Freitag, 25. Dezember 2009

கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

பெரியோர்களே,தாய்மார்களே! கூடி நிற்கும் பொதுமக்களே! வரலாற்றுச்சிறப்புமிக்க நாடகத்தை காண வந்திருக்கும் மகாஜனங்களே! இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற காவியம் இதோ ஆரம்பமாகவிருக்கிறது! என்.ராமாயணம்! என் ஃபார் நாரதர்! அதாவது நாரதர் ராமாயணம்! அதாகப்பட்டது என்னவெனில், பன்னெடுங்காலாமாய் பரந்து விரிந்த ஆரியப் பண்பாட்டை சீரும் சிறப்புமாய் விந்திய மலைக்கு அப்பால் வளர்த்தெடுத்த பெருமகனாரும், சாட்சாத் மகா விஷ்ணுவின் மவுண்ட்ரோடு கொ.ப.செ-வாக கொடி நாட்டிய கோமானும், நல்லதை தீயதாகவும், தீயதை நல்லதாகவும் மாற்றும் மகா வல்லமை பொருந்திய முனிவரும், ஒரே நேரத்தில் ஒன்பது குரலில் பேசும் பேராற்றல் படைத்த சித்தரும், பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பத்திரிக்கைப் பெருமானும், தமது கேடு கெட்ட நோக்கங்களுக்கு பரிசுத்தமான சொற்களையே பதமாய் பயன்படுத்தும் மனிதருள் மாணிக்கமும், தி பொந்து நாளேட்டின் ஆசிரியப் பெருந்தகையுமான நாரத மகாமுனி வருகிறார், வருகிறார்!பராக்!பராக்!


காட்சி 1

இடம்: தி பொந்து அலுவலகம், சென்னை

பாத்திரங்கள்: நாரதர், நிருபர், உதவியாளர்

நிருபர்: சார், ஒரு முக்கியமான விசயம். கடந்த ஆறு மாசத்துல 20 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டிருக்காங்க. நேத்திக்கு மூணு பேர சுட்டுக் கொன்னுருக்காங்க! இதப் பத்தி ஒரு ஸ்டோரி போடணும் சார்!

நாரதர்: (சிரித்தபடி) ஒகோ அதுக்கென்ன, பேஷா போட்டுரலாமே, அதுக்கு முன்னாடி கடந்த ஆறு மாசமா அந்த மீனவர்கள்லாம் எத்தனை மீன்களை கொன்றுக்கா தெரியுமோ?

நிருபர்: (அதிர்ச்சியாகி) சார், மீனும் மனுசனும் ஒண்ணா சார்? நீங்க வெஜிடேரியனா இருக்கலாம், அதுக்காக இப்டியா சார்?

நாரதர்: (மெதுவாக எழுந்து நடந்து நிருபரின் தோளைத் தட்டுகிறார்) தம்பி, நோக்கு விசயமே புரியலியே, நான் வெஜிடேரியன்னு யார் சொன்னா? சிவபெருமான் தன் தொண்டைல நஞ்ச நிறுத்திண்ட மாதிரி நிதம் ரத்தமும், சதையுமான உண்மையைத்தான் நான் விழுங்கிண்டிருக்கேண்டா அம்பி! இதோ பார்ரா அசமஞ்சம், சில சமயம் மனுஷாள விட மீன் முக்கியம், சில சமயம் யானைகள விட மனுஷா முக்கியம்! எல்லாம் ஒரு கணக்குதான்! கணக்க சரி பண்ணணும்னா, சில சமயம் கணக்கையே மாத்த வேண்டியிருக்கும்! நம்ம முன்னோர்கள்லாம் இப்படி கணக்குப்பிள்ளைகளா கணக்கு பாத்து வளந்தவாதான், தெரிஞ்சுக்கோ!

நிருபர்: (பணிவாக) ஆனா, உண்மைன்னு ஒண்ணு இருக்கே சார்! ஜனங்களுக்கு உண்மைய சொல்றதுக்குதானே நீங்க இவ்ளோ பெரிய நியூஸ் பேப்பர நடத்துறீங்க?

நாரதர்: (சிரிக்கிறார்) ஹா..ஹா..கண்ணா, உன் வேலைய நீ சரியா புரிஞ்சுக்கல, ஒன்ன எதுக்கு சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சிருக்கிறோம்? உண்மையத் தெரிஞ்சுக்கிறதுக்குத்தான். ஆனா, உண்மைய எல்லார்கிட்டயும், சொல்லணும், பத்திரிக்கைல எழுதணும்கிறதெல்லாம் கிடையாது. அதெல்லாம் இங்க, (தொண்டையை தொட்டுக் காட்டுகிறார்) என் தொண்டைல பாதுகாப்பா இருக்கும்.. (இருக்கைக்கு சென்று மீண்டும் அமர்ந்து கொண்டே) ம்… சரி விடு, நீ சின்ன பையன், போகப் போக புரியும், இந்த மாசம் நீ சம்பளம் வாங்கிட்டியோ?

நிருபர்: (கசப்போடு)..ம்.. வாங்கிட்டேன் சார்!

நாரதர்: சரி, இப்போ டெஸ்குக்கு போ! சாயங்காலம் நாரத கான சபாவுல நம்ம பரளி ஒரு எக்செலண்ட் ஸ்பீச் குடுக்கப் போறார், அதப் போயி கவர் பண்ணிடு! ஆத்துக்காரியையும் அழைச்சிண்டு போ, நல்ல ப்ரோக்ராம்! நானும் வருவேன்!

நிருபர்: (கசப்போடு)சரி சார்..

(நிருபர் நகர்ந்து செல்கிறார். இதனூடாக உதவியாளர் மொபைல் போனோடு ஓடி வருகிறார்)

உதவியாளர்: சார், சார், பிரைம் மினிஸ்டர் ஆபிஸ்லருந்து போன்!

நாரதர்: (போனை வாங்கி காதில் வைத்து பதட்டமாக எழுந்து நிற்கிறார். முகத்தில் வழிசலோடு) , குட் ஆஃப்டெர்னூன் சார்! சாரி, குட்மார்னிங் சார்! சொல்லுங்க சார்! (சிறு இடைவெளி) ராமாயணம்தானே, மனப்பாடமாத் தெரியும் சார்! என்னது, சீதா பிராட்டிய அனுமார் கடத்திட்டு போனார்னு நியூஸ் போடணுமா? ஒகே, ஓகே, கோர்டுவேர்டு புரியுது சார்! நீங்க சொல்லவே வேண்டாம் சார், பேஷா செஞ்சிடலாம்! நேத்திக்கு போராளின்னு சொன்னேள், இன்னிக்கு தீவிரவாதின்னு எழுதனும்கறேள். கரும்பு தின்ன கூலியா? (சிறு இடைவெளி) சார், இலங்கை அரசர் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவா! இவர் மாத்திரமல்ல, இவருக்கு முன்னாடி இருந்த ராணியும் நம்ம மேல ரொம்ப பிரியமா இருப்பா! இந்த மாதிரி நேரத்துல அவாளுக்கு நாம உதவலன்னா வேற யார் உதவுவா? நம்ம பத்திரிக்கை பத்தி நானே சொல்லப்படாது.. நந்திகிராம், சிங்கூர் விசயத்துலயே பாத்திருப்பேள். சந்தேகமே வராத அளவுக்கு உல்டாவா எழுதிருவோம் சார். அந்த அளவுக்கு ஒரு தொழில் சுத்தம். ஒரு சின்ன விண்ணப்பம், சிறிலங்கா ரத்னா விருதெல்லாம் குடுத்து அவா பெருமைப்படுத்தினா. நீங்க நம்மவா, நான் சொல்லணும் இல்ல, நீங்களே செய்வேள், இருந்தாலும் ஒரு பத்ம பூஷணும், கொஞ்சம் விளம்பரங்களும் கொடுத்தேள்னா அடியேன் மனசு சந்தோசப்படும்.

(சிறு இடைவெளி) ஒகே சார், ஒகே ஒகே, நாளைக்கு காலைல பாருங்கோ, ஜமாய்ச்சுடலாம்! (சிரித்தபடியே போனை வைக்கிறார்)

(உதவியாளரை நோக்கி) நம்ம பரணீதரன் ரொட்டிகிட்ட மேட்டர சொல்லிடு, மேட்டர் நல்லா ஸ்டிராங்கா இருக்கணும்!

உதவியாளர்: சரி சார். (வெளியேறுகிறார்)

காட்சி 2

இடம்: மவுண்ட்ரோடு, சென்னை

பாத்திரங்கள்: செய்தித்தாள் விற்கும் சிறுவன், பொதுமக்கள் மூவர்

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: சூடான செய்தி, சூடான செய்தி! சீதாபிராட்டியை அனுமான் கடத்தினார், சீதாபிராட்டியை அனுமான் கடத்தினார்!

(மூவரும் செய்தித்தாள்களை வாங்கி வாசிக்கத் துவங்குகிறார்கள்)

முதலாமவர்: சீதாபிராட்டியை அனுமான் கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், இலங்கை ராணுவம் சீதா பிராட்டியை மீட்கும் முயற்சியில் அனுமனையும், அவரது சக தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்துப் போரிட்டு வருகிறது.

இரண்டாமவர்: கடுமையான மீட்பு நடவடிக்கையில் பலர் உயிரிழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றும், எப்பாடுபட்டேனும் அனுமனின் தீவிரவாதத்திற்கு முடிவு கட்டியே தீர வேண்டுமென கண்துஞ்சாது இலங்கை ராணுவம் போராடி வருகிறது.

மூன்றாமவர்: (மற்றவர்களை நோக்கி) இங்க பாருங்க! இலங்கை அரசரிடம் பொந்துவின் ஆசிரியர் நாரதர் எடுத்த சிறப்பு பேட்டி வெளி வந்துருக்கு! நாரதர் எல்லா ஆதாரங்களையும் தன் கண்ணாலேயே பாத்தாராம்! அனுமன்தான் குற்றவாளியாம்!

(முதலாமவர் செய்தித்தாள் விற்கும் சிறுவனின் சட்டையைப் பிடிக்கிறார்)

முதலாமவர்: டாய், இது என்ன பேப்பர்டா இது? சீதாவ அனுமார் கடத்திகிட்டு போனாரா? அயோக்கியப் பயல்களா, பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்ல? இலங்கை அரசாங்கமும், இந்திய உளவுத்துறையும் சேந்துகிட்டு அனுமான குற்றவாளியாக்குறிங்களா?

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: (திமிறியபடி) சார், சார், இன்னா சார் இது அநியாயமா இருக்கு? என்ன இன்னாத்துக்கு அடிக்க வர்றீங்க? ஒனக்கு மெய்யாலுமே அடிக்கணும்னா, பொந்து எடிட்டரப் போயி அடி! நான் இன்னா தப்பு பண்ணேன்?

இரண்டாமவர்: (விலக்கி விட்டு) அவன் சொல்றதும் சரிதான். அந்த பொந்து எடிட்டர நேரடியா கவனிப்போம். வாங்க போவோம்!

(மூவரும் முழக்கமிட்டவாறு நடக்கத் துவங்குகின்றனர்.)

மூவரும்: மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே! இரத்தம் படிநத இனவெறியை பொய்களால் குளிப்பாட்டாதே! மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே!

காட்சி 3

இடம்: தி பொந்து அலுவலகம், சென்னை

பாத்திரங்கள்: நாரதர், பொதுமக்கள் மூவர், கூசாமி, காவல்துறை உயர் அதிகாரி, காவல்துறை துணை அதிகாரி,காவலர்கள்,செய்தித்தாள் விற்கும் சிறுவன்

(மூவரும் முழக்கமிட்டவாறு உள்ளே வருகின்றனர்.)

மூவரும்: பொந்து ஒழிக! பொந்து ஒழிக! பொய் சொல்லும் பொந்துவே, மறைக்காதே, மறைக்காதே, சிங்கள இனவெறிப் பாசிசத்தை மறைக்காதே, மறைக்காதே! இரத்தம் படித்த இனவெறியை பொய்களால் குளிப்பாட்டாதே!

(நாரதர் இருக்கையிலிருந்து எழுந்து ஒளிய முயல்கிறார். அவரை மூவரும் பிடிக்கின்றனர். அவர் தன்னை விலக்கிக் கொண்டவாறு)

நாரதர்: இருங்க, இருங்க, இருங்க! என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க? பேச்சு பேச்சாதான் இருக்கணும்!

முதலாமவர்: நீயும் ஒன் பேப்பரும்தாண்டா பிரச்சினை! நீ தினமும் எழுதுற பொய்கள படிச்சி படிச்சி வெறுப்பாயிட்டம்டா!

இரண்டாமவர்: ஒன்னோட பேப்பர் இலங்கைல நடக்குற இனப்படுகொலைய ஆதரிக்குதுடா!

மூன்றாமவர்: நீ சிங்கள அரசுக்கு வேலை செய்ற இந்திய ஏஜெண்டுடா!

நாரதர்: இவ்ளோதானா, நான் என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேன்! இதோ பாருங்கோ! இது தொழில் பண்ற இடம்! இப்படி சத்தம் போட்டா நன்னாவா இருக்கு? நீங்க ஏன் பொந்துவ சீரியசா எடுத்துக்குறேள்? ஓப்பனா சொல்லட்டுமா, மூணு மணி நேர சினிமா மாதிரி, இது ஒரு டைம் பாஸ், அவ்ளோதான். உண்மை மட்டும்தான் பேசணும்னா பொழைக்க முடியுமோ?

முதலாமவர்: ஒனக்கு சினிமாக்காரனே பரவா இல்லடா. அவன் சொல்றதாவது பொய்ன்னு எல்லாருக்கும் தெரியும். நீதான பொய்ய உண்மைன்னு அடிச்சி சொல்றவன்.

நாரதர்: என்னண்ணா நீங்க, திரும்ப திரும்ப பொய், பொய்ங்கறேள். இதோ பாருங்கோ, அனுமன் சீதைய கடத்தினதா நான் என் கண்ணால பாத்தேன். எல்லா ஆதாரமும் இருக்கு.

இரண்டாமவர்: எங்க ஆதாரத்த காட்டு, பாப்போம்!

நாரதர்: (தடுமாற்றத்துடன்) அது… அது வந்து.. இலங்கை அரசர்கிட்ட இருக்கு! அவர் கண்ணாலேயே பாத்திருக்காரு.

முதலாமவர்: டேய் கேப்மாறி, முதல்ல நீ ஒன் கண்ணால பாத்தேன்னு சொன்ன, இப்ப அவர் கண்ணால பாத்தாருங்குற? இவன.. ஒதைச்சாதான் சரிப்படுவான்!

(எல்லோரும் அடிக்க கை ஓங்குகிறார்கள்)

நாரதர்: (பயத்துடன்) இருங்கோ, இருங்கோ, நீங்க தப்பா புரிஞ்சிண்டேள்! நான் என்ன சொல்ல வர்றேன்னா, இலங்கை அதிபரும் நானும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, அவரு பாத்தா நான் பாத்த மாதிரி, ஈருடல், ஓருயிர்ன்னு சொல்ற மாதிரி!

இரண்டாமவர்: அதத்தாண்டா நாங்களும் சொல்றோம், ஒனக்கும் இலங்கை அரசருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. நீயும் முக்கிய குற்றவாளிடா.

நாரதர்: (நமுட்டுச் சிரிப்புடன்) மறுபடியும் தப்பா புரிஞ்சிண்டேளே! எங்க உயிர் எங்களுக்கே சொந்தமில்லை. நாங்க வெறும் பொம்மை. எங்கள ஆட்டுவிக்கிறது அந்தப் பரந்தாமன். யாருன்னு கேக்குறேளா, அவர்தான் க்ளோபல் பிசினஸ் என்டர்பிரைசஸ் முதலாளி. இலங்கைல உள்ள தொல்லைகள ஒழிச்சுட்டு, நாலு காசு பாக்கணும்னு நெனக்குற நல்ல மனுஷா.

முதலாமவர்: ஓகோ, வேற யாரு, யாரெல்லாம் ஒன் கம்பெனில இருக்காங்க? இந்திய அரசாங்கமுமா இருக்கு?

நாரதர்: பின்னே, அவா இல்லாமலா? சீனா, பாகிஸ்தான், ரசியா, இஸ்ரேல் இப்டி எல்லா நாட்டு அரசாங்கமும் சேந்துதான்னா இலங்கை அரசருக்கு உதவி பண்றா. டாட்டா, பிர்லா, அம்பானின்னு நாம் நாட்டு பெரிய மனுஷா எல்லாரும் இலங்கைல தொழில் பண்ணி முன்னேறனும்கறதுக்காகத்தான் இவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு.

இரண்டாமவர்: ச்சீ..வாய மூடுறா.. ஈழப் பெண்கள் தாலியறுத்துதான் நீங்க தொழில் பண்ணணுமா? (ஆவேசமாக கை ஓங்குகிறார்)

நாரதர்: இப்ப நீங்க ஏன் டென்ஷனாகுறேள்? ஃப்ரீயா விடுங்கோ… இப்ப என்ன ஆகிப் போச்சு, என்ன சாப்பிடறேள்? ஹாட்டா, கோல்டா சொல்லுங்கோ?

முதலாமவர்: இவனெல்லாம் திருந்துற ஜென்மமில்ல, நாலு சாத்து சாத்தினாத்தான் சரிப்படுவான்!

(கழுத்தை பிடித்து அடிக்க முனைகிறார்கள். இதற்குள் கூசாமி பேசியபடி உள்ளே வருகிறார்.)

கூசாமி: எக்ஸ்கியூஸ் மீ! இந்த கேஸ்ல நான் ஆஜராகலாமா?

(மூவரும் அடிப்பதை நிறுத்தி விடுகின்றனர்.)

மூன்றாமவர்: இவன் யார்ரா இவன்?

முதலாமவர்: இவனத் தெர்ல? இவன்தான்யா கூசாமி! சம்பந்தமில்லாத கேஸ்ல எல்லாம் வாண்ட்டடா வந்து ஆஜராவானே, அந்த லூசு!(கூசாமியை நோக்கி) யோவ், இங்க கேஸெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ வேற வீட்டப் பாரு!

கூசாமி: என்ன சொல்றேள் நீங்க? ஒரு national daily owner மேல violence பண்ணின்டுருக்கேள். a dispute is under progress-ன்னுனேன்.. ஒரு dispute-ல நான் பங்கெடுக்கக் கூடாதுன்னா, அப்றம் எனக்கு என்னதான் வேல இருக்கு? i am a Harvard professor you know…

இரண்டாமவர்: இவன் அடுத்த நாரதராச்சே, சரி நீங்க இந்த நாரதர கவனிங்க, நான் இந்த நாரதர கவனிக்குறேன். இவன் பேசுற தமிழுக்கே இவன நாலு சாத்து சாத்தணும்!(என்றவாறு கூசாமி சட்டையை பிடித்து அடிக்கத் துவங்குகிறார்)

கூசாமி: அய்யய்யோ, சட்டம் ஒழுங்கு குலைஞ்சு போச்சு, 356 pass பண்ணுங்கோ, மைனாரிட்டி ஆட்சியை கலைங்கோ, அய்யய்யோ!

முதலாமவர்: யோவ், ஒன் ஒருத்தன அடிச்சா சட்டம் ஒழுங்கு குலைஞ்சு போச்சுன்னு அர்த்தமா? அந்த வாயிலேயே போடு!

(போலிசார் திபுதிபுவென உள்ளே நுழைகின்றனர். உயர் அதிகாரி துணை அதிகாரிக்கு ஆணையிடுகிறார்)

காவல்துறை உயர் அதிகாரி: சார்ஜ்! ஒருத்தர் விடாம் அரஸ்ட் பண்ணுங்க! அரெஸ்ட் தெம் இமீடியட்லி!

காவல்துறை துணை அதிகாரி: (தயங்கியவாறு) நாள பின்ன பிரச்சினை ஆயிடாதே சார்?

காவல்துறை உயர் அதிகாரி: யோவ், அப்புறமா கோர்ட்ல மன்னிப்புக் கேட்டுக்கலாம்யா, இப்ப அடிச்சு நொறுக்கு!

காவல்துறை துணை அதிகாரி: ஒகே சார்!

(போலிசார் மூவரையும் அடித்து துவைக்கின்றனர். அவர்களை விலங்கிட்டு இழுத்துச் செல்கின்றனர்.)

முதலாமவர்: டேய் பொந்து எடிட்டர், நீ இதிலிருந்து தப்பிக்க முடியாதுடா!

இரண்டாமவர்: இன்னிக்கு தப்பிச்சாலும், ஒரு நாள் நீ மாட்டுவடா! நீ சொன்ன பொய்க்கெல்லாம், ஈழ மக்கள் இரத்ததுக்கெல்லாம் நீ பதில் சொல்லித்தாண்டா ஆகணும்!

(மூவரும் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.அவர்கள் முழக்கமிட்டவாறு செல்கின்றனர்.)

மூவரும்: வென்றதில்லை, வென்றதில்லை, இனவெறி ஆதிக்கம் வென்றதில்லை, வென்றதில்லை, வென்றதில்லை பொய்கள் என்றும் வென்றதில்லை! அடங்காது அடங்காது உரிமைத் தாகம் அடங்காது!

காவல்துறை உயர் அதிகாரி: கூசாமி சார கைத்தாங்கலா கூட்டிட்டு போங்க! (கூசாமி வணக்கம் சொல்லியவாறே போலிசார் தோள்கள் மீது கைபோட்டவாறு செல்கிறார்.) (நாரதரை நோக்கி) சார், அப்ப நான் உத்தரவு வாங்கிக்கட்டுமா?

நாரதர்: (சட்டையை சரி செய்தவாறு கைகுலுக்குகிறார்) ரொம்ப தாங்க்ஸ் சார். நம்ம நாட்ல வர வர டீசென்டனவால்லாம் நிம்மதியா இருக்கவே முடியல. தாங்க்யூ.

(காவல்துறை உயர் அதிகாரி வெளியே செல்கிறார். நாரதர் அறையில் தனியாக இருக்கிறார். கண்ணாடியை நோக்கி செல்கிறார்.தனியாகப் பேசத் துவங்குகிறார்)

நாரதர்: உண்மை, உண்மை, உண்மை..! அப்பப்பா! நான்சென்ஸ்! ம்… பச்சைத் தமிழர்கள்…அதான் கோவம் பொத்துண்டு வர்றது. நான் கூடத் தமிழன்தான், பச்சைத் தமிழன்.(“இல்லை, நீ பச்சோந்தித் தமிழன்” என முதலாமவர் குரல் கேட்கிறது. அதிர்ச்சியுற்று சுற்றும் முற்றும் தேடுகிறார். யாரும் இல்லையென சமாதானமாகி சிரிக்கிறார்.) ஆமாண்டா, பச்சோந்தித் தமிழன்தான்.. நான் கலர மாத்துவேன், கருத்த மாத்துவேன்,அளவ மாத்துவேன், விவரத்தை மாத்துவேன், அதயும் விவரமா மாத்துவேன்.. என்ன எவனும் அசைக்க முடியாது! நான் பத்திரிக்கை முதலாளி.. தொழிலாளிங்களோட கூட்டாளி.. ஆமா, நான் மார்க்சிஸ்டுனு நானே சொல்லல, மத்தவன் சொல்றான். இராக், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, எத்தியோப்பியா எல்லா நாட்டுத் தொழிலாளிங்களுக்கும் நான் குரல் கொடுப்பேன், (நமுட்டுச் சிரிப்புடன் சன்னமாக) இந்தியத் தொழிலாளிங்களத் தவிர… ஆமாண்டா, நான் கம்யூனிஸ்டுக்கு கம்யூனிஸ்ட், முதலாளிக்கு முதலாளி, பண்ணையாருக்கு பண்ணையார்! என்னால பகல இராத்திரியாக்க முடியும், இராத்திரியப் பகலாக்க முடியும்! அகம் பிரம்மாஸ்மி! நான் கடவுள், மகா விஷ்ணு, மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு!

(காட்சி உறைகிறது. நாரதர் காட்சியளிப்பது போல உறைந்து நிற்கிறார். செய்தித்தாள் விற்கும் சிறுவன் கூவியடி குறுக்கே ஓடுகிறான்.)

செய்தித்தாள் விற்கும் சிறுவன்: தீவிரவாதி அனுமன் கொல்லப்பட்டார்! தீவிரவாதி அனுமன் கொல்லப்பட்டார்! சீதாவை இலங்கை அரசர் மீட்டு விட்டார்! சீதாவை இலங்கை அரசர் மீட்டு விட்டார்! இலங்கையில் மாதம் மும்மாரி மழை பொழிகிறது! இலங்கையில் மாதம் மும்மாரி மழை பொழிகிறது!(கொஞ்சம் கொஞ்சமாக அழத் துவங்குகிறான்) மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது!மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது! மின்கம்பி வேலிகளுக்குள் இரத்தம் கசிகிறது!(மேடை நடுவே துவண்டு முழங்காலிடுகிறான். சிறிது மெளனத்திற்கு பின், பார்வையாளர்களை நோக்கி) அந்த இரத்தத்தை நீங்கள் உணர்கிறீர்களா? அந்த ஓலம் உங்களுக்கு கேட்கிறதா?

(காட்சி உறைகிறது.)





புதுதில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் திரு. சத்யா சாகர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத்தை தழுவி எழுதப்பட்டது.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen