Mittwoch, 30. Dezember 2009

ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் : தேர்தலில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?


கடந்த காலங்களில் தமிழர் தரப்பு கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, ஆட்சி ஏறும் எந்த சிங்கள ஆட்சியாளரும் தமிழருக்கு உரித்தான உரிமைகளை வழங்கி, தமிழரின் மரபு வழித்தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்பனவற்றை ஏற்று, தமிழருக்கு நிறைவான விடுதலையை பெற்றுத் தருவார்கள் என்றோ தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது.




ஆட்சிப் பீடம் யார் வந்தாலும் தமிழரின் அடிப்படை, அரசியல் விருப்புக்களை நிறைவேற்றப் போவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தமிழர் விடயத்தில் ஒரே கொள்கை உடையவர்கள். பேரினவாத அரசியல் சித்தாந்தங்களுக்குள் சிக்குண்டு கிடப்பவர்கள். இந்நிலையில் அரச தலைவர் தேர்தலில் வாக்குகளை வழங்கி, அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட்டு, அவர்களிடம் இருந்து நாம்தான் அடி உதையும் வாங்க வேண்டும்.



இப்படியான தேர்தலில் தமிழர் தரப்பு பேசாமல், ஆதரவு அளிக்காமல் இருந்து விடுவதான் நல்லது என நினைப்பவர்கள் இன்று கூட இருக்கின்றனர். இவர்களின் ஆதங்கம், உணர்வு பூர்வமான சிந்தனை ஒருவகையில் நியாயமானதுதான். ஆனால் இது தற்காலத்திற்கும், நடைமுறை அரசியல் ஒழுங்கிற்கும், மக்களின் அன்றாட, உடனடி அடிப்படைத் தேவைகளுக்கும் பொருத்தப்பாடு உடையதா என சிந்திக்கவும் அலசி ஆராய வேண்டியதுமான விடயமாகின்றது.



அரசியலுக்கும் எமக்கும் தொடர்பு வேண்டாம். அரசியலில் இருந்து விடுபட்டு இருப்பதே நடுநிலைமையும் பெருமை சேர்ப்பதும் என எண்ணிக்கொள்பவர்கள் கணிசமான அளவினர் இருக்குமளவிற்கு அரசியல்வாதிகள் பலரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மை. ஆட்சியாளர் புரிகின்ற சரி பிழைகளில் இருந்து பிறப்பெடுக்கின்ற ஒவ்வொரு தாக்கமும் பாதிப்பும் நாட்டில் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைகின்றன. ஆட்சியாளர் இழைக்கின்ற தவறுகளினால் அதிகம் அல்லற்படுவது அரசியல் வாதிகள் அல்லர். மக்கள்தான் என்பது இன்னொருவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ளும் விடயமல்ல. இது மக்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிப்படையான விடயம்.



சனநாயக அரசியலில், மக்கள் பிரதிநிதிகள் என்றும் தமது செயற்பாட்டிற்கு மக்களின் ஆதரவும் அனுமதியும் கிடைத்தது என்றும் கூறிக்கொள்ளும் ஆட்சியாளரின் ஒவ்வொரு நடவடிக்கையின் சாதக, பாதக விளைவுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது. இதனால் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்படுகின்றது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவர்களாக மக்கள் காணப்படுகின்றனர். தவறான தெரிவின் ஊடாக ஒரு கொடுமையான ஆட்சியாளரை உருவாக்கிவிட்டு, நாளை அவ் ஆட்சியாளரால் ஏற்படும் பாதிப்புக்கு பொறுப்புடையவர்கள் ஆட்சியாளர் என்பதற்கு அப்பால் ஒரு வகையில் ஒவ்வொருவரும் தார்மீக பொறுப்பாளிகளாக வேண்டிய நிலையும் ஏற்படலாம்.



எனவே அரசியல் - ஆட்சி என்பவற்றில் இருந்து எவரும் தொடர்பு அற்றவர்களாக, விலகி ஒதுங்கி இருக்கமுடியாது. மக்கள் - அரசியல் - ஆட்சியாளர் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட ஒன்றில் ஒன்று ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்துகின்றவையாகும். ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சியை தீர்மானிக்க வேண்டியவர்களாக ஏதோ ஒரு வகையில் அரசியலோடும் ஆட்சியாளரோடும் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் “ இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நாங்கள் சோறு திண்டால் சரி ” என்று எவரும் இருந்து விட முடியாது. அவ்வாறு இருப்போமாயின் நாட்டில் நடைபெறும் அநீதிகளுக்கும் ஊழல், மோசடிகளுக்கும் நாமும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஆட்சியாளரை தெரிவு செய்யும் போது ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்தித்து தமது வாக்கினை சரியாக பயன்படுத்த வேண்டிய தேவை எழுகின்றது.



ஓவ்வொருவரினதும் முடிவு சமூகத்தின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையதாக அமைகின்றது. இதன் அடிப்படையில் இம்முறை இலங்கையின் அரச தலைவர் தேர்தலில், யாரை ஆட்சியாளராக அனுமதிக்க வேண்டும் என்ற மிகப் பெரிய பொறுப்பு தமிழர் தரப்பிடம் விடப்படுகின்றது. இலங்கை தேர்தல் நடைமுறைகளின் படி தமிழர் தரப்பில் இருந்தோ அல்லது எந்த சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தோ ஒருவர் அரச தலைவர் ஆக வாய்ப்பு இல்லை. இது வெளிப்படை. இந்நிலையில் தமிழர் பெரும்பான்மையில் இருந்து வருகின்ற முதன்மை வேட்பாளர்களில் சார்பளவில் பொருத்தமான ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாய நிலையில் காணப்படுகின்றனர். ஏனெனில் தமிழர் விரும்பாவிட்டாலும் தேர்தலில் பங்கு கொள்ளா விட்டாலும் சிங்களவர் ஒருவர் இலங்கையின் அரச தவைவர் ஆவார் என்பதாலும் அவ்வாறு ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொண்டவரின் செயற்பாட்டின் விளைவு தமிழ் மக்களை விட்டு வைக்கப்போவதில்லை – அது தமிழரின் அன்றாட வாழ்வியல் தொடக்கம் இனத்தின் இருப்பு மற்றும் அரசியல் கோரிக்கைகள் வரை தாக்கத்தை உருவாக்கும் என்பதாலும் ஆட்சிக்கு வரும் சாத்தியப்பாடுடையவர்களில் சார்பளவில் பொருத்தமானவரை ஆட்சியாளராக அனுமதிக்க வேண்டிய அல்லது தெரிவு செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.



ஆனால் தமிழர் தரப்பு முடிவு இன ஒருமைப்பாட்டை, பலத்தை வெளிக்காட்டுவதாகவும் தமிழரின் ஒற்றுமையை சிதைக்க, பிளவுபடுத்த இடமளிக்காத வகையிலும் இருத்தல் வேண்டும். தமிழர் தரப்பால் இனம், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒருமைப்பாடுடைய முடிவுக்கு எல்லாத் தமிழரும் கட்டுப்பட்டு ஆக வேண்டிய தார்மீக கடப்பாடு, வரலாற்றுக் கடமை எம் முன் நிலைநிறுத்தப்படுகின்றது. எமது வாக்குப் பலம் கூறு போட, பிளவுபடுத்த இடமளிப்போமாயின் வரலாற்றில் நாம் செய்யும் தப்பாக அமையும். அண்மைக் காலங்களில் தமிழர் தரப்பு ஒன்றிணைந்து எதிரிக்கு புகட்டியிருக்க வேண்டிய, செய்திருக்க வேண்டிய கடமைகளில் இருந்து தவறியதன் விளைவை பெரும்பாலான தமிழரின் இன்றைய அவலநிலையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். நடந்தவை நடந்தவையாக இருக்க, இனத்தின் இருப்பையும் தேசியத்தையும் பாதுகாத்து கொள்ள இனி என்ன செய்ய வேண்டும் என ஒருமித்த சரியான தீர்மானத்தை எடுத்து செயல் ஆற்ற வேண்டும்.



காலத்தின் தேவை கருதி தமிழர் தரப்பு தமது போராட்டத்தின் அளவு பரிமாணங்களையும் வடிவங்களையும் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வேளையில், அரசியல் வடிவில் எமக்கு முன் எழுந்துள்ள சவாலை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுத களங்கள் ஓய்வுக்கு வந்து அரசியல் என்னும் களம் முதன்மை பெறுகின்றது. தமிழரை ஏமாற்றி வெறும் பகடைக்காய்களாக பயன்படுத்தி விடலாம் என சிங்களத் தலைமைகள் எண்ணிக்கொள்கின்றன. தமிழர் வாக்குகளையும் தமதாக்கி மீண்டும் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்சியாளர் முயற்சி செய்கின்றனர். இவ்வகையில் தேர்தலில் வெற்றீட்டுவார்கள் எனின், தமிழரும் தமக்கு பின்னால்தான் உள்ளனர். தங்களுக்கு வேண்டிய ஆதரவை அனுமதியை தமிழ் மக்களும் தந்துவிட்டனர். முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டன. தமிழருக்கு பிரச்சினை என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. நாட்டில் ஒற்றுமையை சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம் என்றெல்லாம் தமக்கு ஏற்றவாறு கூறி தமிழரையும் உலகையும் ஏமாற்றி நல்லபிள்ளை வேடம் போட்டுவிடலாம் என இன்றைய ஆட்சியாளர் கனவு காண்கின்றன். தமிழருக்கு இழைக்கின்ற அநீதிகளையும் செய்த பேரழிவுகளையும் மூடிமறைக்கவும் தமிழரின் அரசியல் விருப்புக்களையும் கோரிக்கைகளையும் நசுக்கி விடவும் திட்டமிடுகின்றனர். நாட்டை குட்டிச்சுவராக்கி குடும்ப ஆட்சி செய்யும் ஆட்சியாளரிடம் மீண்டும் ஆட்சி, அதிகாரம் கிடைக்கப்பெற்றால் தமிழர் இருப்பிற்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் என்ன நடக்கும். ஏன் முழு நாடும் எவ்வளவு தூரம் சின்னா பின்னமாகும். சீரழிக்கப்படும் என்பது நியாயமாக சிந்திக்கின்ற எல்லோரும் அறிந்தவையே. இவ்வளவும் தெரிந்து கொண்டும் மீண்டும் இந்நிலைமையை, இவ் ஆட்சியாளரை தொடர விடுவோமாயின் இது போன்ற முட்டாள்தனமான மிகப்பெரிய தப்பு வேறு எதுவுமில்லை.



மகிந்த சகோதரர்களின் கபட வேடத்தில், தேர்தல் நாடகத்தில், சதிவலையில் இனத்தைப் பற்றி சிந்திக்கின்ற தன்மானமுள்ள எந்த தமிழரும் வீழ்ந்து விடமாட்டார்கள் - வீழ்ந்து விடக்கூடாது. தமிழர் பகுதியில், வடக்கு - கிழக்கில் வீதிகளை புனரமைக்கின்றோம். கோயில்களுக்கு நிதி வழங்கின்றோம். பாடசாலைகளுக்கு இலவச புத்தகங்களை வழங்குகின்றோம். என நாளேடுகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் விளம்பரம் செய்து பெரிதாக கொக்கரித்துக் கொள்ளும் இன்றைய ஆட்சியாளரும் அவர்களின் அடிவருடிகளும் தமிழருக்கு யாரும் செய்யாததை பெரிதாக செய்பவர்கள் போன்றும் தமிழரின் விருப்புக்களை புரிந்து கொண்டு நடக்கின்ற உத்தமர் போன்றும் வேடம் போடுகின்றனர். மிக அண்மையில் இவர்கள் செய்திருப்பது அரசாங்கம் என்ற அடிப்படையில் நிறைவேற்ற வேண்டிய அபிவிருத்தி பணிகளில் மிகச்சொற்பமானவையாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி ஏறிய காலத்தில் இருந்தே இவற்றை செய்திருக்க வேண்டியதுதானே என ஒருவர் நியாயமாக வினா எழுப்பினால் இவர்களால் முறையான பதில் கூறமுடியுமா? அத்தோடு அபிவிருத்தி என்பது வேறு இனத்தின் அரசியல் கோரிக்கை என்பது வேறு. அண்மையில் அபிவிருத்தி சார்ந்த சிலவற்றை செய்து விட்டு தமிழரின் கோரிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றோம் என்ற மாய தோற்றப்பாட்டை காட்ட முனைகின்றனர். இவர்கள் செய்திருக்கும் சிறுஅபிவிருத்தி வேலைகளுக்கான காரணம் தமிழர் மீதுள்ள அக்கறையல்ல அனைத்துலகின் அழுத்தங்களை சமாளிப்பதற்கான தந்திரோபாயம் என்பதே உண்மை. கூட இருந்தவனுக்கே வீடு கொடுக்க மறுத்தவர்கள் தமிழருக்கு உரிமைகளைத் தருவார்களா?



அதேவேளை, அபிவிருத்தி சார்ந்த சிலவற்றை செய்து விட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளும் மகிந்தவின் கோர ஆட்சியினால் ஏற்பட்ட பேரழிவுகளை எந்தத் தமிழனும் மறந்து விடமாட்டான். மனித நேயமற்ற முறையில் போர் விதிகளுக்கு மாறாக கொத்துக் குண்டுகளையும் பல்குழல் பீரங்கி எறிபடைகளையும் வீசி நாளும் பல்லாயிரக்கணக்கில் மக்களை துடிதுடிக்க கொன்றதையும், ஆயிரக்கணக்கில் அங்கவீனர் ஆக்கியதையும், ஆயிரக்கணக்கில் ஆட்கள் காணாமல் போனதையும், இளையோர் மற்றும் முன்னாள் போராளிகள் சிறை பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்படுவதையும் தெரிந்து கொண்ட எந்தவொரு மானமுள்ள இனத்திற்காக சிந்திக்கின்ற தமிழன், இவற்றுக்கு காரணமான இன்றைய ஆட்சியாளருக்கு - இனத்தின் எதிரிக்கு கைகொடுத்து கைகோர்த்து நிற்கமாட்டான். இன்று இனத்தின் முதல் பொது எதிரியாக உருவெடுத்திருக்கும் இன்றைய ஆட்சியாளருக்கு மக்களால் வழங்கக் கூடிய தீர்ப்பான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஏற்ற களமாக இத்தேர்தல் களத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே விடுதலை உணர்வும் இனப்பற்றும் மிக்க ஒவ்வொருவரினதும் உள்ளத்துடிப்பாகும்.



மனிதநேயமற்ற முறையில் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள். காட்டுமிராண்டித்தனமாக அடாவடித்தனங்களை அரங்கேற்றியவர்கள். அவற்றையெல்லாம் மூடி மறைக்கவும் தேர்தல் நாடகங்களில் ஒன்றாகவும் வடக்கு – கிழக்கில் இருக்கின்ற கொடுமையான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை செய்துவிட்டு கிழக்கில் உதயமென்றும் வடக்கில் வசந்தம் என்னும் வார்த்தைகளால் அலங்கரித்து தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்றி விட நினைக்கும் இவர்களின் செயற்பாடு, எம்மைத் துரத்தி விட்டு எமது வீட்டுக்குள் குடியிருக்கும் அயலவன் - எமது வீடு, வளவில் உள்ள வளங்களைச் சுரண்டுபவன், மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்குவதற்கு இடம் தருகின்றேன். காணி, வளவை வந்து பார்க்க அனுமதி தருகின்றேன் என கூறுவதற்கு ஒப்பானதாகும்.



இதே வேளை, இனத்தை கூறுபோட்டு, காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் அடிவருடிகள் தொடர்பாக தமிழர்கள் விழிப்பாகவும் சரியான நிலைப்பாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். முன்னரே இருந்த இரண்டகர் ஐவரோடு தொடரும் பட்டியலில் புதிதாக இன்னும் சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் சேர்ந்து கொண்டார்கள். படை வலிமையை தோற்கடித்ததை விட இலகுவாகவே எஞ்சிய அரசியல் பலத்தை, இன ஒற்றுமைமை தோற்கடிக்கலாம் - கூறுபோடலாம் என ஆளும் தரப்பு கருதுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் மக்களின் நலனுக்காக செயற்படுகின்றோம் என கூறிக்கொள்ளும் சுயநலன் மிக்க, இனம் பற்றிய சிந்தனையற்ற, தம்மை வளர்ப்பதில் குறியாகவுள்ள குறுகிய நோக்கமுடைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தற்போதைய ஆட்சியாளரை வலுப்படுத்துகின்ற அபாய நிலையை தோற்றுவித்துள்ளனர்.



எஞ்சி இருக்கும் தமிழர் பலத்தை கூறு போடும் வகையிலும் இனத்தை விற்று பிழைக்கும் வகையிலும் நடந்து கொள்ளும் இவர்கள், தமிழரின் படை பலம் உயிர்ப்போடு இருந்த வேளை, தமிழ் தேசியத்திற்காகவும் இனத்திற்காகவும் உழைப்பவர் போல காட்டிக் கொண்டவர்கள். இன்று இனத்தைக் காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படிப் பட்ட இவர்கள், உயிர்ப்போடு இருக்கும் வரை இருந்து விட்டு இறப்போடு கலையும் உண்ணி போன்றவர்கள். ஏனைய அடிவருடிகள் போலவே இவர்களும் மக்கள் நலன் என அதிகம் அலட்டிக் கொள்வது அவர்களின் சுயநலன் சார்ந்தது தவிர வேறு ஒன்றுமில்லை. கோடரிக் காம்புகளின் தோற்றம் தமிழருக்கு புதியவையும் அல்ல. காலம் காலமாக அவ்வப்போது இருந்து வந்தது ஒன்றே. இந்நிலையில் இவர்கள் பற்றி கவலைப்பட்டு காலத்தை போக்காது எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை இப்போதே ஒவ்வொரு தமிழரும் தீர்மானித்து செயலாற்ற வேண்டும்.



நடைபெற இருக்கும் அரச தலைவருக்கான தேர்தலில் தென்னிலங்கையில் போர் வெற்றியை முன் நிறுத்தி களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளர்கள் இருவரிடையேயும் பலத்த கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அடுத்த அரச தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழரின் வாக்குகளிலேயே தங்கியிருக்கின்றது. இதனால் முதன்மை வேட்பாளர் இருவரும் தமிழரின் வாக்குகளை தம்பக்கம் கவர்ந்து கொள்ள பல வியூகங்களை வகுக்கின்றனர்.



இந்நிலையில் இன்றைய ஆட்சியாளர் மகிந்தவும் அவர் சார்பானவர்களும் முடிந்த அளவு தமிழர் வாக்குகளை தமதாக்கி கொள்வது அல்லது தமிழர் வாக்குகள் தமக்கு கிடைக்காவிட்டாலும் அவை முதன்மை எதிர் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு சேரவிடாது தடுப்பது எனும் நிலைப்பாட்டில் திடமாகவுள்ளனர். இதன் அடிப்படையில் தமிழர் வாக்குகள் எல்லாம் சரத் பொன்சேகாவுக்கு விழுந்து விடுமோ என்ற ஐயத்தில்தான், அதனை தடுத்து தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் நோக்கிலேயே சுயேட்சையாக சிவாஜிலிங்கம் நிறுத்தப்பட்டார் - இதன் பின்னணியில் தற்போதைய இலங்கை அரசாங்கமும் இந்தியாவும் இருப்பதாகவும் அவர் விலை போனவர் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



தமிழருக்கான முறையான தீர்வை பற்றி குறிப்பிடாத எந்த முதன்மை வேட்பாளருக்கும் 50 சதவீத வாக்குகள் சென்றடைவதை தடுக்கும் வகையில் போட்டியிடுவதாக கூறி தமிழ் உணர்வாளர் போல காட்ட முனையும் சிவாஜிலிங்கத்தின் உள்ளார்ந்த நோக்கம் எதுவாக இருந்தாலும் இவரின் நிலைப்பாடு தமிழரை பலவீனப்படுத்தி பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு சார்பானது. ஒர் பொது எதிரியை தோற்கடிப்பதற்காக, காலத்தின் கடமையை நிறைவேற்றுவதற்காக, நடைமுறைக்கு ஏற்ற வகையில் தமிழர் தரப்பு ஒருமித்து எடுக்க வேண்டிய முடிவால் சிவாஜிலிங்கம் ஐயாவையும் புறம்தள்ளவேண்டியது என்பது கவலை தருகின்ற ஆனால் தவிர்க்கமுடியாததொன்றாகும். இன்றைய ஆட்சியாளருக்கு முண்டு கொடுக்கப் போவதில்லை என்றால், தமிழரை கூறுபோடும் சக்திகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றால், கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய ஆட்சியாளரை மாற்றியமைக்க நினைத்தால் சிவாஜிலிங்கம் இதனை விளங்கி விலகிக் கொள்வது அவருக்கும் அனைவருக்கும் நல்லது.



குடும்பத்திற்கு சொத்துக்களை பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் - நாட்டைச் சூறையாடி விட்டார்கள் - நாடோ சகோதரரின் இரும்பு பிடிக்குள் சிக்கி தவிக்கின்றது இந்நிலையை மாற்றியமைப்பதற்கு, நாட்டை சீரழிப்பவரை வீட்டுக்கு அனுப்ப, ஒரு மீட்பர் வரமாட்டாரா என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில், இன்றைய சூழ்நிலையில் இதற்கு பொருத்தமானவர் சரத் பொன்சேகா என கருதுகின்றனர். தற்போதைய ஆட்சியாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் அன்றாடம் அதிகமாக அவதிப்பட்டு கொண்டிருக்கும் தமிழ்மக்கள் ஒரு புறமிருக்க வாழ்வாதார பொருளாதார சிக்கல்களாலும் கட்டுக்கடங்காது பெருகிவிட்ட ஊழல், மோசடிகளாலும் இன வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கையில் வாழ்கின்ற அனைவரும் அல்லற்பட்டு அவதிப்படுகின்றனர். இவற்றில் இருந்து விடுபட்டுக் கொள்ள, ஆட்சிமாற்றத்தின் தேவையை உணர்ந்த இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் இத் தேர்தலை பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்பப்படுகின்றது.



போரை முடித்த – பயங்கரவாதத்தை ஒழித்த நாயகன் என சிங்கள மக்களிடையே தம்பட்டம் போடும் தற்போதைய ஆட்சியாளர் அதனை காப்பாக வைத்து சிங்கள மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி விடலாம் என கருதும் நிலையில் இது தொடர்ந்தும் வாழ்வாதார- பொருளாதார சிக்கல்களாலும் தொடர்பு வறுமையாலும் வாடிக்கொண்டிருக்கும் மக்களிடையே எவ்வளவு தூரம் எடுபடும் என்பது ஐயமானதே. சிங்கள மக்களிடையே ஆட்சியாளர் தொடர்பாக தோன்றியிருக்கும் எதிர் அதிர்வலைகளினால் ஆட்சியாளரின் வேடம் அடிபட்டு போகும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறாக பல்வேறுபட்ட காரணங்களுக்காக இலங்கையில் ஒவ்வொருவருக்கும் ஆட்சிமாற்றம் அவசியமாகின்ற, தேவைப்படுகின்ற நிலையில் தமிழர் தரப்பு என்ற வகையிலும் இவ் ஆட்சியாளரை மாற்றி அமைத்து ஆக வேண்டிய கடப்பாட்டில் தமிழர்கள் காணப்படுகின்றனர்.



ஒர் ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே ஆட்சியாளர் செய்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மோசடிகள், ஊழல்கள், உள்வீட்டு இரகசியங்கள் சிறிதளவு ஏனும் வெளிவர வாய்ப்பு இருக்கின்றது. கோரப்பிடியில் இருந்து விடுபட அல்லது கோரப்பிடியின் தளர்வுக்காவது தமிழர்களுக்கு உடனடியான ஆட்சி மாற்றம் வேண்டப்படுகின்றது. தமிழரின் மாறுபட்ட முடிவுகளால் தற்போதைய ஆட்சியாளர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமாயின் தமிழர்கள் கொள்கை அற்றவர்கள் வெறும் ஏமாளிகள் என்னும் எதிரியின் எண்ணத்தை வலுப்படுத்தும் என்பதோடு தமிழரின் தனித்துவத்தை இருப்பை கேள்விக்குறியாக்கும்.



இதே வேளை பெரும்பாலான இலங்கையருக்குமே ஆட்சி மாற்றம் வேண்டப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பாக பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் புதிய திருப்பம் ஏற்பட வேண்டும் என கூடிய கவனம் செலுத்துகின்றன. இலங்கையில் ஒவ்வொருவரும் உலக நடைமுறை ஒழுங்குக்கு அமையவும் நாட்டில் நிலவும் மோசமான சீர்கேடு, சீரழிவுகளை சீர்செய்யவும் ஆட்சி மாற்றத்திற்காக, சாத்தியமான, சார்பளவில் பொருத்தமானவராக உள்ள சரத் பொனசேகாவை தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.



இனப்பேரழிவை நிகழ்த்தியவனுக்கு, சொத்துகளை சூறையாடியவனுக்கு இனத்தை பிளவுபடுத்தி பிரித்தாள நினைப்பவனுக்கு பாடம் புகட்டவேண்டிய தமிழர்கள், தமிழன் - சிந்தனையுள்ள மனிதன் என்ற நிலைப்பாட்டில் ஆவது இனத்தின் பொது எதிரியை காலத்தின் கட்டாயத்திற்காக தோற்கடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை ஏற்று நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.



தற்போதைய ஆட்சியாளரை ஆதாரித்து அனுமதி கொடுக்க முனைவர்களின் செயற்பாடு தாயை, தாயகத்தை சீரழித்தனுக்கு மாலை போட்டு வரவேற்பதற்கு சமனானதாகும். அவர்கள் பெற்ற தாயை விற்று பிழைப்பவர்கள். எனவே வரலாற்றுக் கடமையாக காலத்தின் கட்டாயமாகவுள்ள, உடனடித் தேவையாக உள்ள ஆட்சி மாற்றத்தை கொண்டுவர, இனத்தின் முதல் பெரும் எதிரியை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டியவர்களாக, விரும்பியோ விரும்பாமலோ சரத் பொன்சேகாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புடையவர்களாக தமிழர்கள் காணப்படுகின்றனர்.



தேர்தல் ஊடாக இன்றைய ஆட்சியாளருக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் தமிழர்கள் கொடுக்கவிருக்கும் தகுந்த பதிலடியானது தமிழர்களை சீரழிக்க துணைபோன-சிதைத்து சீரழித்த பிறநாட்டு சக்திகளுக்கும் குறிப்பாக அண்டைய நாடுகளுக்கும்; தகுந்த படிப்பினையாக இருக்கும். தமிழருக்கு உள்ள தார்மீக பொறுப்பை, கடமையை தவறவிடாது, ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இடமளியாது, தமிழர் பலத்தை - தேசிய ஒருமைபாட்டை அந்நிய சக்திகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையிலும் தேர்தலை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.



இன்று இலங்கை அரசியலை, ஆட்சியாளரை தீர்மானிப்பவர்கள் தமிழர்கள் என்பதையும் ஆட்சியாளரின் அரசியல் இருப்பும் கூட தமிழர் கைகளில்தான் உள்ளது என்பதையும் சிங்களத் தலைமைகளுக்கு உணர்த்த வேண்டியவர்களாக தமிழர்கள் காணப்படுகின்றனர். இது எந்த சிங்கள ஆட்சியாளருக்கும் பேரடியாகவும் தலையிடியாகவும் இருக்கும் என்பது மட்டுமல்ல குறைந்த அளவு அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை வரையறை செய்யவும் தமிழரின் பேரம் பேசும் அரசியல் பலத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும். தமிழரை பலிக்கடாவாக்கி, பலவீனப்படுத்தி பிரித்தாள நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழர் ஒருமித்து சொல்லவிருக்கும் செய்தி, வேண்டியதெல்லாம் ஆடிவிட்டு, நினைத்ததெல்லாம் செய்து விட்டு தமிழரை இலகுவில் ஏமாற்றி விடலாம் என நினைப்பவர்களுக்கு தகுந்த பாடமாக அமையும் என்பது மட்டுமல்ல வரவிருக்கும் புதிய ஆட்சியாளருக்கு முன்கூட்டியே விடப்படும் எச்சரிக்கையாகவும் இருக்கும்.



நடைபெறவிருக்கும் இலங்கை அரச தலைவருக்கான தேர்தலில் பொது எதிரிக்கு, இன்றைய ஆட்சியாளருக்கு தமிழர் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பது தன்மானமிக்க தமிழரின் உயிர்த் தாகம் மட்டுமல்ல தமிழர் தாயகத்துகாக, இன விடுதலைக்காக போராடி உயிர் விட்ட அனைவருக்கும் தமிழர் என்ற அடிப்படையில் செய்யும் மிகக்குறைந்த அளவிலான நன்றி தெரிவிப்பாகவும் அமையும்.



தாயகத்திலிருந்து நிலவன்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen