Mittwoch, 23. Dezember 2009

சிறிலங்காவை இனப் படுகொலை அரசாக சட்டப்பேரவை அறிவிக்க வேண்டும்: தமிழ்நாட்டில் கோரிக்கை


ஈழத் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசை ‘இனப் படுகொலை’ அரசாக அறிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள 'மே 17 இயக்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், இதழாளர் அய்யநாதன் ஆகியோர், இலங்கையில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், அதனை மறைக்க இந்திய அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தினர்.





இலங்கை இனப் பிரச்சனை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் ஆகியன மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இராசா, இலங்கையில் இனப் படுகொலை நடந்து வருகிறது என்று கூறியபோது, ‘இனப் படுகொலை’ என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு மாநிலங்களவைத் தலைவர் கூறியதைச் சுட்டிக்காட்டிய திருமுருகன், இது இனப் படுகொலையை மறைக்கும் செயல் என்றும், 1983ஆம் ஆண்டு அங்கு இனக்கலவரம் நடந்து 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதனை தமிழினப் படுகொலை என்று அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி பிரகடனம் செய்ததைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழினப் படுகொலையை திட்டமிட்டுச் செய்துவரும் சிறிலங்கா அரசை இனப் படுகொலை அரசு என்று அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே, அதற்கு வலிமை சேரும் என்றும், அதன் மூலம் உலக நாடுகளிடையே சிறிலங்கா அரசிற்கு எதிராகவும், தமிழர்களுக்கு நியாயம் கிட்டவும் வழியேற்படும் என்றும் திருமுருகன் கூறினார்.

சிறிலங்க அரசின் இனப் படுகொலைப் போரை நிறுத்துமாறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசுக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

அவ்வாறு இருந்தும் சிறிலங்காவின் இனப் படுகொலையை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும், இந்நிலையை மாற்ற தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அதனைக் கொண்டு நாட்டின் அனைத்துக் கட்சிகளிடையேயும் சிறிலங்காவின் இனப் படுகொலையை விளக்கவும், அதன் மூலம் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வழியேற்படும் என்றும் அய்யநாதன் கூறினார்.

சிறிலங்க அரசை இனப் படுகொலை அரசாக அறிவிக்கும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றக் கோரி சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen