம் போட்டியிட்ட தேர்தலை விடுத்து மற்றைய ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கியே வந்துள்ளனர். குறிப்பாக கடந்த தேர்தலில் 1.2 வீதமானவர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில், புலிகள் இயக்கத்தின் தலையீடுகள் இல்லாதொழிந்துள்ள நிலையில், த.தே.கூ.,த.வி.கூ.,ஈ.ம.ஜ.க.,புளொட் போன்ற கட்சிகள்தான் செல்வாக்குச் செலுத்தும். இதில் த.தே.கூ.யாருக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்க்கமான முடிவை எடுக்காத நிலையிலும் இக்கட்சிக்குள்ளேயே பல பிரிவுகளை உருவாக்கிக் கொண்டு இந்திய சார்பு, இலங்கை அரசாங்க ஆதரவுப் போக்கு,தமிழ்த் தேசியக் கொள்கை எனப் பிரிந்துள்ளதோடு, இதனைக் கூர்மையாக்கி நடக்கவிருக்கும் இரு தேர்தல்களிலும் வெளிப்படுத்தினால் அதன் பெறுபேறு வரவேற்கத்தக்கதாக அமையாது.
இலங்கை சார்புக் கொள்கையில் முக்கியமானவர்களான ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர் போன்றோர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதாகக் கட்சியின் ஒப்புதலின்றி குறிப்பிட்டுள்ளதோடு, ஜனாதிபதியின் பிறந்தநாளன்று அலரிமாளிகைக்குச் சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் பேரினவாத வேட்பாளர்களில் முக்கியமான இருவருமே யுத்தத்தில் பெரும் பங்காற்றியவர்கள் என்பதை மறந்துவிட்டார்களா? அவ்வாறே இந்திய சார்புக்காரர்கள் யுத்தத்தின் போது இந்தியா தமிழ் மக்களைக் கைவிட்டு அவர்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது மட்டுமல்லாது, அதற்குப் பல்வேறு வகையில் உதவியதைக் கண்கூடு தெரிந்த பின்பும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என எண்ணிக்கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
கிழக்கின் நிலைமையானது அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய தலைவரும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய ஜனாதிபதி மகிந்தவை எதிர்வரும் தேர்தலில் பலப்படுத்துவோம் என சொல்லிக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதில் முன்வந்து செயற்படுகின்றனர். மேலும், கிழக்கிலுள்ள சில முஸ்லிம் கட்சிகளும் மகிந்தவிற்கே பக்கபலமாக இருக்கின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸோ ஐ.தே. முன்னணியோடு இணைந்துள்ளதோடு, பொது வேட்பாளரை சந்தித்து விட்டு ஆதரவு வழங்குவது பற்றி தீர்மானிப்பதாகக் கூறிவருகின்றது.
தற்போதும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் ம.ம.மு., இ.தொ.கா. வும் மலையக மக்களின் பிரச்சினைகளிலும் ஆர்வம் கொள்ளாது தூர நோக்கின்றி செயற்படுவது போலவே தெரிகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிட்டதால்தான் எட்டு உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான
பலம் இருக்கின்றது. இதன் வெற்றி தமது அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது. அவ்வாறன்றி கடந்த மாகாண சபைத் தேர்தல்கள் போல ஒருவருக்கொருவர் காலைவாரி தங்கள் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவோ அல்லது குறைக்கவோ வழி தேடிக்கொள்ளும். அதனால் மக்களின் நலனையும் மலையகத்தின் எதிர்காலத்தையும் மனதில் இருத்தி மலையகத் தலைமைகள் முடிவு எடுக்க வேண்டும். நினைத்துப் பார்க்காத அளவில் ஒரு பேரினவாத அரசியலை சாய்க்க பிறிதொரு பக்கம் பேரினவாதத்தில் உள்ளடங்கும் ஜனநாயகமும் சோசலிஷமும் கூட்டுச் சேர்ந்துள்ளதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். மலையக அரசியல் கட்சிகள் கூட்டமைத்துச் செயற்பட வேண்டியது தான் வரவேற்கக் கூடியதாக இருக்கும். இதுவே பொதுத் தேர்தலிலும் மிகவும் வேண்டப்படுவது.
மேல் மாகாணத்தில் ஐ.ம.மு. எதிர்க்கட்சிகளின் பிரதான கூட்டில் இணைந்து அதற்கு ஆதரவு வழங்குவதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் கூட்டிலும் இணைந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ஐ.ம.மு. மற்றும் ஸ்ரீ லங்கா மு.கா. என்பனவற்றைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ரணில் இறங்கியிருப்பதேயாகும்.
கொள்கையில் பெரியளவில் வேறுபாடுகள் இல்லாது சிறுபான்மையினர் ஆளுக்காள் சிறுபான்மையினக் கட்சிகளை அமைத்துக்கொண்டு பெரும்பாலானவை அரசுக்கு ஆதரவாகவும் சில எதிராகவும் இருப்பது தமது பிரதிநிதித்துவத்திதற்கு வேட்டாகவும் நியாயமான அரசியல் கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் மிகவும் பலவீனப்படுத்தப்படுகின்றது.
இதனால் யாவரும் விரும்புவது போல எல்லா இனங்களின் நலன் கருதியும் சமூக அரசியல் புரியக்கூடிய அரசியல் சிந்தனைமிக்கவரையும் அவர் ஆட்சியமைக்கக்கூடியவரா என்ற சரியான கணிப்பீட்டையும் மேற்கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் விதத்தில் தங்கள் ஆதரவை வழங்கலாம். ஆனால் அதற்கு முன் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து தங்களுடைய கொள்கையைத் தீர்க்கமாக முடிவு செய்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் கூட ஆளப்படுபவராக இருக்க எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஆள்வோராக இருக்க வேண்டுமானால் இலங்கை சிறுபான்மையினர் மேற்கூறிய அம்சங்களைக் கவனத்தில் கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்பது அவசியமானது.
0 Kommentare:
Kommentar veröffentlichen