உள்நாட்டு, வெளிநாட்டு எதிர் சக்திகள் ஒன்றிணைந்து சந்தர்ப்பவாத கூட்டணி - டியூ குணசேகர
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தத்தை கொண்டு வருவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம்.
அதன்போது ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளிக்கின்றனவா? பார்ப்போம் என்று அரசியலமைப்பு விவகார அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தேர்தல் ஒன்றின் வேட்புமனுவில் வெளிநாட்டு சக்தியின் அழுத்தங்கள் காணப்படுகின்றன. இதனை வாஷிங்டன் இணக்கப்பாட்டு வேட்புமனு என்றே நான் பார்க்கின்றேன். யுத்த காலத்தில் மூன்றாம் உலக நாடுகளே எமக்கு ஆதரவு வழங்கின என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது: உள்நாட்டில் உள்ள எதிர் சக்திகள் மற்றும் வெளிநாட்டு எதிர் சக்திகள் ஆகியவற்றின் துணையுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதே இவர்களின் நோக்கம். மிகவும் இக்கட்டான காலத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்றார்.
சபாநாயகரை நியமிக்க முடியாத மற்றும் பலமற்ற பாராளுமன்றம், சுனாமி அனர்த்தம், முப்பது வருட பயங்கரவாதம் போன்ற சவால்கள் எம்முன் காணப்பட்டன. ஜனாதிபதி அவற்றில் வெற்றி கண்டு நாட்டை மீட்டெடுத்தார். யுத்தத்தை நடத்தும்போது சர்வதேச மட்டத்திலிருந்து எந்தளவு அழுத்தங்கள் வந்தன என்று எங்களுக்கு தெரியும்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், வெளிநாட்டுத் தலைவர்கள் என பலர் யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், ஜனாதிபதி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. யுத்தத்தின் போது மூன்றாம் உலக நாடுகளே எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. மேற்குலக நாடுகள் எமக்கு ஒத்துழைக்கவில்லை.
எதிரணி வேட்பாளர் ஜனாதிபதியானால் என்ன நடக்கும்? பிரதமர் இருக்கமாட்டார், பாராளுமன்றம், அமைச்சரவை இருக்காது.
அதேநேரம் அவர் முப்படைகளின் தளபதியாகவும் இருப்பார். அனைத்து அதிகாரங்களும் பயன்படுத்தப்படும் நிலைமை ஏற்படும். தெற்காசியாவில் எமது நாட்டில் மட்டுமே இவ்வாறு இராணுவ அரசியல் இதுவரை இடம்பெறவில்லை.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தெரியாத ஒருவரை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். எமது நாட்டின் தேர்தலில் வெளிநாட்டு அழுத்தம் தலையிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
யுத்தம் நடைபெறும் போது ஒரு இலட்சம் படையினரை மேலும் இணைத்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி கேட்டுள்ளார். மேலும், தான் முப்படைகளின் கட்டளையிடும் தளபதியாக வரவேண்டும் என்றும் அவர் விரும்பியுள்ளார். இதன்மூலம் சில விடயங்களை நாங்கள் புரிந்துகொள்ள முடியும்.
அரசியல் அனுபவமில்லாதவர் ஆட்சி பீடம் ஏறீனால் பெரும் ஆபத்தானதாக அமையும் - ஜீ.எல்.பீரிஸ்
கட்சி அரசியலில் நேரடியாக சம்பந்தப்பட்டதாக கல்விமான்கள் ஜனவரி 26ஆம் திகதி முக்கியமானதும் தீர்க்கமானதுமான நாளாகும் என்று தெரிவித்து கட்சி அரசியலில் நேரடியாக குதிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் ஆட்சி பீடம் ஏறினால் அது நாட்டிற்கு பெரும் ஆபத்தானதாகவே அமையும் என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பொது வேட்பாளரிடம் கொள்கையில்லை, தைரியம் இல்லை, மற்றவர்களின் குரலாகவே பொதுவேட்பாளர் செயற்படுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. கொள்கை ரீதியில் வேறுபட்டவை. இந்நிலையில், கட்சி இயந்திரத்தை செயற்படுத்தவே முடியாது என்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளின் பிரதான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான தேர்தல் என்கிறார். அப்படியாயின் இது சர்வஜன வாக்கெடுப்பா?
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய அவர், 10 நாட்களுக்குப் பின்னர் அதிகாரமில்லாத ஜனாதிபதியாக இருக்க முடியாது என்கிறார். இது வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசமாகும். அவரின் அபிலாஷை என்ன? எதனை தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார்? அவர் மனத் தைரியம் இல்லாத நபராவார்.
அவருக்கென ஓர் சிந்தனை நோக்கம் இருக்க வேண்டும். 72 78ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து வில்லியம் கோபல்லாவை போல பெயரளவில் மட்டும் ஜனாதிபதியாக இருக்க முடியாது. சவால்களை வென்றெடுப்பதற்காக முழுமையாக மக்கள் ஆணையை கோரி நிற்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தனது குரலில் மற்றவரின் கொள்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்.
நாட்டை நிர்வகிக்கும் திறனை ஆட்சிப் பீடம் ஏறியதும் பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நிர்வாகம் செய்வதற்கு விசேட நிபுணத்துவம் பயிற்சி தேவை. தலைவராகிய பின்னர் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருந்தால் நாட்டிற்கு என்ன நடக்கும். நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த மொகமட் யுனுஸ் ஏழ்மைக்காக செயற்பட்டார். அவரிடம் அரசியல் அபிலாஷை இல்லை எனக் கூறி ஒரு வருடத்திற்குள் விலகிச் சென்று விட்டார்.
கட்சி இல்லாத ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகின்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் வைட் டைசன் 1945ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்துவிட்டு 1958ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொது மக்கள் கட்சியின் தலைவராக இருந்து போட்டியிட்டார். இடைப்பட்ட காலத்தில் அவர் பல்க லைக்கழக வேந்தராக கடமையாற்றியுள்ளார்.
பிரான்ஸில் கொன்ஸவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சால்ஸ்சிதோர் மற்றும் நிக்கலஸ் சாவோயிஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட்டனர். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து எதிர்காலப் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் அது மிகவும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும்.
நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் பாராளுமன்ற அனுமதியின்றி சிலவற்றை செய்ய முடியாது. நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அரசியல் கட்சிகள் பாலமாக செயற்படுகின்றன. கட்சி இயந்திரத்தின் மூலமாகவே பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
RSS Feed
Twitter



Samstag, Dezember 12, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen